Friday, July 29, 2011

என்ஜினீயரிங் படிப்பு : கிராமப்புற மாணவர்கள் ஆர்வத்துடன் சேருகிறார்கள் ; கலந்தாய்வில் பாதி இடங்களை நிரப்பினர்.

என்ஜினீயரிங் படிப்பு: கிராமப்புற மாணவர்கள் ஆர்வத்துடன் சேருகிறார்கள்; கலந்தாய்வில் பாதி இடங்களை நிரப்பினர்

தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

கடந்த வாரம் வரை கலந்தாய்வு மூலம் 37,506 பேருக்கு ஒதுக்கீட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் கிராமப்புற மாணவர்கள் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்களில் இருந்து வந்த 16,158 மாணவ-மாணவிகள் பல் வேறு பாடப்பிரிவுகளை ஆர்வத்துடன் தேர்வுசெய்து கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கிராம பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர்கள்.

கிராமப்புறங்களில் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 4524 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரும், 4420 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரும் ஆவர். கிராமப்புறங்களில் வந்து சேர்ந்த மாணவர்களை போன்று நகராட்சி பகுதிகளில் 7769 பேரும், மாநகராட்சி பகுதியில் இருந்து 6741 பேரும், பேரூராட்சி பகுதியில் இருந்து 5647 பேரும் பி.இ. படிப்பில் சேர்ந்துள்ளனர். டவுன்ஷிப் பகுதியில் இருந்து மிகக்குறைந்த அளவில் 1191 மாணவ-மாணவிகள் ஒதுக்கீட்டு கடிதம் பெற்றுள்ளனர்.

மொத்தம் விண்ணப்பதாரர்களில் பாதிக்கு மேல் கிராமப்புற மாணவர்கள் இடம் பெற்றனர். என்ஜினீயரிங் படிப்பில் சேர 68 ஆயிரம் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும், 34 ஆயிரம் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், 18 ஆயிரம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் விண்ணப்பித்துள்ளனர்.

ஓ.சி. பிர்வை சேர்ந்த 9500 மாணவர்களும், கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள். கிராமப்புற மாணவர்கள், நகர்புறங்களை நோக்கி உயர்கல்விக்காக வரும் நிலை அதிகரித்து வருகிறது. என்ஜினீயரிங் கல்லூரிகள் நிறைய புதிதாக தொடங்கப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் எளிதாக சேருகிறார்கள்.

No comments: