ஏற்கெனவே இந்த வழக்கில் பிரதமர் மீது ஆ.ராசா குற்றசாட்டியுள்ள நிலையில், இப்போது பெகுராவும் பிரதமரைக் குற்றம் சாட்டியுள்ளார். 2ஜி அலைக்கற்றை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், பெகுரா தரப்பு வழக்குரைஞர் அமன் லேகி கூறியுள்ளது:
முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கு பிரதமர்தான் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அலைக்கற்றை ஒதுக்கீடு கோருவதற்கான தேதியை முன்னதாகவே முடித்துக் கொள்ளவும் பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்டோர் இதில் அனுமதி அளித்துள்ள நிலையில், அரசு அதிகாரியான பெகுரா, இந்த கொள்கை விஷயத்தில் தலையிட முடியாது.
மத்திய அமைச்சரவை கூறியபடிதான் செயல்பட முடியும். தவறு இருப்பதாகத் தோன்றினால் பிரதமர்தான் தலையிட்டிருக்க வேண்டும் என்று பெகுரா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவரது தரப்பு வழக்குரைஞர் அமன் லேகி இது தொடர்பாக நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சுமார் 3 மணி நேரம் வாதாடினார். அரசு உருவாக்கிய கொள்கையின்படிதான் பெகுரா நடந்து கொண்டார்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டு கொள்கையை அவர் உருவாக்கவில்லை. இந்த வழக்கில் சாட்சியாக வேண்டுமானால் பெகுராவைச் சேர்க்கலாம். குற்றவாளியாக சேர்த்திருக்கக் கூடாது என்றார் அவர்.
மேலும் 2007ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரமும், சுப்பா ராவும் கலந்துகொண்ட தாகவும், இந்த கூட்டத்தில் தான் 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல் உரிமங்களை ஒதுக்குவதற்கான முடிவு
எடுக்கப்பட்டதாகவும் பெகுரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னதாக இந்த ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மீதும், மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீதும் ஆ.ராசா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் மீது குற்றச்சாட்டு-கபில்சிபல் மறுப்பு:
இந் நிலையில் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் நிதித்துறைச் செயலாளராக இருந்த டி.சுப்பா ராவ் ஆகியோர் மீது தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் மறுத்துள்ளார்.
இது குறித்து கபில் சிபல் கூறுகையில், பெகுரா தெரிவித்தபடி ப.சிதம்பரமும், சுப்பாராவும் கலந்துகொண்டதாக கூறப்படும் 2007ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கூட்டம் நடைபெற்றதற்கான ஆதாரம் ஏதுமில்லை.
2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொலைத்தொடர்புத்துறை செயலாளராக பணியில் சேர்ந்த பெகுரா, 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெற்ற கூட்டம் பற்றி குறிப்பிடுவது வியப்பளிப்பதாக உள்ளது. மேலும் அவர் கூறிய கருத்துக்கு ஆதரவாக ஆவணம் எதையும் காட்டவில்லை என்றார்.
No comments:
Post a Comment