Wednesday, March 30, 2011

ஹசன்அலி ஜாமீனும் - பாஜக கருத்தும்.

ஹசன் அலியை ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கறுப்புப் பண விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலிக்கு மும்பை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் மார்ச் 11-ல் ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி ரத்து செய்து, அவரது காவலை நீட்டித்தது.

இந் நிலையில், ஹசன் அலி சார்பில் அவரது வழக்கறிஞர் லலித், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ஜாமீன் உத்தரவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யுமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது

மனுவை விசாரித்த நீதிபதிகள், நியாயமான காரணங்கள் இல்லாததால் முந்தைய உத்தரவில் தலையிட முடியாது என்று கூறிவிட்டனர்.


கறுப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

"கறுப்புப் பண விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியாகச் செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ளது' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சீதாராமன் தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி மீதான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரும்கூட மத்திய அரசு துரிதமாகச் செயல்படவில்லை.

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் குவிக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அந்தப் பணம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டால் பல ஆண்டுகளுக்கு வரியே விதிக்காமல் மத்திய பட்ஜெட்டை தயாரிக்க முடியும். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

இந்த வழக்கில் தொடர்புடைய சிலருக்கு அரசியல் அடைக்கலம் அளிக்கப்படுவதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார்.

No comments: