சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அப்போலோ மருத்துவமனையில் வலிப்பு நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட சந்தனா (இடமிருந்து 2-வது)
தீராத வலிப்பு நோயை குணப்படுத்தும் வகையில் அப்போலோ மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் துறை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ப்ரீதிகா சாரி மற்றும் டாக்டர் செந்தில்நாதன் ஆகியோர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலகம் முழுவதும் 150 பேர்களில் ஒருவருக்கு வலிப்பு வருகிறது. சுமார் 36 வகையான வலிப்பு நோய்கள் உள்ளன. இதில் 75 முதல் 80 சதவீதம் வரையிலான வலிப்பு நோயாளிகளை மருந்து மூலம் குணப்படுத்த முடியும். ஆனால், 15 முதல் 20 சதவீதம் வரையிலான நோயாளிகளை மருந்து மூலம் குணப்படுத்த முடியாது. அதுதான் தீராத வலிப்பு நோய் எனக் கூறப்படுகிறது.
இதில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக மூளைப் பகுதியில் சுமார் 1 செ.மீ முதல் 2 செ.மீ வரை வடு ஏற்படும். இதன் காரணமாக பிற்காலத்தில் வலிப்பு நோய் ஏற்படும். மேலும் மூளைக் காய்ச்சல், விபத்து போன்ற காரணங்களால்கூட தீராத வலிப்பு நோய்க்கு உள்ளாக நேரிடும்.
தீராத வலிப்பு நோயை மாத்திரை மூலம் குணப்படுத்த முடியும் என கருதி நோயாளிகள் ஆண்டுக்கணக்கில் மத்திரை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் மாத்திரை எடுத்துக் கொண்ட பின்னரும் மாதத்துக்கு 2 முறை வலிப்பு ஏற்பட்டால் அவை தீராத வலிப்பு நோய் ஆகும். இதன் பாதிப்பு தொடர்ந்துகொண்டே இருந்தால் மூளை பாதிப்பு ஏற்படும்.
இப்பிரச்னைக்கு அறுவைச் சிகிச்சை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். அப்போலோ மருத்துவமனையில் இதுவரை 100-க்கு மேற்பட்ட வலிப்பு நோய் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் வலிப்பு வராமல் தடுக்க முடியும். இதனால் எந்தவித பக்க விளைவும் ஏற்படாது.
அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் துறை சார்பில் தீராத வலிப்பு நோய்க்கு தீர்வு காணும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய "சிக்கலான வலிப்பு நோய் சிகிச்சை மையம்' தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நோயாளிகளுக்கு நவீன எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் மூளைப் பகுதியில் உள்ள வடுவை துல்லியமாகக் கண்டறிந்து அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற முடியும்.
இலவச ஆலோசனை முகாம்: இப்போது வலிப்பு நோய் தொடர்பாக உலக அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு அப்போலோ மருத்துவமனையில் நவம்பர் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை வலிப்பு நோய் தொடர்பாக இலவச ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 044- 42291295 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று டாக்டர்கள் கூறினர்.
1 comment:
வலிப்பு நோயைப் பற்றி புதிய, அருமையான செய்தி.
நல்ல செய்தியும் கூட.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
Post a Comment