சேலம் டவுன் மற்றும் செவ்வாய்பேட்டை உள்பட பல போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த சப் - இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள் 45பேர் திடீரென நெல்லைக்கு மாற்றப்பட்டனர்.
இதனால் போலீசார் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மாற்றப்பட்ட அனைவரும் உடனே நெல்லைக்கு சென்று பணியில் சேர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவிட்டுள்ளார். ஏன் இவர்கள் அனைவரும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மற்ற போலீசாரும், பொதுமக்களும் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.
நில அபகரிப்பு வழக்கில் சேலம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தார். அப்போது அவர் திடீரென கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சேலம் டவுன் காவல்நிலையம், பழைய பஸ்நிலைய பகுதிகளில் சில தி.மு.கவினர் முதலமைச்சர் ஜெயலலிதாவை கண்டித்து கோஷம் போட்டனர். இதுபோல் அம்மாப்பேட்டையை சேர்ந்த 3பேர் முதலமைச்சர் ஜெயலலிதாவை கிண்டல் கேலிசெய்து ஆட்டம் போட்டனர்.
ஒரு வாலிபர் சேலை கட்டிக்கொண்டு நடனம் ஆடினார். இவரை மற்ற 2பேர் கட்டிப்பிடித்து கிண்டல் கேலி செய்தனர். இதை பார்த்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்து போலீசாரும் வேடிக்கை பார்த்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் புகார் தெரிவித்து இருந்தனர்.
இதன் பேரில்தான் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா போல் வேடம் போட்டு ஆட்டம் போட்ட சேலம் அம்மாப்பேட்டை தியாகி நடேசன் தெருவை சேர்ந்த அருள்மணி(வயது 40), அம்மாப்பேட்டையை சேர்ந்த சம்பத் (வயது 55), அம்மாப்பேட்டையை சேர்ந்த கேசவன்(வயது 45) ஆகியோரை சேலம் டவுன் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் தி.மு.கவினர். இவர்கள் மீது அனுமதி இல்லாமல் கூடியது, ஆபாசமாக திட்டியது, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இவர்களை போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
No comments:
Post a Comment