Sunday, May 8, 2011

கம்யூனிஸ்டுகள் மீது கருணாநிதி தாக்கு.

கம்யூனிஸ்டுகள் மீது கருணாநிதி தாக்கு

முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-

கேள்வி:- ``மம்தாவுக்கு வால்பிடிக்கும் ஊடகங்கள்'' என்று தலைப்பிட்டு, நேற்று (6.5.2011) `தீக்கதிர்' நாளேட்டில் வெளிவந்த தலையங்கத்தைப் பார்த்தீர்களா?

பதில்:- பார்த்தேன். பார்த்தவுடன் எனது நினைவுக்கு வந்ததெல்லாம்; ``தனக்கு வந்தால்தான் தெரியும், தலைவலியும், காய்ச்சலும்'' என்ற பழமொழிதான்.

அந்தத் தலையங்கத்தில், ``மேற்கு வங்கத்திலுள்ள பெரும்பாலான ஊடகங்கள், இடது முன்னணிக்கு எதிராக நாள்தோறும் விஷம் கக்கி வருகின்றன.

பெரு முதலாளிகளின் ஊது குழலாகத் திகழும் இந்த ஊடகங்கள், செய்தி என்ற போர்வையில், நாள்தோறும் மக்களைக் குழப்பும் வகையிலும், திரித்தும், கலகம் விளைவிக்கும் வகையிலும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன'' என்று ஊடகங்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்கள்.

எப்போதுமே கம்யூனிஸ்ட்டுகள், தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு அளவுகோலையும், மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வேறொரு அளவு கோலையும் கடைப்பிடிப்பார்கள். கழகத்தின்மீது ஒரு துரும்பு விழுந்தால்கூட, துள்ளிக் குதித்துக் கொண்டு, அதனைத் தூணாக்கி, மக்கள் மத்தியில் கழகத்திற்கும், கழகத்தின் தலைமைக்கும், கெட்ட பெயர் உண்டாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஒருசில ஏடுகளும், ஊடகங்களும் ஈடுபட்டு வருவதை நாம் கண்டிக்கும்போது; அதனைக் கண்டும் காணாமலும்- சில சமயங்களில் நம் மீதே பாய்ந்து பிராண்டிக் கொண்டும் இருப்பவர்கள் தான்; இங்கிருக்கும் கம்யூனிஸ்ட்டுகள்.

நம்மை யார் தாக்கி எழுதினாலும், அது எவ்வளவு கடைந்தெடுத்த பொய்யாக இருந்தாலும், அது பத்திரிக்கை தர்மத்திற்கு முழுக்க முழுக்க எதிரானதாக இருந்தாலும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு வெல்லப் பாகாய் இனிக்கும்; ஆனால், அவர்களை யாராவது தாக்கி எழுதினால், அது வேம்பாய்க் கசக்கும்.

சில ஏடுகளும், ஊடகங்களும்- `நடுநிலை' என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு, செய்யும் சேட்டை விமர்சனங்களும், எழுதும் கட்டுரைகளும், கற்பனையாகவும் - செயற்கையாகவும் உற்பத்தி செய்து பரப்பும் விஷமச் செய்திகளும், தாங்கொணாதவை. சில ஏடுகளும், ஊடகங்களும்- ``புலன் விசாரணை'' என்ற பெயரில், வெளியிடும் செய்திகள் அக்கிரமமானவை; அவை `பிராசிகியூட்டர்' வேடம் அணிந்துகொண்டு, குற்றப்பத்திரிக்கை வாசிப்பதையும்;

`நீதிபதி' வேடம் போட்டுக் கொண்டு, தீர்ப்பு எழுதுவதையும்; அவற்றால் படிப்பவர் களின் ரசனை பெரும் பாதிப்புக்குள்ளாகி, தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு, பண்பாடும், நாகரிகமும் படுபாதாளம் நோக்கிச் செல்வதையும்; இதையெல்லாம் ஜனநாயக மரபுகள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் என்பதையும்; நடுநிலை யாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு.

எனினும், நமது ஜனநாயகம் முதிர்ச்சி அடைந்து விட்டதாகச் சொல்லிவிட முடியாது; இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இருக்கிறது. நமது மக்களின் கல்வி அறிவும், விழிப்புணர்ச்சியும் சராசரியாகவே இருக்கிறது. நமது பொருளாதாரமும் தொடர்ந்து மேடுபள்ளங்களைத்தான் சந்தித்து வருகிறது. ஜனநாயகப் பாதையில் நாம் கடந்து வந்திருக்கும் தொலைவோ மிகக்குறைவு; கடக்க வேண்டிய தொலைவோ மிக அதிகம்.

இந்த நிலையில், நமது நாட்டை அனைத்து முனைகளிலும் கைகொடுத்துத் தூக்கி விடுவதற்கும், மக்களைச் சரியான திசையில் வழிகாட்டுவதற்கும், வளர்ந்துவரும் ஜனநாயகத்தை மேலும் வளர்த்தெடுத்து வளப்படுத்து வதற்கும்; ஏடுகளும், ஊடகங்களும் தமது கடமையினையும், பொறுப்பினையும் உணர்ந்து நெறி தவறாமல் நடக்க வேண்டுமே தவிர; கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்து, ஜனநாயகத்தைக் காட்டுக்கு அனுப்புவதற்கு, அவை கருவிகளாகப் பயன்பட்டு விடக் கூடாது.

கேள்வி:- மத்திய அரசு இயற்றிய வன உரிமைகள் சட்டத்தின்படி, பழங்குடி யினர்க்கு கழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று அடிக்கடி கம்யூனிஸ்ட்டு ஏடுகள் சுட்டிக்காட்டுகின்றனவே?


பதில்:- அப்படி அவர்கள் சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை. பழங்குடியினர் மற்றும் மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006 என்பது; 29.12.2006 முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. பன்னெடுங்காலமாக வனங்களில் வாழ்ந்து வருவோரது உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால்; இந்தச்சட்டத்தின்படி, மாநில அரசுகள், பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப் போர்க்கு வன நில உரிமைகளை அங்கீகரித்து, வரையறை செய்து, தீர்வு காணவேண்டும்.

தமிழக அரசு, மத்திய அரசின் இந்தச் சட்டத்தைச்செயல்படுத்திட, தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு; ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் தலைமையிலும் மாவட்ட அளவிலான குழு; ஒவ்வொரு வருவாய்க் கோட்ட அலுவலரின் தலைமையிலும் உட்கோட்டக் குழு; என்று மூன்று நிலைகளில் குழுக்களை அமைத்துள்ளது.

மத்திய அரசின் இந்தச்சட்டத்தின்படி, 13.12.2005- க்கு முன்பிருந்தே வனநிலத்தை அனுபவித்து வரும் பழங்குடியினர்; வனங்களில் மூன்று தலைமுறையாக, அதாவது 75 ஆண்டுகளுக்கு குடியிருந்து அனுபவித்து வருவோர்; நில உரிமைப்பட்டா பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். மொத்தம் 21 ஆயிரத்து 781 கோரிக்கைகள் வரப்பெற்றன. இவை அனைத்தும் கிராம சபை, உட்கோட்டக் குழு, மாவட்ட அளவிலான குழு ஆகியவற்றால் பரிசீலனை செய்யப்பட்டு; 3 ஆயிரத்து 259 உரிமைப் பட்டாக்கள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன.

பட்டா வழங்குவதற்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினைப் பெற வேண்டுமென்று, உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதால், அந்த உத்தரவினைப் பெறுவதற்கும், ஏற்கனவே இந்தச் சட்டத்தின்கீழ் பட்டா வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடையாணை வழங்கியுள்ளதால், அந்தத் தடையாணையை விலக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை முடிவுக்கு வந்ததும், வன உரிமைப்பட்டாக்கள் வழங்கப்படும்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், மாநில கண்காணிப்புக் குழுவினை முறையாக நடத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகிறார். எனவே, வன உரிமைகள் சட்டத்தைக் கழக அரசு கண்டு கொள்ளவில்லை என்பது, தவறான கூற்றாகும்.

கேள்வி:- மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறதே?

பதில்:- உலகத்தின் மக்கள் தொகை அடுத்த நூற்றாண்டில் 1000 கோடியைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக மக்கள் தொகை 930 கோடியை எட்டும் என்றும்; 2100-ம் ஆண்டு 1000 கோடியைத் தாண்டும் என்றும் கணித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் 50 ஆண்டுகளில், அதாவது 2060-ம் ஆண்டில், 170 கோடியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில், 2030-ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும்; பெரும்பாலான தண்ணீர், உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுவதால், தண்ணீர் பற்றாக்குறை உணவுப் பற்றாக்குறையிலும் எதிரொலிக்கும் என்றும்; அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும் எதிர்பாராத அளவிற்கு உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும் என்றும்; சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை குறித்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிக்கையையும்; தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை குறித்து, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையையும்; ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பெரும் கவலை ஏற்படுகிறது. இந்த கணிப்புகளையெல்லாம் மத்திய திட்டக்குழு முன்னெச்சரிக்கையாகக் கருத்தில் எடுத்துக் கொண்டு, உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு, ``வருமுன் காப்பதே அறிவு'' என்பதை நிரூபித்துக் காட்டும் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது, உண்பதற்கு ஒரு வாயோடு மட்டும் பிறக்கவில்லை; உழைப்பதற்கு இரண்டு கரங்களோடும் பிறக்கிறான்'' என்ற வாதமும்; வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்'' என்ற வாதமும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே! மக்கள் தொகை பெருகப்பெருக, உழைப்பதற்கான கரங்களும் பெருகுகின்றன. உழைக்கும் கரங்கள் அனைத்தும், உற்பத்தியைப் பெருக்க வேண்டும் - குறிப்பாக உணவு உற்பத்தியையும், அடிப்படைத் தேவைகளுக்கான உற்பத்தியையும் பெருக்க வேண்டும். அப்படிப் பெருக்குவதற்குத் தேவையான அளவு, வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

கேள்வி:- கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்தநாளை மத்திய அரசு கொண்டாடுவது குறித்து . . . ?

பதில்:- தமிழ்க் கீதாஞ்சலி'' என்னும் நூலுக்கு, 29.11.1971 அன்று நான் வழங்கிய அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன் :-

வங்கம் தந்த கவியரசர் தாகூர், கிழக்குக்கும், மேற்குக்கும் ஒரு பெரும் இணைப்புப் பாலம் உருவாக்கிய கவிதை மன்னர்; எல்லோரும் காணும் உலகில், எல்லோராலும் காண முடியாத - காணாத, பல்வேறு நுட்பங்களையும், உண்மை களையும் கண்டுணர்த்திய கவிதைச் செல்வர். அவர் இந்து- முஸ்லிம் ஒற்றுமையில் இறுதி வரை உறுதியாக இருந்தவர்.

`கீதாஞ்சலி' எனும் கவிதை நூலை முதலில் தனது தாய்மொழியான வங்காள மொழியில் இயற்றி; தாய்மொழியின் மீது தான் கொண்டிருந்த பற்றையும், மதிப்பையும் உலகறியச் செய்து; பின்னர் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, `நோபல் பரிசு' பெற்றவர். தாகூர், எனது இதயங்கவர்ந்த கவிஞர்களுள் ஒருவர். அவர் இயற்றிய, ``ஜனகணமன'' எனத் தொடங்கும் தேசிய கீதத்தில், `திராவிட' என்னும் கருத்தியலை இணைத்ததற்காகவும்;

அவரது `கீதாஞ்சலி'யில், `எங்கே நெஞ்சம் அஞ்சுதல் இல்லையோ சிங்கம் எனத்தலை நிமிர்ந்து நிற்குமோ; அறிவின் விடுதலை செறிந்தே உள்ளதோ; உண்மை என்ற மண்ணுள் முளைத்து செஞ்சொற் பூக்கள் எங்கே மலருமோ' - போன்ற `கீதாஞ்சலி' பாடல்களுக்காகவும்; அவரை நான் என்றும் மறவேன்''. அவரது 150-வது பிறந்த நாளை, மத்திய அரசு கொண்டாடுவது, போற்றி, வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாகும்.

இவ்வாறு அறிக்கையில் முதல்- அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments: