Monday, July 25, 2011

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் ரூ.11 ஆயிரம் கோடி கறுப்பு பணம் ; வேறு நாட்டு வங்கிகளுக்கு மாற்றம்.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் ரூ.11 ஆயிரம் கோடி கறுப்பு பணம்;     பாதுகாப்புக்காக வேறு நாட்டு வங்கிகளுக்கு மாற்றம்

இந்திய அரசியல் தலைவர்கள் பலர் ஊழல் மூலம் சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளனர். இதேபோல் இந்திய தொழில் அதிபர்கள் பலர் வரிஏய்ப்பு செய்த பணத்தை அங்குள்ள வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். அந்த கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பாபா ராம்தேவ், அன்னாஹசாரே போன்ற சமூக சேவகர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க கோரி டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய பாபா ராம்தேவை போலீசார் பலவந்தமாக விரட்டி அடித்தனர். இதனால் டெல்லி மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சுவிஸ் வங்கிகளில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் கறுப்பு பணம் இருப்பது தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சுவிஸ் நேஷனல் வங்கியில் இந்தியர்கள் அதிக அளவில் கறுப்பு பணம் பதுக்கி வைத்து உள்ளனர். அந்த வங்கியின் செய்தி தொடர்பாளர் வால்டர்மீர் கூறும்போது, இந்தியர்கள் 2.1 பில்லியன் டாலர்களை சேமிப்பு கணக்கில் போட்டுள்ளனர்.

சுவிட்சர் லாந்தில் உள்ள யு.பி.எஸ். மற்றும் கிரடிட்சூசி ஆகிய வங்கிகளில்தான் அதிக பணம் டெபாசிட் செய்துள்ளனர். இந்திய பத்திரிகைகளில் இந்தியர்கள் பல லட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருப்பதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இது துளி அளவு கூட உண்மை இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக எங்களது வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பண டெபாசிட் குறைந்து விட்டது என்றார்.

இந்தியாவில் கறுப்பு பணத்தை மீட்கும் போராட்டம் வெடித்திருப்பதால் சுவிஸ் வங்கிகள் பெரும் கவலை அடைந்துள்ளன. இந்நாள் வரை இந்திய அரசியல் தலைவர்கள் ஊழல் மூலம் சம்பாதித்த பணம் முழுவதையும் அங்குள்ள வங்கிகளில் டெபாசிட் செய்தனர். அவற்றை அந்த வங்கிகள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய தொழிற்சாலைகள் அமைக்க வட்டிக்கு பணம் வழங்கி வந்தது. இதன்மூலம் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதித்து வந்தன.

தற்போது இந்தியர்கள் பணம் குறைந்து வருவதால் அந்த வங்கிகள் கலக்கம் அடைந்துள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு இந்தியர்கள் 3 பில்லியன் டாலர்களை சுவிஸ் வங்கியில் செலுத்தினர். 2009-ல் அது 2.7 பில்லியன் டாலர்களாக குறைந்தது. 2010-ல் 2.5 பில்லியன் டாலராக (ரூ.11,000 கோடி) குறைந்துள்ளது.

இந்தியர்களின் சுவிஸ் வங்கி கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டால் தாங்கள் பணம் பறிபோய் விடுமே என்று இங்குள்ள தலைவர்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் அவசர அவசரமாக சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை எடுத்து சிங்கப்பூர், மொரீசியஸ். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள். இந்திய தலைவர்கள் கறுப்பு பணத்தை டெபாசிட் செய்ய மொரீசியஸ் நாடு மிகவும் ஆர்வம் காட்டுகிறது.

இந்த கறுப்பு பணத்தை கொண்டு அந்நாட்டில் பல்வேறு தொழில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி முன்னேற முடியும் என்று அந்நாட்டு தலைவர்கள் கருதுகிறார்கள். இதனால் இந்திய தலைவர்களுக்கு சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகள் தொடர்ந்து வலைவிரித்து வருகிறார்கள்.

No comments: