Tuesday, November 15, 2011

எம்.பி.பி.எஸ். மாணவர்களின் வாழ்க்கையில் வேண்டுமென்றே விளையாடும் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன்.



புதிய மதிப்பெண் விதிமுறையால் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் 1300பேர் தோல்விக்குள்ளாக்கப்பட்டனர். இதையடுத்து தோல்வியடைந்த மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

9-11-2011 அன்று இறுதி விசாரணைக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சிற்கு இந்த வழக்கு வந்தது.

முன்னதாக சென்னை மற்றும் தமிழகமெங்கும் போராட்டம் நடத்திய மாணவர்கள், சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய்யை சந்தித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய மதிப்பெண் விதிமுறையை ரத்து செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையைப் பெற்று, அவரது உத்தரவின்படி புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்யும் முடிவை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் எடுத்தது.

உயர் நீதிமன்ற விசாரணையின்போது, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவர்களிடம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நர்மதாசம்பத், பழைய முறைப்படி தேர்வு முடிவுகள் வெளியிட அரசு கூறிய ஆலோசனையை ஏற்று, புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்வதாக கூறினார்.

இதனைக் கேட்டு கடுங்கோபம் கொண்ட தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவர்கள், வழக்கறிஞர் நர்மதாசம்பத்திடம் எங்களது மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி இவ்வழக்கில் அளித்த தீர்ப்பை நீங்கள் மதிக்கவில்லை., ஆனால், அதே நேரத்தில் அரசாங்கம் கூறியது என்று புதிய மதிப்பெண் விதிமுறையை திரும்பப்பெறுகிறீர்கள். நாங்கள் சொன்னதும் இதைத்தானே! எங்கள் உத்தரவிற்கு என்ன மதிப்பு கொடுத்தீர்கள் என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.

பின்னர், முதல்தாள்-100, இரண்டாம்தாள்-100 இவற்றின் கூடுதலான 200மதிப்பெண்ணிற்கு, 100மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்னும் பழையமதிப்பெண் முறைப்படி தேர்வு முடிவுகள் வெளியிட ஆணை பிறப்பித்தார்.

இவ் வழக்கில் ஒரு பிரிவினர் 200க்கு 100மதிப்பெண்ணிற்கு மேல் பெற்று தோல்விக்குள்ளாக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு இந்தத் தீர்ப்பு மகிழ்வைத் தந்தது. அவர்கள் அனைவரின் கோரிக்கையும் ஏற்கப்பட்டுவிட்டதால் தங்கள் மனுக்களை திரும்பப் பெறுவதாகக் கூறினார்கள்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமும் மேற்கண்ட மாணவர்களுக்கு மட்டுமே விதிமுறையை ரத்து செய்வதாகக் கூறியது. எனவே நீதிபதி வழக்குகள் ஆனைத்தையும் தள்ளுபடி செய்தார்.

அதிர்ச்சியுற்ற மாணவர்களின் மற்றோரு பிரிவினர் கோரிக்கை வேறுமாதிரியானது. அதாவது, முதல்தாள்-100, இரண்டாம்தாள்-100, வாய்மோழித்தேர்வு-100. இம்மூன்றின் கூடுதலான 300மதிப்பெண்ணிற்குக்கு 150மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்னும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் மதிப்பெண் வழங்கும் விதியினை சுட்டிக்காட்டி, இவ்விதிப்படியும் தேர்ச்சி வேண்டும் என்றனர்.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், இவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டு உணவு இடைவேளைக்கு சென்றுவிட்டார்.

பிற்பகல் வாதத்தின் முடிவில் அவர்களின் கோரிக்கையும் ஏற்று இந்திய மருத்துவக் கவுன்சிலின் மதிப்பெண் வழங்கும் விதிகள்படி இவர்களுக்கும் தேர்ச்சியினை வழங்க உத்தரவிட்டார். மேலும் இதுநாள் வரை இம்மாணவர்களுக்கு வருகைப் பதிவையினையும் தர தலைமை நீதிபதி உத்தரவிட்டு வழக்கினை முடித்தார்.

புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்த பிறகு, திருத்தப்பட்ட தேர்வு முடிவில் 85 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.



தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவை நவம்பர் 13 - ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிட்டது

ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளின்படி 70 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய மதிப்பெண் முறை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் மதிப்பெண் வழங்கும் விதிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை. இதனால்தான் மீண்டும் 30 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளதாக மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தரப்பிலும், மாணவர்கள் தரப்பிலும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படாததால் அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு ஆளாகிறார். எனவே அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போகிறோம் என்று அறிவித்தனர்.

பெற்றோர்களோ, எம்.பி.பி.எஸ். மாணவர்களின் வாழ்க்கையில் வேண்டுமென்றே விளையாடுகிறார் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன். எங்களக்கு இது இரண்டுமாத மன உளைச்சள். இதற்கு தீர்வுகாணமல் விடப்போவதில்லை என்றனர்.

எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்களைப் போலவே இறுதி ஆண்டு முடித்த மாணவர்களுக்கும் புதிய மதிப்பெண் முறையால் பாதிப்பு ஏற்படவே அவர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பழைய மதிப்பெண் முறைப்படி இவர்கள் அனைவரும் தேர்ச்சியுற்றவர்கள் என்றும், எனவே இவர்கள் அனைவரையும் பயிற்சி மருத்துவராக பணிபுரிய உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பு வழங்கி இரண்டு மாதமாகிறது,

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் இதுவரை எங்களை பயிற்சி மருத்துவராக பணிபுரிய அனுமதிக்கவில்லை. இதுவும் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் என்றனர்.

புதியவிதி முறையால், எம்.பி.பி.எஸ். மாணவர்களைத் தொடர்ந்து பல்மருத்துவம் பயிலும் பி.டி.எஸ். மாணவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்களும் போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

இதுபோலவே, இந்தியமருத்துவம் பயிலும் மாணவர்களும், மருத்துவ துணைப் படிப்பான செவிலியர் பயிலும் மாணவர்களும் புதியவிதி முறையினை எதிர்த்துப் போராடுகின்றனர்.

இப்படிச் சுற்றிச்சுற்றி அதிருப்தியின் விளிம்பில் இருக்கும் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன் என்ன செய்யப்போகிறார்?

திருத்தப்பட்ட தேர்வு முடிவில் இந்த ஒட்டுமொத்த மதிப்பெண் கணக்கிடுவதில் தவறான முறை கடைப்பிடிக்கப்பட்டு மீண்டும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. வேண்டுமென்றே மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன், தானாக முன்வந்து தனது பதவியை இராஜினமா செய்யும்வரை விடப்போவதில்லை என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சன் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.

No comments: