தர்மபுரி மாவட்டம் கல்வி வளர்ச்சியில் தமிழக அளவில் பின்தங்கிய நிலையில் உள்ள மாவட்டகளில் ஒன்றாக உள்ளது. இருந்தபோதிலும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் இடையே போட்டித் தேர்வுகளை எழுதும் ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பலர் இதனை கருத்தில் கொண்டு தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட அனைத்து விதமான போட்டிதேர்வுகளுக்கும் பயன்படும் அனைத்து விதமான புத்தகங்களும் அடங்கிய இலவசமையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்தொடங்கப்பட்டது.
சில ஆயிரம் புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட இந்த மையம் தற்போது சுமார் 40 ஆயிரம் புத்தகங்களுடன் விரிவடைந்த மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கடந்த ஆண்டில் மட்டும் போட்டி தேர்வுகளுக்கு பயன்படும் 4 ஆயிரம் புத்தங்கள் புதிதாக வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தை பயன்படுத்த நூலக உறுப்பினராக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் இந்த மையத்திற்கு வந்து அங்குள்ள புத்தகங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீப காலமாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த மையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் டிபன் பாக்ஸ்களில் மதிய உணவை எடுத்து சாப்பிட்டு விட்டு நாள் முழுவதும் இந்த மையத்திலேயே இருந்து போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறார்கள்.
இதுபற்றி மாவட்ட நூலக அதிகாரி விஜயலட்சுமி கூறியதாவது:-
தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 247 புத்தகங்கள் உள்ளன. 20 ஆயிரத்து 942 நூலக உறுப்பினர்கள் உள்ளனர். இங்குள்ள சிவில் சர்வீசஸ் மையம் சுமார் 40 ஆயிரம் புத்தகங்களுடன் செயல்பட்டு வருகிறது. காலை முதல் மாலை வரை தொடர்ந்து செயல்படும் இந்த மையத்தில் போட்டி தேர்வு களுக்கு தயார் செய்பவர்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் அமைக்கப்பட் டுள்ள சிவில் சர்வீசஸ் தேர்வு மையத்தில் குரூப்-1 குரூப்-2 உள்ளிட்ட போட்டி தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை போட்டி தேர்வுக்கு தயார் செய்யும் மாணவ - மாணவிகள் இளைஞர்களுக்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளது.
நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் பார்கோடிங் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தால் நூலக சேவை மற்றும் பராமரிப்பு எளிதாகும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment