Friday, July 29, 2011

திமுகவின் மாணவர் ஸ்டிரைக் பிசுபிசுத்தது - வழக்கம்போல வகுப்புகள் நடந்தன.


திமுக அழைப்பு விடுத்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று பிசுபிசுத்தது. பெரிய அளவில் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் முன்பு போராட்டம் நடத்திய திமுகவினர் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி இன்று வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. 'மாணவச் செல்வங்கள்' வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்தார்.

இந்த போராட்டத்தில் தாங்களும் இணைவதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி இன்று காலை மாநிலம் முழுவதும் திமுகவினர் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் குழுமி போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தை முறியடிக்கும், திமுகவினர் மாணவர்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி போராட்டத்தில் கலந்து கொள்ள வைப்பதைத் தடுக்கும் வகையிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகள், கல்லூரிகள் முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதுரையில் சொதப்பலான திமுக ஆர்ப்பாட்டம்:

மதுரையில் முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் தபால் நிலையம் அருகில் திரண்டு சமச்சீர் கல்விக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். 15 நிமிடங்களிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர்.

இந்தப போராட்டத்தில் மதுரை மேயர், துணைமேயர், திமுக மாவட்ட செயலாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இது திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லையில் பூங்கோதை கைது

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நெல்லை டவுன், செங்கோட்டை, சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாளையங்கோட்டை போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கலந்து கொண்டார். பள்ளியை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற அவர் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கூட்டம் அதிகம் இல்லாததால் பூங்கோதை உள்ளிட்டோர் சாவகாசமாக நடந்து போலீஸார் ஏற்பாடு செய்திருந்த பஸ்சில் ஏறிச் சென்றனர்.

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின:

இந்தப் போராட்டத்தால் பள்ளிகளில் வகுப்புகள் எந்த அளவிலும் பாதிக்கப்படவில்லை.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. மாணவர்களும், ஆசிரியர்களும் வழக்கம்போல் பள்ளிக்கு வருகை தந்தனர்.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் திமுகவினர் சிலர் பள்ளிகளின் முன்பாக நின்று பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளை தடுத்து ரகளை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக போலீஸார் தடுத்து அப்புறப்படுத்தினர்.

போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி பஸ்கள் ஓடின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின. பள்ளி வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. பள்ளிகளுக்கு முன்பாக போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

பள்ளிகளின் முன்பாக சமச்சீர் கல்வியினை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திமுகவினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் வெளியே விடப்பட்டனர்.

முன்னதாக இப்போராட்டம் சமச்சீர்க் கல்வி திட்டம் தொடர்பான பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது என்று தமிழக அரசு கண்டித்திருந்தது. மேலும், இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பிறப்பித்த உத்தரவில்,

தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டும். காலை 11 மணிக்குள் வருகைப் பதிவு நிலவரம் குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். அவர்கள் அந்தத் தகவல்களைச் சென்னைக்குத் தெரிவிக்க வேண்டும்.இதுகுறித்து எல்லா பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே இருப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர்கள் வெளியில் இருந்தால் பள்ளிக்கூட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டால் தக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடையில் வெளியில் அனுமதிக்கக் கூடாது. மதிய உணவை காரணம் காட்டி மாணவர்கள் வெளியேற அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை அரசு உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

திமுகவைக் கண்டித்து நாளை மெட்ரிக் பள்ளிகள் போராட்டம்:

இதற்கிடையே திமுகவின் போராட்ட அறிவிப்புக்கு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் கிறிஸ்துராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டம் தேவையற்றது, இதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அனைத்துப் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை திறந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழக நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் சார்பில் திமுகவின் போராட்டத்தைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: