Tuesday, December 20, 2011

சசிகலா வெளியேற்றப்பட்டதில் சோவின் பங்கு.



சசிகலா வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கு கடந்த சில வாரங்களாகவே ஜெயலலிதாவுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. அவையெல்லாம் அதிகாரம் மற்றும் சதி தொடர்பான காரணங்கள். அரசியல் ரீதியான காரணங்கள் அல்ல. ஆனால், அரசியல் ரீதியாக சசிகலாவை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் ஒன்று கடந்த வார இறுதியில்தான் அவருக்கு தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.

“தேசிய அரசியலில் நீங்கள் இறங்கும் யோசனை இருந்தால், சசிகலாவை இப்போதாவது கழட்டி விடுவதைத் தவிர வேறு வழி கிடையாது” என்ற ரீதியில் இருந்தது அந்த அட்வைஸ்.

கடந்த வார இறுதியில் போயஸ் கார்டனில் நடைபெற்ற ஒரு சந்திப்புதான் சசிகலா வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கான அரசியல் பக்கத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெளிவாகக் காட்டியது. முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தவர் பத்திரிகையாளரும், சில அரசியல் விஷயங்களில் ஜெயலலிதாவின் ஆலோசகருமான சோ.

அதன் பின்னரே சசிகலாவை வெளியேற்றும் இறுதி முடிவை அரசியல் ரீதியாக எடுப்பதற்கு ஜெயலலிதா தயாரானார்.

சோ இந்தச் சந்திப்புக்கு செல்வதற்குமுன், சில பின்னணி சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.

சென்னையில் தலைமுறைகளாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, தேசிய அளவில் அறியப்பட்ட ஒரு நிறுவனத்திடமே சசிகலா தரப்பு இரண்டு மாதங்களுக்குமுன் ஒரு டீல் பேச முயன்றது. அவர்களது பரம்பரை வர்த்தகத்தை இனியும் தமிழகத்தில் தொடர்வது என்றால், அவர்களது நிறுவனத்தின் ஆபரேஷனல் சப்சிடரியாக இயங்கும் மற்றொரு நிறுவனத்தை தமக்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்பதே டீலின் சாராம்சம்.

பெரிய நிறுவனம் இந்த மிரட்டலுக்கெல்லாம் பணியத் தயாராக இல்லை. ஆனால், குறிப்பிட்ட பெரிய நிறுவனத்தின் இளைய தலைமுறை தலைமையால் இந்த அழுத்தத்தை சரியாக டீல் பண்ணவும் முடியவில்லை. நிறுவனத்தின் இளைய தலைமுறை, அவர்களின் லீகல் விவகாரங்களைக் கவனிக்கும் மற்றொரு பாரம்பரியம் மிக்க சட்ட நிறுவனத்திடம் இது தொடர்பாக ஆலோசனை கேட்டார்.

அந்த சட்ட நிறுவனம் சென்னையில் உள்ள வேறு பெரிய நிறுவனங்களுக்கும் -இந்திய சினிமா இசை வர்த்தகத்தில் கால்பதித்துள்ள வெளிநாட்டு நிறுவனம் உட்பட- லீகல் கன்சல்டேஷன் செய்யும் குரூப். அவர்களிடம் ஏற்கனவே இதே போன்ற மிரட்டல் தொடர்பாக வேறு நிறுவனங்களிடமிருந்தும் ஆலோசனைகள் கோரப்பட்டிருந்தன. எல்லாமே இம்முறை அ.தி.மு.க. அரசு அமைந்தபின் வந்த மிரட்டல்கள்தான்!

இந்த விபரங்கள், கடைசியாக ஆலோசனைக்கு வந்த நிறுவனத்திடம் சொல்லப்பட, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மற்றைய நிறுவனங்களின் தலைமைகளுடன் இது தொடர்பாக கலந்து பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டது. சட்ட நிறுவனத்தில் இருந்தே மற்றைய நிறுவனங்களுக்கு போன் செய்யப்பட்டு இது தொடர்பாக பேசப்பட்டது.

நவம்பர் மாத இறுதியில், சென்னையின் முக்கிய தொழிலதிபர்கள் சிலர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு சென்னையில் அமைந்துள்ள கிளப் ஒன்றில் நடைபெற்றது. இரண்டாவது சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விஷயத்தை தமிழக முதல்வரிடம் கொண்டுசெல்ல லாபி குரூப் ஒன்று உருவாகியது.

இதுவரைக்கும் சரி. ஆனால், பூனைக்கு யார் மணி கட்டுவது? இதில் சிக்கல் ஏற்படுத்தும் பார்ட்டி, சசிகலா குரூப் என்பதால், தற்போது சென்னையில் பெரியளவில் வர்த்தகம் நடந்து கொண்டுள்ள தொழிலதிபர்கள் தயங்கினார்கள். விஷயம் சசிகலா காதுக்கு போனால், தமது நிறுவனங்களுக்கு தேவையில்லாத சிக்கல் வந்துகேரும் என்ற பயம் அவர்களுக்கு.

இந்தளவுக்கு டெவலப்மென்ட் நடந்த பின்னர், நாம் முதலில் குறிப்பிட்ட சட்ட நிறுவனம் கொடுத்த அட்வைஸ்தான், சோவை தொடர்பு கொள்ளலாமே என்பது. விஷயம் சரியானதாக இருந்தால், அதை தைரியமாக ஜெயலலிதா வரை கொண்டுசெல்ல சரியான நபர் அவர்தான் என முடிவாகியது. தொழிலதிபர்களில் லாபி குரூப் சோவுடன் பேசியது. தம்மிடமிருந்த ஆதாரங்கள் அனைத்தையும் காட்டினார்கள்.

அதன்பின் சோ, ஜெயலலிதாவை தொடர்புகொண்டு சந்திப்புக்கு நேரம் கேட்டார். கடந்த வார இறுதியில் சந்திப்பு நடந்தது.

இதற்கிடையே சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பா.ஜ.க. தலைவர் ஒருவரும் ஜெயலலிதா தொடர்பாக சில விஷயங்களை சோவுடன் விவாதித்திருந்தார். ஜெயலலிதா தேசிய அரசியலுக்குள் வருவது தொடர்பாகவும், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டு தொடர்பாகவும் அப்போது பேசப்பட்டது. அந்த விஷயங்களை ஜெயலலிதாவரை கொண்டு செல்லும் பொறுப்பும் சோவிடம் பா.ஜ.க. தலைவரால் கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வார இறுதியில் ஜெயலலிதாவைச் சந்தித்த சோ, அவரைச் சுற்றி நடக்கும் சசிகலா குரூப் விவகாரங்களை ஜெயலலிதாவுக்கு விளக்கமாகக் கூறியபோது, ஜெயலலிதாவுக்கு ஆச்சரியம் கலந்த கோபம் ஏற்பட்டது. ஆச்சரியத்துக்கு காரணம், இவை எதுவுமே அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

“எம்.ஜி.ஆர். காலத்துக்குப்பின் இம்முறை உங்களை அமோகமாக வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். இதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லையா? இன்னமும் ஒன்றரை வருடங்களில் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படியொரு வெற்றி கிடைத்தால், தேசிய அரசியலில் நீங்கள் எங்கே போக முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா? அவற்றையெல்லாம், உங்களைச் சுற்றி இருப்பவர்களால் கெடுத்துக் கொள்ளப் போகிறீர்களா?” என்று இறுதியில் சோ கேட்டாராம்.

“நான் கடுமையான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் என்கிறீர்கள் அப்படித்தானே” என்று ஜெயலலிதா இறுகிய முகத்துடன் கேட்டாராம்.

அதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை சோ கூறியபோது, ஜெயலலிதா மரியாதை நிமித்தம் அவரை வணங்கி, “வெளியேற்ற வேண்டியவர்கள் இன்னமும் ஒரு வாரத்துக்குள் வெளியேற்றப்படுவார்கள்” என்றாராம்.

நன்றி - விறுவிறுப்பு.காம்.

1 comment:

jeevagiridamblogspot.com said...

யார் யாரோ எப்படி எல்லாமோ முயன்று முடிவில் பூனைக்கு மணி கட்டி விட்டார்கள் சோவின் மூலம் என்பதை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்...