Thursday, January 5, 2012

நடுரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்கள் ஜெயிலில் அடைப்பு.

தூத்துக்குடியில் நடுரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்கள் ஜெயிலில் அடைப்பு

தூத்துக்குடியில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் குரூஸ்பர்னாந்து சிலைக்கு கிழக்கே மெயின் ரோட்டில் வெளிநாட்டை சேர்ந்த 3 பேர் மது அருந்தி விட்டு, ரோட்டில் நடனம் ஆடினர். போதை தலைக்கு ஏறியதும் அவர் 3 பேரும் அந்த வழியே நடந்து சென்ற பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கை கொடுத்தும், அவர்களுக்கு முத்தம் கொடுத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

இது குறித்து கேட்டால் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததாக கூறினர். அவர்களின் இந்த முறையற்ற செயலினால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள், அந்த 3 பேரையும் தாக்கினர். தர்ம அடிவிழ தொடங்கியதும், 3 வெளிநாட்டினரில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனிஸ்லாஷ் பாண்டி, வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்கள் பிடியில் இருந்த வெளிநாட்டினர் 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த ஞான் டக்ளஸ் மகன்கள் ரோஸ் பிராஞ்சிஸ் (வயது 48), ஜான் பிராஞ்சிஸ் (47) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பொது இடத்தில் அசிங்கமாக பேசி அருவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாக அவர்கள் இருவர் மீதும் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் பின்னர் அவர்கள் இருவரும் தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ராணி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். வெளிநாட்டினர் 2 பேருக்கும் தலா ரூ.1500 அபராதம், கட்ட தவறினால் ஒரு வாரம் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். ஆனால் அவர்கள் இருவரும் அபராதத்தை முழுமையாக செலுத்தாததால் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

No comments: