Friday, August 5, 2011

தேடப்படும் குற்றவாளியான டக்ளஸை கைது செய்யாதது ஏன்? - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.



தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதியான டக்ளஸ் தேவானந்தா இந்தியா வந்தபோது ஏன் கைது செய்யவில்லை என்று மத்திய அரசை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.

சென்னையில் கடந்த 1986ம் ஆண்டு தங்கியிருந்த டக்ளஸ், நவம்பர் 1ம் தேதி சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தின் போது நான்கு பேர் காயமடந்தனர். இதில் கைதான டக்ளஸ் பி்ன்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், 1988ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பத்து வயது சிறுவன் ஒருவனைக் கடத்திய டக்ளஸ் ரூ. 7 லட்சம் பணம் கேட்டுமிரட்டினார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார்.

பிறகு 1989ம் ஆண்டு அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் இலங்கைக்கு ஓடி விட்டார். இதையடுத்து அவரை சென்னை கோர்ட் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்தப் பின்னணியில் கடந்த ஆண்டு டெல்லி வந்த ராஜபக்சேவுடன் சேர்ந்து டக்ளஸும் இந்தியா வந்தார். அவருக்கு மத்திய அரசு ராஜ வரவேற்பு அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங், டக்ளஸை வரவேற்று கை குலுக்கி மகிழ்ச்சியுடன் பேசினார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

மேலும் தேடப்படும் குற்றவாளியுடன் எப்படி பிரதமர் இப்படி விருந்துபசாரம் செய்து பாராட்டிப் பேசலாம் என்று மீடியாக்கள் கேள்வி கேட்டன.

இந்த நிலையில், டக்ளஸை நாடு கடத்தக் கோரி தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டெல்லிக்கு வந்தபோது டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

No comments: