Sunday, May 8, 2011

பிளாஸ்டிக் பொருள்களின் ஆதிக்கத்தால் மூங்கில் கூடை பின்னும் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம், பாவூர்சத்திரம், செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பல பகுதிகளில் கூடை, பெட்டி, சேர் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றன. இவை மதுரை, கோவில்பட்டி, கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

முன்பு வீடுகளின் பல்வேறு தேவைகளுக்குப் பயன்பட்டு வந்த மூங்கில் கூடை இப்போது காய்கனி சந்தைகளில் தக்காளி, பழவகைகள் கொண்டு செல்ல மட்டுமே பயன்படுகின்றன. இதனால் மூங்கில் கூடை விற்பனை காய்கனி உற்பத்தி அதிகமான நேரங்களில் மட்டுமே விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மற்ற நேரங்களில் விற்பனை மந்தமாகவே உள்ளது. ÷இத்தொழிலுக்கான மூலப் பொருள்களை தொழிலாளர்கள் மலையடிவாரப் பகுதிகளில் இருந்து வாங்குகின்றனர். பின்னர் அவற்றைத் தேவையான அளவுக்கு வெட்டி கூடை, சேர்கள் உள்ளிட்டப் பொருள்கள் தயாரிக்கின்றனர்.

இந்நிலையில், சில ஆண்டுகளாக இத் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பிளாஸ்டிக் பொருள்களே. பிளாஸ்டிக் சேர், கூடைகள் போன்றவை பல்வேறு வண்ணங்களில் கண்களைக் கவரும்வகையில் கிடைப்பதால் அவற்றுடன் போட்டியிட மூங்கில் பொருள்களால் முடிவதில்லை. இதுகுறித்து கீழப்பாவூரைச் சேர்ந்த மூங்கில் கூடை பின்னும் தொழிலாளி ஒருவர் கூறியதாவது:

இப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூங்கில் கூடை உள்ளிட்ட பொருள்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுவந்தோம். இதற்கான மூங்கிலை செங்கோட்டை பகுதியிலிருந்து வாங்குவோம்.

மூங்கில் கூடைகள் போன்றவற்றை அதிகமாக வெளி மாநிலங்களுக்குத்தான் ஏற்றுமதி செய்கிறோம். காரணம், தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் ஆதிக்கத்தால் மூங்கில் பொருள்கள் விற்பனை மந்தமாக உள்ளது.

பெரிய மூங்கில் கூடை ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்கப்படுகிறது. ஒரு நாளில் ஒருவர் அதிகபட்சம் 2 கூடைகள்தான் முடைய முடியும். எனவே, கூலி கட்டுப்படியாவதில்லை.

மேலும், இப்போது மூங்கில் கட்டின் விலையும் அதிகரித்துள்ளதால் கூடையின் விலையையும் உயர்த்த வேண்டியுள்ளது. இதனால் விற்பனையும் குறைந்துவிட்டது. தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொழிலாளர்கள் பலர் மாற்றுத்தொழிலுக்குச் சென்று விட்டனர் என்றார் அவர்.

No comments: