Friday, June 24, 2011

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இந்திய மாலுமிகள் டெல்லி திரும்பினார்கள்: பாகிஸ்தான் உதவிக்கு இந்தியா நன்றி.

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இந்திய மாலுமிகள் டெல்லி திரும்பினார்கள்: பாகிஸ்தான் உதவிக்கு இந்தியா நன்றி

எகிப்து நாட்டுக்கு சொந்தமான எம்.வி. சூயஸ் என்ற சரக்கு கப்பல், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, சோமாலியா கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அதில் இருந்த 6 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 22 மாலுமிகளும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர்.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடல் கொள்ளையர்கள் கேட்ட பணயத் தொகையை தர, கப்பல் உரிமையாளர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாலுமிகள் 22 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானின் பி.என்.எஸ். சுல்பிகர் கப்பல் மூலம், நேற்று கராச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி சோகைல் இஜாஸ்கான் தலைமையில் அங்கு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்திய மாலுமிகள் 6 பேரும், டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று காலையில் அவர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர்களை, அதிகாரிகளும், மாலுமிகளின் குடும்பத்தினரும் வரவேற்றனர். மாலுமிகள் குடும்பத்தினர், அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். 10 மாதங்கள் கடல் கொள்ளையர் பிடியில் இருந்ததால், மாலுமிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது.

மாலுமிகளை பத்திரமாக மீட்க உதவி புரிந்ததற்காக, பாகிஸ்தானுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா கூறுகையில், இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளை மீட்டுக்கொண்டு வர தகுந்த நேரத்தில் பாகிஸ்தான் உதவி செய்தது. இதற்காக அந்நாட்டுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments: