Friday, June 3, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான் - ஜோஷி.


இன்று பெரும் பரபரப்பாக பேசப்படும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டவரே, முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன்தான். இந்த விவகாரத்தில் முதலில் அவரைத்தான் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதை பொதுக் கணக்குக் கமிட்டி அறிக்கையில் நான் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் கமிட்டித் தலைவர் முரளி மனோகர் ஜோஷி.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரத்தை, அமைச்சர்கள் குழுவிடமிருந்து தொலைத் தொடர்புத்துறைக்கு மாற்றினார். அவருக்கு இந்த ஊழலில் உள்ள பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதை பொதுக் கணக்குக் கமிட்டி அறிக்கையிலேயே நான் பரிந்துரைத்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஜோஷி.

2004ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2007 மே மாதம் வரை தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சாரக பதவி வகித்தார்.

2006 முதல் 08 ஆண்டு காலத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கிடைக்கவில்லை. ஆனால் அந்த நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனம் வாங்கியவுடன், உடனடியாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கிடைத்தது. மாறன்தான் இதன் பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாக்ஸிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டிவியில் ரூ. 800 கோடியை முதலீடு செய்ததைத் தொடர்ந்தே ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கிடைத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புகாரை தயாநிதி மாறன் மறுத்துள்ளார்.

No comments: