Friday, June 3, 2011

நான் ஒரு அப்பாவி - தயாநிதி மாறன்.


தொலைபேசி இணைப்புகளை நான் தவறாகப் பயன்படுத்தவில்லை. நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை. என்னையும், எனது குடும்பத்தையும் களங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் பிஎஸ்என்எல் இணைப்புகளை சன் டிவிக்காக துஷ்பிரயோகமாக பயன்படுத்தியது ஆகிய சிக்கல்களில் மாட்டியுள்ளார் தயாநிதி மாறன்.

அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், தயாநிதி மாறன் தானாகவே விலக வேண்டும் என்றும் அதிமுக, பாஜக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை கோரி வருகின்றன.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தயாநிதி மாறனை செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது அவர் கூறுகையில்,

தீண்டத்தகாதவனாக இருந்தேன்

என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் வீண் பழி சுமத்துவதற்காக பொய்யான குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி இருக்கிறார்கள்.

2008-ம் ஆண்டு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்த பிறகு, அப்போது விசாரணை நடத்தி இருக்க முடியும். அந்த சமயத்தில் நான் அரசியலில் தீண்டத்தகாதவனாக இருந்தேன். நான் அமைச்சர் பதவியில் இல்லாத அந்த சமயத்தில், யாரும் என்னுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை.

யாருக்கும் உதவியதில்லை

யாருக்கும் நான் ஒரு போதும் எந்த உதவியும் செய்தது கிடையாது, எந்த சலுகையும் பெற்றது கிடையாது. அரசியல் வட்டாரத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டு இருந்தேன். நான் ஏதாவது தவறு செய்து இருப்பதாக கருதினால் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்.

குடும்ப நேர்மையை சந்தேகிப்பதா?

எனது குடும்ப தொழில் சம்பந்தமாக எனது சென்னை இல்லத்துக்கு 300-க்கும் அதிகமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது ஆகும். இது தொடர்பாக எழுப்பும் கேள்விகள் மூலம் எனது நேர்மையை மட்டுமின்றி எனது குடும்பம் மற்றும் எனது கட்சியின் நேர்மையையும் பற்றி சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

எனது இல்லத்துக்கு ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் இருந்தது. எனக்குள்ள குறிப்பிட்ட தொகையை காட்டிலும் குறைவான தொகைக்கு தான் நான் பேசினேன். இதை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து எனக்கு வந்துள்ள கடிதம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எனது போட் கிளப் இல்லத்தில் எத்தனை தொலைபேசி இணைப்புகள் உள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளருக்கு நான் கடிதம் எழுதினேன். மந்திரி என்ற முறையில் எனது இல்லத்துக்கு ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் (எண் 24375100) வழங்கப்பட்டு இருந்தது.

நான் ஒரு அப்பாவி

நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் எந்த தண்டனையையும் ஏற்க தயாராக இருக்கிறேன். யாருடைய தயவையும் நான் எதிர்பார்க்கவில்லை. என் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். நான் ஒரு அப்பாவி. என்னையும் எனது நேர்மையையும் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையும் எனக்கு வழங்கப்பட வேண்டும் என்றார் தயாநிதி மாறன்.

1 comment:

Ponchandar said...

‎1) A.Raja Caught & Bowled - CBI ---176,000 Crores
2) K.Kanimozhi Caught & Bowled --CBI ---214 Crores
3) Dhayanidhi Maran--Run Out (CBI/Media)- 3rd umpire Referral-----440 Crores
4) Kalanidhi Maran (batting)
5) Azhagiri (next)