Friday, June 3, 2011

10 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் : தயாநிதிமாறன் நோட்டீஸ்.


தன்னைப் பற்றி அவதூறாக கட்டுரை வெளியிட்ட நாளிதழ்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தயாநிதி மாறன் சார்பாக வக்கீல் ரவீந்திரன் அனுப்பியுள்ள நோட்டீசில்,

’’ தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி?’ என்ற தலைப்பில் ஜூன் 2ம் தேதி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளீர்கள்.

இதற்கு என் கட்சிக்காரர் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க பொய்யானது. அடிப்படை ஆதாரமற்றது. எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் ஒரே நோக்கத்துடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதியுள்ள எஸ்.குருமூர்த்தி, எனது கட்சிக்காரருக்கு விரோதமாக உள்நோக்கத்துடன் செயல்படும் நபர்களில் முக்கியமானவர் ஆவார்.

இந்தக் கட்டுரையில் எனது கட்சிக்காரர் அவரது வீட்டில் 323 இணைப்புகள் கொண்ட பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பகத்தை ஏற்படுத்தி அவரது இல்லத்திலிருந்து ரகசிய கேபிள் வழியாக சன் நெட்வொர்க் அலுவலகத்துக்கு இணைப்பு கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த இணைப்பகத்தை சன் டிவி தனது ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இணைப்பகம் தினகரன் நாளிதழ் அலுவலகத்துடனும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஆதாரமற்றவை, உள்நோக்கம் கொண்டவை. எனது கட்சிகாரரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கற்பனையாக புனையப்பட்டவை.

இதேபோன்ற கட்டுரை கடந்த 2009ம் ஆண்டு தினமணி பத்திரிகையில் வெளியானது. அப்போது எனது கட்சிக்காரர் (தயாநிதி மாறன்) கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்தபோது போட்கிளப் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு ஒரேயொரு இணைப்புதான் கொடுக்கப்பட்டது என பிஎஸ்என்எல் விளக்கம் அளித்தது.

இணைப்பு கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து 2009 மார்ச் வரை 4 லட்சத்து 50 ஆயிரம் அழைப்புகளை பயன்படுத்திக் கொள்ள அமைச்சருக்கு தகுதி இருந்தும், எனது கட்சிக்காரர் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 698 அழைப்புகளைத்தான் பயன்படுத்தினார் என பிஎஸ்என்எல் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த இணைப்புக்கான பில்லிங் தகவல்கள் மாதந்தோறும் நாடாளுமன்ற தொடர்பு அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி பொது மேலாளர் வி.மீனலோசினி கடந்த 6-5-2009 அன்று எழுதிய கடிதத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை மேற்படி கடிதம் தெளிவாக நிரூபிக்கிறது.

இந்த தொலைபேசி இணைப்பு குறித்து தவறான செய்தி வெளியிட்டதற்காக கடந்த 25-4-2009 அன்று தினமணி பத்திரிகைக்கு எனது கட்சிக்காரர் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோன்ற குற்றச்சாட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடந்த 2009ம் ஆண்டு அமைந்தகரை பொதுக்கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டு இருந்தார். இதற்காக அவர் மீது சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதா ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவதூறான செய்தி வெளியிட்டதற்காக தொடரப்பட்ட வழக்கிலும், அதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கிலும் தீர்ப்பு வரும் வரை காத்திராமல் மீண்டும் அதே பொய்யான தகவல்களை கட்டுரையாக வெளியிடுவது நீதித்துறையின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்வதுடன் மலிவான விளம்பரத்துக்காகவும் எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காகவும்தான் என்று தெரிகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை எனது கட்சிக்காரர் திட்டவட்டமாக மறுக்கிறார். எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒரே நோக்கத்துடன் தவறான தகவல்களை கட்டுரையில் வெளியிட்டிருக்கிறீர்கள். தவறான கட்டுரை வெளியிட்டதற்கு ஆசிரியர், அச்சிடுபவர், வெளியீட்டாளர் மற்றும் கட்டுரையாளர் அனைவரும் சமமான பொறுப்பாவீர்கள்.

இந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கட்டுரைக்கு அளித்த அதே முக்கியத்துவத்துடன் அந்த மன்னிப்பை உங்கள் பத்திரிகையில் பிரதானமாக வெளியிட வேண்டும். மேலும் நஷ்டஈடாக ரூ. 10 கோடி தரவேண்டும். தவறினால் உங்கள் அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றுகூறப்பட்டுள்ளது.

No comments: