Monday, July 25, 2011

1993லிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்ய வேண்டும் : சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா அதிரடி வாதம்.



2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை நான் எடுக்கவில்லை. கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே நானும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தேன். இதனால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா வாதாடினார்.

இந்த வழக்கில் ராசா உள்பட 14 பேர் கைதாகி திகார் சிறையில் உள்ளனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் ராசா மீது சிபிஐ மோசடி, கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு வாதம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. சிபிஐ வழக்கறிஞர் யு.யு. லலித் நேற்று முன்தினம் வாதாடுகையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவருமே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று கூறி தனது வாதத்தை முடித்தார்.

இதையடுத்து இன்று முதல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம் தொடங்கியது.

அப்போது ராசா தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து தானே வாடினார். தனக்காக வாதாட அவர் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளவில்லை. சட்டப்படிப்பில் முதுநிலை பட்டம் பெற்ற அவர் தனது சார்பில் தானே வாதாடினார்.

அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை நான் எடுக்கவில்லை. கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே நானும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தேன்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கறையை ஏலம் விட வேண்டாம் என்ற முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. அதையே நானும் தொடர்ந்து பின்பற்றினேன். இதனால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

நான் தவறு செய்திருப்பதாகச் சொன்னால் 1993ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்றார்.

No comments: