Thursday, December 15, 2011

வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்பத் தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா !



முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக அணை பாதுகாப்பற்றது என்று கேரள அரசு பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

இந்த அணை விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் சிறப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசுகையில்,

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை தொடர்பாக, கேரள அரசு அம்மாநில மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வரும் சூழ்நிலையில், கேரள அரசின் உண்மையற்ற பிரச்சாரத்தின் அடிப்படையில், தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை நாம் அனைவரும் ஒன்றுபட்டு தெரிவிக்கும் வகையில் இன்று இந்த சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் பாதுகாப்பான அணை என்பதை முதற்கண் தெரிவித்துக் கொண்டு அது குறித்த சில விவரங்களை எடுத்துக் கூற விரும்புகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் 1886லிருந்து 1895 வரையிலான ஆண்டுகளில், சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லில் கட்டப்பட்டதாகும். பொதுவாகவே, புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்படும் அணைகள் நீர் அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தவை. எனவே தான், புவி ஈர்ப்பு அடிப்படையில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை இன்றளவும் உறுதியாகவும், வலிமை மிக்கதாகவும் விளங்குகிறது.

பெரியாறு திட்டத்தின் கீழ், சென்னை மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பும் வகையில் திருவாங்கூர் மகாராஜாவுக்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே 1.1.1886 முதல் 999 ஆண்டுகளுக்கான பெரியாறு குத்தகை உடன்படிக்கை, 29.10.1886 அன்று ஏற்பட்டது.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு, 5 ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில், சுமார் 8,000 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. இந்த அணையின் நீர் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சுமார் 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந் நிலையில், 29.5.1970 அன்று கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே இரண்டு துணை ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதாவது, 1) 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குத்தகை வாடகை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், ஒரு ஏக்கருக்கான, ஆண்டு குத்தகை வாடகையை 5 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்துதல், மற்றும் மீன்பிடி உரிமையை கேரளாவிற்கு விட்டுக் கொடுத்தல் ஆகியவை அடங்கிய ஓர் ஒப்பந்தமும்,

2) மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப கட்டணம் செலுத்துவதன் அடிப்படையில், புனல் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள தமிழ்நாட்டை அனுமதிப்பது என்கிற மற்றொரு ஒப்பந்தமும் ஏற்பட்டன.

இந்த இரண்டு ஒப்பந்தங்களும், 1886ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அசல் உடன்படிக்கையின் உரிமையாளர் என்ற முறையில் ஏற்படுத்தப்பட்டன.

இது போன்ற அணைகள் வலுப்படுத்தப்பட்டதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உலக அளவில் உள்ளன. 1911ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தில் கட்டப்பட்ட ரூஸ்வெல்ட் அணை வலுப்படுத்தப்பட்டு, அதனுடைய கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. 1905ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்ட ஜோக்ஸ் அணை வலுப்படுத்தப்பட்டு 1952ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. இதே போன்று, இங்கிலாந்து நாட்டில் உள்ள மேல் கிளன்டோவல் என்ற புவி ஈர்ப்பு விசை கொண்ட அணையும் வலுப்படுத்தப்பட்டது.

இதே போன்று, முல்லைப் பெரியாறு அணையிலும், மத்திய நீர் ஆணையத் தலைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில், 1980 முதல் 1994 வரை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பழைய அணையில், அணையின் முன் மற்றும் பின் பக்க பகுதிகள் சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கற்கள், அதாவது, stone masonry with lime surkhi mortar கொண்டு கட்டப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், அணையின் மையப் பகுதி சுண்ணாம்பு சுர்க்கி திண்காரையால், அதாவது, lime surkhi concrete-ஆல் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில், எவ்வாறு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறுவது எனது கடமை என்றே கருதுகிறேன்.

குறுகிய கால திட்டமாக, அணையின் எடையை அதிகரிக்கும் பொருட்டு, 21 அடி அகலத்திற்கு, மூன்று அடி பருமன் கொண்ட ஆர்.சி.சி. கட்டுமானப் பணி அணையின் முழு நீளத்திற்கு அதன் மேல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, அணையின் எடை ஒரு மீட்டருக்கு 35 டன் அதிகரித்துள்ளது. அதாவது, அதன் கட்டமைப்புடன் மொத்தம் 12,000 டன் எடை கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. நடுத்தர கால நடவடிக்கையாக, இறுக்கு விசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில், அணையின் அடித்தளத்துடன் எஃகு கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளன. அணையின் முன் பகுதியிலிருந்து 5 அடி தொலைவில், அணையின் மேற்பரப்பிலிருந்து, அடித்தளப் பாறையில் 30 அடி வரை, 9 அடி இடைவெளியில், 4 அங்குலம் குறுக்களவில், துளைகள் அணையின் முழு நீளத்திற்கும் போடப்பட்டுள்ளன.

இந்த துளைகளுக்குள், 7 மி.மீ. பருமன் கொண்ட மிக வலுவான 34 எஃகு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. அஸ்திவாரத்தில் உள்ள கருங்கல் பாறைகளுடன், இந்த கம்பிகள் உறுதியாக பொருத்தப்பட்டுள்ளன. முதலில் 20 அடி ஆழத்திற்கு திண்காரைக் கட்டுகள், அதாவது, Concrete போடப்பட்ட பிறகு கம்பிகள் செலுத்தப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 120 டன் சக்தி கொண்ட இக்கம்பிகள், மேற்பரப்பிலிருந்து இழுத்துக் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், துளையை அடைக்கும் வகையில், சிமிட்டிக் கலவை போடப்பட்டு மேற்பரப்பு மூடப்பட்டது. இதன் காரணமாக, அஸ்திவார பாறைகளுடன் 120 டன் விசை கொண்டு, அணையை வலுவாக இறுக்குக் கம்பிகள் பிடித்துக் கொள்ளும். நில அதிர்வு உட்பட பல்வேறு விசைகளைத் தாங்கிக் கொள்ளும் வகையில், அணையின் முழு நீளத்திற்கும், 9 அடி இடைவெளியில், 95 கம்பிகள் செலுத்தப்பட்டு சிமிட்டிக் கலவை போடப்பட்டு இருக்கிறது.

நீண்ட கால நடவடிக்கையாக, அணையின் பின்புறத்தில் 10 அடி ஆழம், 32 அடி அகலத்திற்கு, தரை மட்டத்திலிருந்து 145 அடி உயரத்திற்கு ஆர்.சி.சி. கட்டுமானம் அணையின் தலைப் பகுதியுடன் இணையும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்போதுள்ள அணை மற்றும் புதிய கட்டுமானம் ஆகியவை ஒரே அணை போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய நீர் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, கட்டுமானத்தை வலுப்படுத்தும் அதே சமயத்தில், புதிய கட்டுமானத்தில் 10 அடி மற்றும், 45 அடி உயரத்திற்கு இரண்டு வடிகால் மாடங்கள், அதாவது Drainage Galleries அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அணையிலிருந்து கசியும் நீர் அன்றாடம் கணக்கிடப்படுகிறது. அணை பாதுகாப்பாக, வலுவாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஒரளவு நீர் கசிவு அணையிலிருந்து வெளியேறுவது அவசியம் என்பது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

மேலும், அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான, 152 அடிக்கும் மேலாக உயர்கையில், அணையை பாதுகாக்கும் பொருட்டு உபரி நீர், ஏற்கெனவே உள்ள 36 x 16 அடி கொண்ட 10 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். இதன் மூலம், ஒரு வினாடிக்கு 86,000 கன அடி நீரை வெளியேற்ற முடியும். இது மட்டுமல்லாமல், மத்திய நீர் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில், கூடுதலாக வினாடிக்கு 36,000 கன அடி நீரை வெளியேற்றும் திறன் கொண்ட 40 x 16 அடி அளவுள்ள மூன்று மதகுகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, தற்போது அணையிலிருந்து தோராயமாக வினாடிக்கு 1,22,000 கன அடி உபரி நீரை வெளியேற்ற முடியும்.

இதிலிருந்து, அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்பதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு எடுத்துள்ளது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

இந்தச் சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு தொடர்பாக, ஏற்கெனவே நிலுவையில் இருந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள் எடுத்துரைத்த வாதங்களின் அடிப்படையிலும்; வல்லுநர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையிலும்; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும்; அணையை வலுப்படுத்துவதற்கான எஞ்சிய பணிகளை தமிழ்நாடு மேற்கொள்ளலாம் என்றும்; மத்திய நீர் ஆணையம் திருப்தியடையும் வகையில், அணை பலப்படுத்தப் படுவதற்கான எஞ்சிய பணிகள் முடிவடைந்த பிறகு, அணையின் நீர்மட்டத்தை 152 அடி அளவுக்கு உயர்த்தப்பட அனுமதிப்பதற்கு முன்னர், தனிப்பட்ட வல்லுநர்கள் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும்; உச்ச நீதிமன்றம் 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது.

இந்த ஆணையில், அணை பாதுகாப்பாக உள்ளது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளவற்றை இங்கு எடுத்துக் கூறுவது பொருத்தமாக அமையும் என கருதுகிறேன்.

“… Regarding the issue as to the safety of the dam on water level being raised to 142 ft. from the present level of 136 ft., the various reports have examined the safety angle in depth including the view point of earthquake resistance. The apprehensions have been found to be baseless. …”

அதாவது, “தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை அணையின் நீர் மட்டத்தை உயர்த்தும் போது, அணையின் பாதுகாப்பை பொறுத்த வரையில், நிலநடுக்கத்தினை எதிர்க்கும் சக்தி உட்பட அனைத்து பாதுகாப்பு கோணங்களையும் பல்வேறு அறிக்கைகள், ஆழமாக ஆராய்ந்துள்ளன. இதன்படி, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்ற கவலை, ஐயப்பாடு ஆகிய அனைத்தும் ஆதாரமற்றவை ...” என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் மேலும் தனது தீர்ப்பில், “… The experts having reported about the safety of the dam and the Kerala Government having adopted an obstructionist approach, cannot now be permitted to take shelter under the plea that these are disputed questions of fact. There is no report to suggest that the safety of the dam would be jeopardized if the water level is raised for the present to 142 ft. …”

அதாவது, “அணை பாதுகாப்பாக உள்ளது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், இவைகள் எல்லாம் சர்ச்சைக்குரிய விஷயங்கள் என்ற சாக்கு போக்கை வைத்து, அதற்குத் தடை ஏற்படுத்தும் விதமான அணுகுமுறையை கேரள அரசு கடைபிடிப்பது அனுமதிக்க முடியாது. அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தினால், அணையின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எந்த அறிக்கையும் சுட்டிக்காட்டவில்லை ...” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையை முடக்கும் வகையில், “கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006”, கேரள சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு; இந்தத் திருத்தச் சட்டம் 18.3.2006 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, முல்லைப் பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் 136 அடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சிவில் வழக்கு இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கில், கேரள அரசின் 2006-ஆம் ஆண்டைய சட்டத் திருத்தம் செல்லத்தக்கதா என்பது உட்பட சட்ட மற்றும் அரசமைப்பு ரீதியான அம்சங்களை தவிர, ஏனைய நிலைகளை பரிசீலிக்கும் பொருட்டு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் டாக்டர் ஏ.எஸ். ஆனந்த் தலைமையில், அதிகாரம் படைத்த குழு, அதாவது Empowered Committee ஒன்றை உச்ச நீதிமன்றம் 18.2.2010 அன்று நியமித்தது.

தமிழ்நாடும், கேரளாவும் தங்கள் மாநிலங்களின் சார்பாக இரண்டு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர்களை நியமித்தன. தற்போது, இந்த அதிகாரம் படைத்த குழு, முல்லைப் பெரியாறு அணை பகுதி மற்றும் பரிசோதனைக் கூடங்களில் பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளை மேற்கொள்வதற்காக மத்திய நீர் ஆணையம் (Central Water Commission); மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம் (Central Water and Power Research Station); இந்திய புவியியல் அளவைத் துறை (Geological Survey of India); பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) மற்றும் மத்திய மண் மற்றும் கட்டுமான பொருள்கள் ஆராய்ச்சி நிலையம் (Central Soil and Material Research Station) போன்ற அமைப்புகளின் சேவைகளை பயன்படுத்திக் கொண்டு வருகிறது. இந்தக் குழு தனது அறிக்கையை 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தின் முன் அளிக்க இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்ற புரளியை கிளப்பி, கேரள மக்களை பீதியடையச் செய்யும் வகையில், விஷமப் பிரச்சாரத்தை, கேரள அரசு மேற்கொண்டு வருவது மிகவும் வருந்தத்தக்கது என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா, பின்னர் தீர்மானத்தை முன் மொழிந்தார்.

1 comment:

Thozhirkalam Channel said...

தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...