Wednesday, December 14, 2011

சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை ; அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? : வைரமுத்து ஆவேசம்.



முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு சாதகமாக நிரந்தர தீர்வு ஏற்படாவிட்டால், படைப்பாளிகள் களத்தில் இறங்குவோம்'' என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை:

"முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது.

கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்?

உடைந்த சோவியத் யூனியன்.

என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன.

அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.

'முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்'

எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம். பச்சைத் தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். 'முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்' என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம்.

தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு’’ என்று அந்த அறிக்கையில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

Tuesday, December 13, 2011

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரும் மனு - டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்.


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் டிஸ்மிஸ் செய்வோம் என்று நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து மனுவை கேரள வக்கீல் வாபஸ் பெற்றார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி தமிழக மற்றும் கேரள அரசுகள் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சி.கே. பிரசாத் மற்றும் ஏ.ஆர். டேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இது தவிர இந்த விவகாரம் தொடர்பாக திமுக தாக்கல் செய்துள்ள மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு இப்போது என்ன அவசியம் என்று கேட்டனர். மேலும், அணையின் நீர்மட்டத்தை நிர்ணயிப்பது, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆராய ,முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஏஸ்.ஆனந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் 2 தொழில்நுட்ப நிபுணர்கள் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் அணையை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். எனவே இந்த நிலையில் கேரள அரசின் மனுவுக்கு என்ன அவசியம் என்று கேட்டனர்.

மேலும், ஏ.ஆஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவின் அறிக்கையே இறுதியானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து கேரள வக்கீல் தனது மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தது. இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிஆர்பிஎப் பாதுகாப்பு - மத்திய அரசுக்கு உத்தரவு

இதேபோல முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎப் வீரர்களை நிறுத்த வேண்டும் என்ற தமிழகம் மற்றும் திமுக கோரிக்கை குறித்து வருகிற 15ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பீதியைக் கிளப்புகிறது என்றும்,இந்த விவகாரம் தொடர்பாக கேரளா சர்ச்சையைக் கிளப்பாமல் இருக்க உத்தரவிடுமாறும் கோரி கடந்த 1ம் தேதி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. கேரள அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவில்லை.மேலும் புதிய அணை கட்டுவதில் முனைப்பாக உள்ளது என்று தமிழக அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க கேரள அரசு தீர்மானம் கொண்டு வந்தது. அணை உள்ள பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதைக் காரணம் காட்டி நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்றது. ஆனால் அணை உறுதியாகத் தான் உள்ளது என்றும், கேரள அரசு வேண்டும் என்றே இவ்வாறு கூறுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கக் கோரி கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றாதீர்கள் - தமிழக, கேரள அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து செய்தித் தாள்களிலும் ஒரு பக்க விளம்பரம் கொடுத்திருந்தார்.

முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றியுள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். அதனால் அவர்கள் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க நினைக்கிறார்கள். ஒரு சிலரின் சுயநலத்திற்காக கேரள மக்கள் பலியாகிவிடக்கூடாது என்பது போன்ற கருத்துகள் அந்த விளம்பரத்தில் இருந்தது.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கையில் ஜெயலலிதா இவ்வாறு விளம்பரம் கொடுத்ததற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை அரசியலாக்கக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார். அதேபோல கேரள அரசுக்கும் இநத்ப் பிரச்சினையை அரசியல் ரீதியாக பயன்படுத்தி பெரிதாக்கக் கூடாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பெரிதாகிக் கொண்டிருக்கையில் இரு மாநில அரசுகளும் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் அணை குறித்து கேரள அரசு தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி மக்களை பீதியடையச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நெய்யாறு இடதுகரை சானலில் இன்று வரை தண்ணீரை திறந்து விடாமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் கேரளஅரசை நம்பமுடியாது. : காங். எம்.எல்.ஏ. விஜயதரணி.



குமரி மாவட்டத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 40 சதவீதம் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் கேரளாவில் உள்ள நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தேவையான தண்ணீரை நெய்யாறு இடதுகரை சானலில் இன்று வரை திறந்து விடவில்லை.

பல ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அணையில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடுங்கள் என்று பல முறை போராட்டங்கள் நடத்தியும் அதற்கு நடவடிக்கை எடுக்காத கேரள அரசு இப்போது முல்லை பெரியாறில் புதிய அணை கட்டிய பின்பு தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை துளியளவும் நம்ப முடியாது.

முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக கேரள எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக கேரளாவின் இன்னொரு எல்லையான குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் இப்பிரச்சினைக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக பாறசாலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது பற்றி குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியதாவது:

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதை கேரள அரசு நிறைவேற்றவில்லை. மாறாக முல்லை பெரியாறு அணையை உடைக்கப் போவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

உள்ளபடியே அணையில் நீரை தேக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? அதை செய்யாமல் மாற்று கருத்தை தெரிவிக்கும் கேரள அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்று உம்மன்சாண்டி அரசு கூறுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 40 சதவீதம் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் கேரளாவில் உள்ள நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தேவையான தண்ணீரை நெய்யாறு இடதுகரை சானலில் இன்று வரை திறந்து விடவில்லை.

பல ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அணையில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடுங்கள் என்று பல முறை போராட்டங்கள் நடத்தியும் அதற்கு நடவடிக்கை எடுக்காத கேரள அரசு இப்போது முல்லை பெரியாறில் புதிய அணை கட்டிய பின்பு தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை துளியளவும் நம்ப முடியாது.

முதலில் அவர்கள் நெய்யாறு இடதுகரை சானல் பிரச்சினைக்கு தீர்வு காணட்டும். அதற்கு பிறகு முல்லை பெரியாறு பிரச்சினைக்கு போராடட்டும். முல்லை பெரியாறில் பாதுகாப்புத்தான் பிரச்சினை என்றால் அணையை வலுப்படுத்தும் ஏற்பாடுகளை செய்யட்டும். அதை விடுத்து புதிய அணை கட்டுவோம் என்பதை ஒரு போதும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது.

இது தொடர்பாக நான் டெல்லியில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்து உள்ளேன். அதற்கான நகலை தமிழக முதல் அமைச்சருக்கும் அனுப்பியுள்ளேன்.முல்லை பெரியாறு பிரச்சினைக்காக தமிழக சட்ட சபையின் சிறப்பு கூட்டம் வருகிற 15 ந்தேதி கூட்டப்படுகிறது. அக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கருத்தாக முல்லை பெரியாறில் புதிய அணை கட்டக்கூடாது என்பதை பதிவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

முல்லைப் பெரியாறு ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் : பிரதமருக்கு அப்துல்கலாம் யோசனை.



முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் யோசனை தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கடிதம் எழுதியுள்ளார்.

இரு மாநில மக்களும் பலனடையும் வகையில், முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு கலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கலாம் எழுதிய கடிதத்தில், கேரள மாநிலத்துக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம்.

நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப் பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும்.

இதன் மூலம், நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின்போது, எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்னையால் இரு மாநில உறவும் பதிக்கப்பட்டுவிடக்கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கலாம் கூறியுள்ளார்.

அர்த்த புஜங்காசனம், அர்த்த சலபாசனம், பூர்ண சலபாசனம்.

அர்த்த புஜங்காசனம்.
அர்த்த புஜங்காசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி அமர்ந்து கால்களை பின்னே நீட்டி, குப்புறபடுங்கள். உள்ளங்கை முதல் முழங்கை வரை தோள்பட்டைக்கு இணையாக கிடைமட்டத்தில் இருக்கட்டும். இயல்பான சுவாசத்தில் இருப்பது அவசியம். நெற்றி, மூக்கு, கீழ்மோவாய் வரை தரையில் கிடத்தி, பிறகு மேலிருந்து கீழாக நெற்றி, மூக்கு, கீழ் மோவாய் வரை கழுத்தை உபயோகித்து தலையை தூக்கவும். முழங்கைகளை சற்று அழுத்தி தோள் பட்டை-இடுப்பு வரை, உடலை மெல்ல மெல்ல மேலே தூக்குங்கள். இதே நிலையில் 15 விநாடிகள் இருந்து ஆசனத்தை கலைக்கலாம்.

பயன்கள்:

சளி, டி.பி, ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா வராது. இடை மெலியும். மார்பு பெருகும். போலீஸ், ராணுவத்தில் சேர விரும்புவோர் அர்த்த புஜங்காசனம் செய்துவந்தால், கூடுதல் பலன்கள் கிடைப்பது உறுதி. மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறு உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஆசனமிது!


அர்த்த சலபாசனம்.
அர்த்த சலபாசனம்

செய்முறை:

விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப்படுங்கள். இரு கைகளையும் உடலோடு ஒட்டி தரையையும் தொடுமாறு செய்யவும். கைகளை சற்று அழுத்தி, வலதுகாலை மட்டும் மேலே தூக்குங்கள். இடதுகாலை மடக்கி, வலதுகால் அல்லது தொடையில் வைத்து இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருங்கள். இதே ஆசனத்தை, காலை மாற்றி மறுபக்கம் செய்ய வேண்டும்.

பயன்கள்:

முதுகு தண்டு இளக்கம் பெறும். இடுப்பி பிடிப்பு, நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் வராது. மூலநோய் குறையும். மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். விரைவீக்கம் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.


பூர்ண சலபாசனம்.
பூர்ண சலபாசனம்

செய்முறை:

விரிப்பில் குப்புறப்படுத்த நிலையில் இருகைகளையும் உடலோடு ஒட்டிவையுங்கள். இல்லையெனில் - இரு கைகளையும் அந்தந்த பக்கத்து தொடைக்கு அடியில் தரையோடு ஒட்டிவைக்கலாம். முகத்தை நிமிர்த்தி மோவாய்-இரு கைகளையும் அழுத்தி, இடுப்பின் கீழ்ப் பகுதியை மேலே தூக்கவேண்டும். இது குறைந்தபட்சம் அரையடி உயரமாவது இருக்கட்டும். அவரவர்க்கு முடிந்தஅளவு, உடம்பை மேலே கொண்டு வரலாம்.

பயன்கள்:

முதுகு தண்டு இளக்கம் பெறும். இடுப்பு பிடிப்பு, நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் வராது. மலச்சிக்கல் போகும். பெருந்தொந்தி குறையும். சிறுநீரக கோளாறு வராது. செரிமான பிரச்சினையும் இராது. மூலநோய் மறைந்து போகும்.

Monday, December 12, 2011

மலையாளி ஏடிஜிபி ஜார்ஜ், தமிழ் மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார்.



முல்லைப் பெரியாறு விவகாரத்தினால் தமிழக- கேரள எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, கூடுதல் டி.ஜி.பி. மலையாளி ஜார்ஜ் தலைமையில் தேனி மாவட்டம் கம்பத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் மலையாளி ஜார்ஜ் உடனடியாக இப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேனி மாவட்ட மக்கள் வரலாறு காணாத வகையிலான மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊர் ஊராக தாங்களாகவே கிளம்பி குமுளியை நோக்கி பேரணி நடத்தி கேரள அரசின் விஷமத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்கள் தாங்களாகவே திரள்வதாலும், பெரும் கொந்தளிப்புடன் இருப்பதாலும் போலீஸாரால் எதுவும் செய்ய முடியவில்லை. மிகுந்த கட்டுப்பாட்டுடன் அவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென கூடுதல் டிஜிபி மலையாளி ஜார்ஜ் கம்பம் வந்துள்ளார். அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ் தாஸ், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணப்பன் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அந்த கூட்டத்தில் இரு மாநில எல்லைப்பகுதிகளில் எழுந்துள்ள பதற்றத்தை தணிப்பது குறித்தும், சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிப்பது பற்றி, விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கிராம சபை கூட்டங்களுக்கு சென்று மக்களை சமாதானப்படுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி மலையாளி ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.

மலையாளி ஏடிஜிபி ஜார்ஜுக்கு எதிர்ப்பு.


இந்நிலையில் தற்போது கூடுதல் டிஜிபி மலையாளி ஜார்ஜுக்கு எதிராக விவசாயிகள் கிளர்ந்தெழ ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழகத்தின் உரிமைக்காக மக்கள் போராடி வரும் இடத்திற்கு அவர் வந்துள்ளதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.

அவரது தலைமையிலான போலீஸார் தமிழ்மக்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்துகின்றனர். இதனால்தான் இன்று கம்பம் மெட்டில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அமைதியான முறையில் பேரணி சென்றவர்களைத் தடுத்து தடியடி நடத்தியுள்ளது ஏன்.?

கேரளாவில் அரசியல்வாதிகள், வக்கீல்கள், காவல்துறையினர் அந்த மாநில மக்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் ஆதரவுடன்தான் தமிழர்களை அங்கு தாக்குகிறார்கள். இங்கு மட்டும் எங்களை ஏன் தாக்குகிறார்கள் என்று கேட்டனர்.

கேரள எல்லையை நோக்கி சாரை சாரையாக தமிழர்கள்.. மக்கள் எழுச்சி !!



இது ஒரு தனிப்பட்ட கட்சியின் பேரணியல்ல, தனிப்பட்ட அரசியல்வாதியின் அறைகூவலில் திரண்ட கூட்டமும் அல்ல. மக்கள் தன்னிச்சையாகவே வந்து குவிந்த காட்சி! குமுளியில் உள்ள கேரள எல்லையை நோக்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமை திரண்ட மக்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கும் அளவில் இருந்தது. முக்கால் லட்சத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் வரை நேற்று கேரள எல்லையில் திரண்டனர்!

நேற்று காலையில் இருந்தே கேரள எல்லையை நோக்கி மக்கள் உத்தமபாளையம், கூடலூர்,

ஞாயிற்றுக்கிழமை, கேரள எல்லையை நோக்கி.. வீதி தெரியாத அளவில் மக்கள் அலை!

சின்னமனூர், கம்பம், ஆகிய பகுதிகளில் இருந்துசாரை சாரையாக வந்து சேரத் தொடங்கினர். இந்த எல்லைப் பகுதியில் கடந்த இரு வாரங்களாகவே பதட்டம் நிலவி வருகின்றது. பதட்டம் அதிகமானதில், குமுளி, கம்பம்-மெட்டு, போடி-மெட்டு ஆகிய சாலைகள் வழியாக கேரளத்துக்குச் செல்லும் சகல போக்குவரத்தும் 5-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

தேனியில் இருந்து இந்த மூன்று பாதைகள் வழியாகத்தான் கேரளா செல்லும் போக்குவரத்துகள் நடைபெற்று வந்தன.

அதன் பின்னரும் பதட்டம் குறையாமல் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றதில், பதட்டம் அதிகமுள்ள பகுதியாகக் கருதப்பட்டு உத்தமபாளையம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 7-ம் தேதி முதல் இப்பகுதியில் 144 அமலில் உள்ளது. அப்படியிருந்தும் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்துவதை காவல்துறையால் தடுத்து நிறுத்த முடியாத அளவில், மொத்த ஜனத்தொகையுமே கிளர்ச்சிகளில் குதித்துள்ளனர்.

நேற்று பெருமளவில் மக்கள் திரண்டு கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், நேற்று முன்தினமும் சனிக்கிழமை கிட்டத்தட்ட இதுபோன்ற பேரணி ஒன்று நடைபெற்றிருந்தது. ஆனால், அதில் சுமார் 15,000 மக்களே கலந்து கொண்டிருந்தனர். கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த மக்களே அவர்கள். அவர்கள் காவல் துறையின் தடையை மீறி கேரள எல்லையை நோக்கி பேரணி நடத்தினர். குமுளி அருகே தமிழக எல்லையில் நின்று, கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சனிக்கிழமை கூட்டம் குறைவாக இருந்ததை உணர்ந்த மக்கள், நேற்று ஞாயிற்றுக் கிழமை தன்னிச்சையாகவே பெருமளவில் வந்து குவியத் தொடங்கினர். இவர்களில் பெரும்பாலானோர், கிராம மக்கள். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உத்தமபாளையம், கூடலூர், சின்னமனூர், கம்பம் ஆகிய இடங்களை நோக்கி காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தனர். நேரம் அதிகமாக அதிகமாக மக்கள் கூட்டம் அதிகமாகத் தொடங்கியது. காலை 10.30-க்கு கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் திரண்டுவிட்டது.

அதையடுத்து இந்த இடங்களில் இருந்து லோயர்-கேம்பை அடுத்துள்ள கேரள எல்லையை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தும், வாகனங்கள் மூலமும் செல்லத் தொடங்கினர். 10.30-ல் இருந்து 11 மணிவரை பாதைகள் அனைத்திலும் மக்கள் வெள்ளமாக அசைவதைக் காணக்கூடியதாக இருந்தது.

கூடலூருக்கும், லோயர்-கேம்ப்புக்கும் இடையே ஆற்றுப் பாலம் ஒன்று உள்ளது. குருவனூர் பாலம் என்று இதை அழைப்பார்கள். இந்த இடத்தில் பொதுமக்களுக்காக காத்திருந்தனர் காவல்துறையினர். பாலத்தைக் கடந்து செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினர்.

இந்த ஒரு பாதையைத் தடுத்தால், அப்பகுதியிலேயே தலைமுறைகளாக வாழ்ந்துவரும் அப்பகுதி மக்களுக்கு வேறு பாதை தெரியாதா? காவல்துறை குருவனூர் பாலத்தை மறித்தபடி நின்றிருக்க, மக்கள் திசைமாறி, அந்த இடத்திலிருந்து சற்று தள்ளியிருந்த பழைய பாலம் ஒன்றின் வழியாக லோயர்-கேம்ப் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

லோயர்-கேம்ப் பகுதியை அடைந்தபோது, மக்களின் ஒரு பகுதியினரிடம் வன்முறை லேசாக தலைகாட்டத் தொடங்கியது.

இப்பகுதியில் கேரளா அரசின் சுற்றுலாத் துறை அலுவலகம் ஒன்று உள்ளது. உல்லாசப் பயணிகள் வந்தால், அவர்களை வனப் பகுதிக்குள் அழைத்துச் செல்ல கேரள அரசு இந்த அலுவலகத்தை நடாத்துகின்றது. கூட்டம் அதிகளவில் திரண்டு வருவதைக் கண்டவுடன், அலுவலகத்தில் பணிபுரிந்த ஓரிருவரும் அஙகிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்த அலுவலகத்துக்கு சொந்தமான இரு மாட்டுவண்டிகளை மக்கள் அடித்து நொருக்கினர். உல்லாசப் பயணிகளை காட்டுக்குள் அழைத்துச் செல்ல உபயோகிக்கப்படும் மாட்டு வண்டிகள் அவை.

லோயர்-கேம்ப்பில் மீண்டும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு தடையை ஏற்படுத்தினர். மேலே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் ஆயிரக் கணக்கில் நகர்ந்து வந்துகொண்டிருந்த மக்களை காவல்துறையால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மக்கள் வெள்ளம் காவல்துறையின் தடையை மீறி குமுழி சாலையில் நகரத் தொடங்கியது. சாலையில் நெரிசல் அதிகமாக இருக்கவே, பலர் காட்டுப் பகுதி ஊடாகவும் கேரள எல்லையை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.

பிற்பகல் 1 மணியளவில் கேரள எல்லையில், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை ஒன்று உள்ளது. அதற்கருகே வைத்து பொதுமக்களை சந்தித்தனர், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியும் தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாசும், இதற்குமேல் 100 மீட்டர் சென்றாலே தமிழக எல்லையை கடந்து விடுவீர்கள் என்று மக்களை எச்சரித்தனர். எல்லையைக் கடந்து செல்ல வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்ட அவர்கள், அந்த இடத்தில் நின்றே கோஷம் போட விரும்பினால் போடுங்கள் என்றனர்.

பிற்பகல் 4.30-க்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இப்பகுதிக்கு காரில் வந்து இறங்கினார். அதுவரை எந்த அரசியல்வாதியோ அரசியல் கட்சியோ இல்லாமல் எல்லாமே மக்கள் எழுச்சி என்ற வகையில் நடந்திருந்தது.

அமைச்சர் காரில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கியதுமே ஓரிரு கற்கள் வந்து விழத் தொடங்கின. உடனே உஷாரான போலீஸ் அந்த இடத்தில் தடியடி நடாத்த தொடங்கினர். சும்மா நின்றிருந்தவர்களுக்கும் அடி விழுந்தது. அமைச்சரைக் சூழ்ந்து கொண்ட போலீஸார், அவரை கார் வரை அழைத்துச் சென்று, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

தேவையற்ற இந்தத் தடியடிப் பிரயோகம், அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினரை எதிர்த்து மக்கள் கோஷம் எழுப்பப் தொடங்கினர். காவல்துறை மீதான மக்களின் கோபம் வெளிப்படத் தொடங்கியது. ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் நின்றிருந்த இடத்துக்கு அருகே காவல்துறைக்கு சொந்தமான பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மக்கள் அவற்றைத் தாக்கத் தொடங்கினர். சுமார் 15 காவல்துறை வாகனங்கள் சேதமாக்கப்பட்டன.

மாலை 5 மணிவரை அங்கேயே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பின்னர் கலைந்து சென்றனர். அப்போதும், கேரளாவுக்குச் செல்லும் வீதியில் மரக் கிளைகளையும் கற்களையும் போட்டு, அந்தப் பாதை வழியாக யாரும் கேரளா செல்ல முடியாதவாறு செய்துவிட்டே அங்கிருந்து அகன்றனர்.

எந்தவொரு கட்சியாலும் தூண்டப்படாத மக்கள் எழுச்சி இது. நிலைமையை இப்படியே நீடிக்க விடுவது, இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவை மிக மோசமாகப் பாதிக்கும்.