Thursday, January 5, 2012

தூத்துக்குடியில் கொல்லப்பட்ட மயக்க மருந்து டாக்டர் சேதுலட்சுமி, ஆபரேஷன் செய்தது சரியா ?


மகேஷ், மனைவி நித்யா. ------------------------- டாக்டர் சேதுலட்சுமி.

ஆட்டோ டிரைவரால் வெட்டிக் கொல்லப்பட்ட பெண் டாக்டர் சேதுலட்சுமி வெறும் மயக்க மருந்து நிபுணர் தான்.

ஆனால் அவர் ஒரு கர்ப்பிணிக்கு ஆபரேஷன் செய்துள்ளார். இது தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகேஷின் மனைவி நித்யா (26). 6 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீர் என்று வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை டாக்டர் சேதுலட்சுமியின் சுபம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நித்யாவை பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்துவிட்டதாகவும் அதை உடனே அபரேஷன் செய்து வெளியே எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி ஆபரேஷனும் செய்து குழந்தையை எடு்ததுள்ளார்.

அப்போது நித்யாவின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து மகேஷ் அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் நித்யா வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷே டாக்டர் சேதுலட்சுமியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட டாக்டர் வெறும் மயக்க மருந்து நிபுணர் என்றும், ஆபரேஷன் செய்யும் அதிகாரம் இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது. அவர் மகப்பேறு டாக்டரும் கிடையாது, அறுவை சிகிச்சை செய்யும் அதிகாரமும் கிடையாது இருப்பினும் அவர் ஒரு கர்ப்பிணிக்கு ஆபரேஷன் செய்துள்ளார் என்று ஒரு பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டாக்டர் சேதுலட்சுமியின் கவனக் குறைவு மற்றும் பணத்தாசையால் தான் நித்யா இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து நித்யாவின் மாமியார் கனகலட்சுமி கூறுகையில், ரூ.10,000 டெபாசிட் தொகை கட்டினால் மட்டுமே நித்யாவைப் பார்ப்பேன் என்று சேதுலட்சுமி பிடிவாதமாகத் தெரிவித்தார். சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரம் காக்க வைத்தார். மகேஷ் வந்து பணத்தை கட்டிய பிறகே சிகிச்சை அளித்தார் என்றார்.

இது குறித்து மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், 25 வாரமேயான குழந்தையை வெளியே எடுக்கும் ஆபரேஷனை ஐசியுவில் வைத்து செய்திருக்க வேண்டும். ஒரு மகப்பேறு மருத்துவர் தான் அந்த ஆபரேஷனை செய்திருக்க வேண்டும் தவிர ஒரு மயக்க மருந்து நிபுணர் செய்திருக்கக் கூடாது என்றார்.

சேதுலட்சுமி அந்த நோயாளியை உடனே வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியிருக்க வேண்டுமே தவிர அவராக ஆபரேஷன் செய்திருக்கக் கூடாது என்று மற்றொரு மருத்துவர் தெரிவித்தார்.

No comments: