Sunday, March 20, 2011

சுயமரியாதையை இழந்து சீட் பெறத் தேவையில்லை., தேர்தலைப் புறக்கணிக்கிறோம் வைகோ

சுயமரியாதையை இழந்து, அதிமுக தரும் தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட மதிமுக விரும்பவில்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் பங்கு பெறவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார்.

வைகோவின் இந்த முடிவு அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் இந்த முடிவால், வைகோ மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலையை எடுத்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தேர்தலைப் புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அரசியலில் மிகவும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வைகோவையும், அவரது மதிமுகவையும் ஜெயலலிதா நடத்திய விதம் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நல்ல பாடமாக அமைந்துள்ளது. இதன் விளைவு, வைகோ சட்டசபைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டார்.

கடந்த தேர்தலின்போது திமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குவதில் திமுக தலைமை தயக்கம் காட்டியதால், அங்கிருந்து விலகி யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவில் சேர்ந்தார் வைகோ. அவருக்கு 35 தொகுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா.

இந்த நிலையில் தற்போதயை தேர்தலில் ஜெயலலிதாவின் முக்கியத்துவம் விஜயகாந்த்துக்குப் போய் விட்டதால் முதல் ஆளாக அவரை அழைத்து 41 தொகுதிகளை தூக்கிக் கொடுத்தார். வைகோ கிடப்பில் போட்டு விட்டார்.

ஆரம்பத்தில் 35 தொகுதிகளைக் கேட்டு வந்தார் வைகோ. ஆனால் ஜெயலலிதா முடியாது என்று கூறி விட்டார். பின்னர் வைகோ சற்று இறங்கி வந்து 25, 23, கடைசியில் 21 என்ற அளவுக்கு வந்தார். ஆனால் ஜெயலலிதாவோ 8 அல்லது 9 என்று அடிமாட்டு ரேஞ்சுக்கு போனார்.

இதை மதிமுக ஏற்க முடியாது என்று கூறி விட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் சில அதிரடி நடவடிக்கைகளால் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக கொந்தளித்து விட்டன. இந்தப் பெரும் குழப்பத்தை எதிர்பாராத ஜெயலலிதா, தனது பிரசாரத்தை தள்ளி வைத்து விட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கூட்டணிக் கட்சியினர் மதிமுகவுக்கும் கெளரவமான இடங்களைத் தர வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் வேறு வழியில்லாமல் ஓ.பன்னீர் செல்வத்தையும், செங்கோட்டையனையும் மதிமுக அலுவலகம் சென்று வைகோவிடம் பேசச் செய்தார் ஜெயலலிதா. அவர்களும் நேற்று வைகோவைச் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது தங்களுக்கு 21 தொகுதிகள் கண்டிப்பாக தேவை என்று வைகோ கூறி விட்டார். இதைக் கேட்டுக் கொண்ட அதிமுக குழுவினர், ஜெயலலிதாவிடம் போய் இதைச் சொன்னார்கள்.

இந்த நிலையில், நேற்று மதிமுக உயர் நிலைக் குழுக் கூட்டம் நடந்தது. பின்னர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக தாங்கள் கேட்டபடி சீட்களை ஒதுக்க மறுத்து வருவதால் தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

நேற்று மாலை தொடங்கிய இந்தக் கூட்டம் விடிய விடிய நடந்தது. இன்று அதிகாலை 3 மணி வரை கூட்டம் நடந்தது. இறுதியில்தான் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு மதிமுக வந்தது. தேர்தலைப் புறக்கணிப்பது தொடர்பாக ஒரு தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், அதிமுக தலைமை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது மதிமுகவை நடத்திய விதத்தால் மதிமுகவினர் ஒவ்வொருவரின் உள்ளமும் காயப்பட்டுப் போனது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஆரம்பத்திலிருந்தே எந்த மாற்றமும் இல்லை. அவரது அணுகுமுறையில் அகந்தை, ஆணவம், தன்னிச்சையான போக்கு ஆகியவையே திட்டவட்டமாக புலப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்படுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டசபைத் தேர்தலையும் மதிமுக புறக்கணிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பின்னர் பேசிய மதிமுக நிர்வாகி மல்லை சத்யா கூறுகையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய நிலையில் இறுதிவரை மதிமுக கேட்ட 21தொகுதிக்கு பதிலாக 12 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என அதிமுக கூறியதால் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறோம்.

தொகுதி பங்கீட்டில் அதிமுக நடந்து கொண்ட விதம் பிடிக்க வில்லை. மூன்றாவது அணி அமைக்க விருப்பம் இல்லை என்றார்.

மதிமுகவை கரிவேப்பிலை போல பயன்படுத்திக் கொண்டு கடைசியில் அவரை விரட்டி விட்டுள்ள ஜெயலலிதாவின் செயலால் ஒட்டுமொத்த தமிழர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக ஈழத் தமிழ் ஆதரவு அமைப்புகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளன.


ம.தி.மு.க., வுக்கு சீட் வழங்காதது குறித்து நாஞ்சில் சம்பத் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா எங்களை புறக்கணித்து தற்கொலைக்கு இணையான தீங்கை தனக்கு தானே இழைத்துக் கொண்டது.

நாங்கள் 23 சீட் கேட்டிருந்தும், எந்த வித ஆலோசனையும் நடத்தாமல் வெறும் 9 சீட் மட்டுமே வழங்க அ.தி.மு.க., முன்வந்தது, திட்டமிட்டே ம.தி.மு.க., புறக்கணிக்கப்பட்டுள்ளதையே உணர்த்துகிறது. பேயிடம் இருந்து பிசாசிடம் வந்தோம், பிசாசு எங்களை பிராண்டி விட்டது.

இதற்கான பலனை அது அனுபவிக்கும். ஜெயலலிதா ராஜபக்சேவிடம் விலை போய் விட்டார். எனினும் அதிமுக அணியை விட்டு விலகமாட்டோம்.

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் 3வது அணி அமைந்தால் மட்டும் தான் அதை ஏற்றுக்கொள்வோம், விஜயகாந்த் தலைமையை ஏற்றுக் ‌கொள்ளமுடியாது.

வைகோவின் அதிரடி முடிவுகளால் தான் ம,தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது, எனவே தான் வைகோ இம்முறை அமைதி காத்து வருகிறார். ம.தி.மு.க உயர் நிலைக் கூட்டத்துக்குப் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று ஆவேசமாக கூறினார்.

1 comment:

இராமசாமி சேகர் said...

அன்பரே!
நடந்த நிகழ்வுகள் வைகோவுகோ அல்லது
மதிமுகவுக்கோ சுயமரியாதைக்குறைவை எப்படி ஏற்படுத்தும் என்பது புரியவில்லை.
முதலில் இது ஏன் தனி மனிதப்பிரச்சனையாகப் பார்க்கப்பட வேண்டும்?
தொகுதிப்பங்கீடு என்பது ஒரு வகையான வர்த்தகமல்லவா?யாருக்கு எவ்வளவு லாபம் அல்லது நட்டம் என்ப்தன் அடிப்படையிலல்லவா செய்து கொள்ளப்படுகிறது?
இதன் அடிப்படையில், மதிமுகவின் கடந்தகால வரலாற்றைப் பார்ப்போம்-
1.கடந்த தேர்தலில் 35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளிலேயே வெற்றி பெற்றார்கள்.
2.பிரச்சாரம் ஆரம்பித்த 3 ஆம் நாளிலேயே அண்ணாநகர் வேட்பாளர் விஜயா தாயன்பன் திமுக அணிக்கு மாறிப்போனார்.
3.கட்சியின் முக்கியஸ்தர்கள் எதிரணியில் கரைந்து போனார்கள்.
இந்த சூழ் நிலையில் மதிமுகவிற்கு அவர்கள் கேட்கும் 21 தொகுதிகள் கொடுத்திருந்தால்,
1.வெற்றிக்குப்பிறகு யாரும் கட்சி மாறமாட்டார்கள் அல்லது தேர்தலின்போதேகூட யாரும் அடகு பட மாட்டார்கள் என்று வைகோவாலேயே உறுதியாகக் கூற முடியாது.
2.இவர்களுக்குக் குறைந்த பட்ச செலவாவது செய்வது யார்?
இந்த சூழ்நிலையில் கிடைத்த இடங்களிலாவது முனைப்புக்காட்டி .ஒரு அங்கீகாரத்தை நிறுவி,தமிழர்களின் பொது விரோதியை எதிர்த்திருக்க வேண்டாமா?
ஒரு பழுத்த அரசியல்வாதி தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற கயலாகாத்தனத்தை எடுத்துக் கொண்டிருக்கலாமா?
வீரத்தமிழனை நினைத்து ஊமைத்தமிழர்கள் அழ வேண்டியதுதான்.