Wednesday, December 14, 2011

சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை ; அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? : வைரமுத்து ஆவேசம்.



முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு சாதகமாக நிரந்தர தீர்வு ஏற்படாவிட்டால், படைப்பாளிகள் களத்தில் இறங்குவோம்'' என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை:

"முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது.

கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்?

உடைந்த சோவியத் யூனியன்.

என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன.

அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.

'முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்'

எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம். பச்சைத் தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். 'முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்' என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம்.

தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு’’ என்று அந்த அறிக்கையில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

1 comment:

Deepak Karthik said...

vairamuthuku nigar vairamuthu than :)
enna va solirikar paarunga !
http://deepakkarthikspeaks.blogspot.com/