முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்தும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரியும், தே.மு.தி.க. சார்பில் தேனி பகவதி அம்மன் கோவில் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க. நிறுவனரும், எதிர்க்கட்சித் தவைருமான விஜயகாந்த் பேசும்போது,
’’முல்லைப்பெரியாறு அணையின் தண்ணீர் குடித்து வளர்ந்தவன் நான். அதனால் அந்த தண்ணீர் உணர்வோடு பேசுகிறேன். எல்லா பிரச்சனையிலும் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒன்றுதான். அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.
எனக்குத்தான் மக்கள் மீது அக்கறை உண்டு. அதனால்தான் மக்களுக்காக போராடி வருகிறேன்.
கருத்து வேறுபாடு இல்லாமல் அனைத்துக்கட்சியினருடன் இணைந்து முல்லைபெரியாறு பிரச்சனைக்கு போராட நான் தயார். மத்திய அரசு மந்தமாக செயல்படுகிறது என்று கருணாநிதி கூறியிருக்கிறார். இதைச்சொல்ல அவருக்கு 8 வருடங்கள் ஆகியிருக்கிறது.
தமிழக மக்கள் ஏமாளிகள் என கேரள அரசு நினைத்துள்ளது. முல்லை பெரியாறு அணை மோசமாக உள்ளதால் கேரள மக்கள் உயிரிழப்பார்கள் என்று கேரள அரசு கூறி வருகிறது. அவர்களுக்குத்தான் மக்களின் உயிர்களுக்கு அக்கறை உள்ளதுபோலும், எங்களுக்கு அக்கறை இல்லாததுபோலும் கூறி வருகின்றனர்.
முல்லை பெரியாறு அணை உடைந்தால் அந்த அணையின் தண்ணீர் அடுத்துள்ள இடுக்கி அணைக்கு
செல்லும். இடுக்கி அணை முல்லை பெரியாறு அணையைவிட 10 மடங்கு பெரியது. எனவே எந்த ஆபத்தும் ஏற்படாது. மேலும் மக்கள் வசிக்கும் ஊர்கள் அணையைவிட சில ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. எனவே அணை உடைந்தாலும் மக்களுக்கு ஆபத்து ஏற்படாது.
அணை உடைந்தால் அந்த தண்ணீரை இடுக்கி அணை ஏற்றுக் கொள்ளும் என்று கேரள அரசின் அட்வகேட் தண்டபாணி கூறியுள்ளார். எனவே அணையில் எந்த பாதிப்பும் இல்லை.
இந்த பிரச்சினைகளுக்கு மத்திய அரசுதான் காரணம். எனவே முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தீர்வு காண வேண்டும் மேலும். இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.க்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
நான் என் பதவியை ராஜினாமா செய்யத்தயார். என் கட்சி எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யத்தயாராக இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
டேய் யாரு நீ? என்ன பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை : விஜயகாந்த் உளறல்.
’’கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி மாறி மக்கள் மீது சவாரி செய்கிறார்கள். முதலமைச்சர் பதவிக்கு கருணாநிதி. ஆனால் முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு ஸ்டாலினை அனுப்புகிறார்.
குருட்டு பூனை விட்டத்தில் பாய்வது போல இந்த அம்மா எப்ப என்ன செய்யும் என்று தெரியாது. இன்னும் விலைவாசி எப்படியெல்லாம் உயரப்போகுது பாருங்க’’ என்று பேசியபோது,கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஒருவர் சத்தம் போட்டார்.
உடனே விஜயகாந்த், ‘’டேய் யாரு நீ. தைரியம் இருந்தா மேடைக்கு வா. வேறு கட்சிக்காரன் நீ இப்படி என் கட்சி துண்டைப்போட்டு ஏமாத்துற. என்னய்யா வேடிக்கை பார்க்குறீங்க. அவன அப்படியே தூக்கி எறிங்க’’ என்று ஆவேசப்பட்டார்.
பிறகு கொஞ்ச நேரம் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் பற்றி பேசிவிட்டு, ‘’என்ன பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இருந்தாலும் நான் சொல்ல வந்ததை சரியா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்.
ஏன் என்றால் நான் பேசுவதற்கு முன்பு குறிப்பு எடுத்து வைத்திருந்தேன். குறிப்பில் இருந்த எல்லாவற்றையும் பேசிவிட்டேன்.அதையும் மீறி பேசிவிட்டேன்’’ என்று பேசினார்.
விஜயகாந்த் சீரியசாக பேசிக்கொண்டிருந்தபோதும், உளறிக்கொட்டியபோதும், ஒரே மாதிரியாக சிரித்துக்கொண்டிருந்தனர் கூட்டத்தினர்.
2 comments:
தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
Post a Comment