அமெரிக்காவைக் கதிகலங்க வைத்த செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடைபெறுவதற்கு 9 மாதங்களுக்கு முன்னரே, அதுபற்றிய உளவுத் தகவல் கிடைத்த விஷயம் வெளியாகி, மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த உளவுத் தகவல் பிரென்ச் உளவுத்துறை DGSEயிடமிருந்து கிடைத்திருந்தது.
இந்தத் தகவலை வெளியிட்டு பரபரப்பு ஒன்றைக் கிளப்பிவிட்டிருக்கின்றது, பிரான்சில் இருந்து வெளியாகும் Le Monde பத்திரிகை.
பிரான்சின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் இந்த ரகசியத்தைத் தமக்குத் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறது அப் பத்திரிகை. அந்த அதிகாரி மூலம் பிரென்ச் உளவுத் துறையின் அதி ரகசிய பைல் ஒன்றையும் பெற்றிருக்கிறது Le Monde.
பிரென்ச் உளவுத்துறையில் அதி ரகசிய பைலில் 328 பக்கங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைலில் உள்ள குறிப்புகள்தான், பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்களின் ஆதாரம்.
இதில் ஒரு குறிப்பு, ஜனவரி 5ம் தேதி 2001ம் ஆண்டு தேதியிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அதன் தலைப்பு – “அல்-கய்தா இயக்கம், அமெரிக்காவுக்கு எதிரான விமானக் கடத்தல் ஒன்றைத் திட்டமிடுகிறது”
குறிப்புக்களில் கூறப்பட்டுள்ள சில விபரங்கள் துல்லியமானவை.
உதாரணமாக, அமெரிக்காவுக்கு எதிரான விமானக் கடத்தலுக்கு, அமெரிக்க விமான நிறுவனங்களில் விமானங்களை கடத்துவதே அல்-கய்தாவின் திட்டம் என்ற குறிப்பு, பிரென்ச் உளவுத்துறையால் எழுதப்பட்டிருக்கின்றது. குறிப்பு எமுதப்பட்டு 8 மாதங்களின்பின் நடைபெற்றதும், அதுதான்.
அத்துடன், எந்தெந்த விமான நிறுவனங்களின் விமானங்கள் கடத்தப்படலாம் என்பதும் பிரென்ச் உளவுக் குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இருக்கின்றன.
இவ்வளவு துல்லியமான சில குறிப்புக்கள் இருந்தும், வேறு சில குறிப்புக்களில் கோட்டை விட்டிருக்கிறது பிரென்ச் உளவுத்துறை DGSE.
அமெரிக்காவின் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களைக் கடத்தப் போகின்றார்கள் என்ற குறிப்பு அதில் இல்லை. மாறாக, அதற்குத் தலைகீழான குறிப்பு ஒன்று உள்ளது.
அதன்படி, ஐரோப்பிய விமான நிலையங்களில் இருந்து, முக்கியமாக ஜேர்மன் விமான நிலையங்களில் இருந்து, அமெரிக்கா நோக்கிப் புறப்படும் விமானங்களைத்தான் கடத்தல்காரர்கள் குறிவைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல, ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள், ஒரே நேரத்தில் கடத்தப்படுவதுதான் திட்டம் என்ற தகவலும் இந்தக் குறிப்புகளில் இல்லை.
Le Monde பத்திரிகை, பிரென்ச் உளவுத்துறையின் ரகசிய பைலிலுள்ள குறிப்பு ஒன்றை முழுமையாகப் பிரசுரித்துள்ளது. அதிலுள்ள விபரங்களைப் பாருங்கள்-
செப். 11 தாக்குதல் நடைபெற்று சில நிமிடங்களில்...
2000ம் ஆண்டின் ஆரம்பத்தில், ஆப்கானிஸ்தானிலுள்ள காபுல் நகரில் பின்லேடன், ரகசியக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருக்கிறார். கூட்டத்தில், தலிபான் தலைவர்கள் சிலரும், செஸ்னியா நாட்டு தலைவர்கள் சிலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்க விமானங்களைக் கடத்தி, அமெரிக்க இலக்குகள்மீது மோதுவது பற்றி அந்தக் கூட்டத்தில்தான் முதன் முதலில், பிரஸ்தாபித்திருக்கிறார் பின்லேடன்.
“ஜேர்மனியிலுள்ள பிராங்பேர்ட் விமானநிலையத்திலிருந்து புறப்படும் அமெரிக்க விமானம் ஒன்றை அல் – கய்தா கடத்த எற்பாடுகள் முடிந்துவிட்டன” என்று பின்லேடன் கூறியதாகத் தெரிவிக்கிறது அந்தக் குறிப்பு.
இந்தத் தகவல்கள் பிரென்ச் உளவுத்துறைக்கு எப்படிக் கிடைத்தன?
உஸ்பெக்கிஸ்தான் உளவுத்துறையிடம் இருந்து தங்களுக்கு இத்தகவல்கள் கிடைத்ததாக பிரென்ச் உளவுத்துறையின் குறிப்புக்கள் சொல்கின்றன.
பிரென்ச் உளவுத்துறையின் குறிப்புக்களில், 5 விமான நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், கன்டினென்டல், யுனைட்டட் ஏயார்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன், ஐந்தாவதாக யு.எஸ். ஏரோ என்ற நிறுவனத்தின் பெயரும் குறிக்கப்பட்டிருக்கிறது.
இது எதைக் குறிக்கின்றது என்பது சரியாகத் தெரியவில்லை. காரணம் யு.எஸ். ஏரோ என்ற பெயரில் அமெரிக்காவில் சர்வதேச விமான நிறுவனம் எதுவும் கிடையாது.
இப்படியொரு தகவல் பிரென்ச் உளவுத் துறையிடம் இருந்து கிடைத்ததை அமெரிக்கா ஒப்புக் கொள்கிறதா?
ஆம். ஆச்சரியகரமாக அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது. சி.ஐ.ஏ.யின் பேச்சாளர்களில் ஒருவரான ஜோர்ஜ் லிட்டெல், பிரென்ச் உளவுத்துறை இந்தக் குறிப்புக்களை செப்.11ம் தேதி தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பே சி.ஐ.ஏ.யிடம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.
ஜோர்ஜ் லிட்டெல், “அவர்களுக்குக் கிடைத்தது போன்ற சில உளவுத்தகவல்கள் எங்களுக்கும் கிடைத்திருந்தன. ஆனால், தாக்குதல் நடைபெறப்போகும் தேதி அல்லது இடம் பற்றி அவர்களிடமும் தகவல் இல்லை. எங்களிடமும் தகவல் இருக்கவில்லை” என்றும் கூறியிருக்கிறார்.
பிரென்ச் உளவுத்துறை DGSEயின் முன்னாள் பாதுகாப்புத்துறைத் தலைவர் அலைன் சொவுட், “உளவுத்துறைகளைச் சேர்ந்த அனைவருக்குமே இப்படி ஒரு விவகாரம் திட்டமிடப்படுகின்றது என்பது தெரியும். அது ஒரு விமானக் கடத்தல் என்பதும் தெரியும். அல் – கய்தாவால் நடாத்தப்படவுள்ளது என்பதும் தெரியும்” என்று கூறியுள்ளார்.
“எமது அமெரிக்க உளவுத்துறை நண்பர்களுக்கும் தெரியும், ஐரோப்பிய உளவுத்துறை நண்பர்களுக்கும் தெரியும். எந்த நிமிடத்திலும் விமானக் கடத்தல் நடைபெறலாம் என்று, டைம் பாம் ஒன்றின் மேல் உட்கார்ந்திருப்பது போல இருந்தோம். ஆனால் கடத்தப்படப்போவது அமெரிக்காவில் இருந்து புறப்படப் போகும விமானங்கள் என்று எங்களில் யாரும் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியதாக எழுதியுள்ளது Le Monde பத்திரிகை.
சரி. இந்தத் தகவல்கள் உளவுத்துறைக்கு எப்படித் தெரியவந்தன? அதைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.
அப்துல் ரஷீட் என்பவர் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த, ஆப்கான் ஆயுத வியாபாரி. தலிபான்களுக்கு ஆயுத சப்ளை செய்தவரும் அவர்தான். அதேநேரத்தில் உஸ்பெக் உளவுத்துறையுடனும் தொடர்புகளை வைத்திருந்திருக்கிறார்.
தலிபான்களின் தொடர்பு மூலமாக தனது ஆட்களை அல்-காய்தாவின் முகாம்களுக்குள் ஊடுருவ விட்டிருந்த அப்துல் ரஷீட், அல் – கய்தா முகாம்களில் இருந்துதான் விமானக்கடத்தல் பற்றிய தகவலைப் பெற்றிருக்கிறார்.
அதை அவர் உஸ்பெக் உளவுத்துறைக்குத் தெரிவிக்க, அவர்கள் பிரென்ச் உளவுத்துறைக்குத் தெரிவித்திருக்கிறார்கள். (தகவல் கொடுத்த அப்துல் ரஷீட் இப்போது ஆப்கான் ராணுவத்தின் தளபதிகளில் ஒருவர்!)
இப்படியொரு தகவல் கிடைத்தும், அமெரிக்க உளவுத்துறை அதில் முழுமையாகக் கவனம் செலுத்தாமல் விட்டதற்கும் ஒரு காரணம் உண்டு. அது என்னவென்றால் அந்தக் காலகட்டத்தில் அல்-காய்தா அமைப்பு சில தந்திரங்களைச் செய்துகொண்டிருந்தது. மேலை நாட்டு உளவுத்துறைகளை திசை திருப்ப, அல்-காய்தாவே வேண்டுமென்று சில தகவல்களை லீக் செய்துகொண்டிருந்தது.
அப்படி லீக் செய்யப்பட்ட எந்தத் தகவலும், நிஜமான தகவல்கள் கிடையாது.
செப். 11 தாக்குதலுக்குமுன் கடைசியாக அல்-காய்தாவால் லீக் செய்யப்பட்ட ‘போலி’ உளவுத் தகவல், பிரான்ஸை மையப்படுத்தியே அவிழ்த்து விடப்பட்டிருந்தது.
இதோ, இந்தத் திட்டத்தையும் பாருங்கள்:
பின்லேடனின் நெருங்கிய சகாவான ஜமால் பெகால் என்பவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்தபோது, அவரிடம் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் திட்டம் ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்தத் திட்டம், பாரிஸிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு தற்கொலைப் போராளிகளை அனுப்பி, அந்த கட்டடத்தையே தகர்க்கும் திட்டம்.
அவரிடம் இருந்த திட்டம் மிகத் துல்லியமாக இருந்தது. அமெரிக்க தூதரகம் பற்றி அவர் வைத்திருந்த விபரங்கள்கூட நிஜமானவையாகவே இருந்தன. இதுதான் அல்-காய்தாவின் நிஜமான தாக்குதலாக இருக்கப் போகின்றது என சி.ஐ.ஏ. நம்பும் அளவுக்கு, திட்டம் முழுவதும் பக்காவாக இருந்தது.
இந்த விபரங்கள் சி.ஐ.ஏ.க்கு தெரியவந்தது எப்போது தெரியுமா? செப். 11 ம் திகதிய தாக்குதலுக்கு, சில தினங்களுக்கு முன்பு!
அமெரிக்க மற்றும் பிரென்ச் உளவுத்துறைகள் பாரிஸிலுள்ள அமெரிக்கத் தூதரக தற்கொலைத் தாக்குதல் பற்றிக் கவனம் செலுத்திக் கொண்டிருக்க -
செப்டம்பர் 11ல், அமெரிக்காவில் தாக்குதல் நடைபெற்றது.
-Le Monde பத்திரிகையின் குறிப்புகளுடன், ரிஷி.
“விறுவிறுப்பு.காம்”
1 comment:
CLICK AND SEE VIDEO
>>>
நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்கள். அப்பட்டமான உண்மைகள். 9/11 இரட்டைகோபுர குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது ?. <<<
.
Post a Comment