திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கின்ற செயல்
தமிழ்நாட்டு மக்களின் ஏமாளித்தனத்தின் காரணமாக எப்படியோ ஆட்சிக்கு வந்துவிட்ட ஜெயலலிதா, வந்ததும் வராததுமாக வரவு செலவு திட்டத்தை அவையிலே வைப்பதற்கு முன்பாகவே தமிழக மக்கள் தலையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரியை சுமத்திவிட்டு, அத்துடன் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செய்யப்பட்ட நல்ல காரியங்களையெல்லாம் தொடர்ந்து கெடுத்து வரும் முயற்சியை மேலும் தொடர்ந்து, ''ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கின்ற'' செயலாக இப்போது எல்லா மட்டத்திலும் வரி உயர்வு - கட்டண உயர்வு, பால் விலை உயர்வு - என்று பல உயர்வுகளை அறிவித்திருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த தெரியவில்லை
''உயரப் போகிறோம்'' என்றுதானே அவருக்கும், அவர் அணியின் வேட்பாளர்களுக்கும் அபரிதமான வாக்குகளை அளித்து அரியாசனத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். அய்யோ பாவம். நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த தெரியாமல், ஜெயலலிதா படும் பாட்டையும், அவர் மக்களை படுத்தி வைக்கும் பாட்டையும் ஏழை, நடுத்தர மக்கள் இதயம் வெடித்து சாகிற அளவுக்கு வரி உயர்வு, கட்டண உயர்வு, விலை உயர்வு என்று இப்படி உயர்வு, உயர்வு எனக்கூறி தமிழக ஏழைபாழைகளை குழியில் தள்ளி வேடிக்கைப் பார்க்கும் விளையாட்டை அல்லவா இப்போது அவர் நடத்தி வருகிறார்.
மக்களை பழிவாங்கும் காரியத்தை நடத்திக்கொண்டே, அந்தப் பழியைக் கடந்த கால அரசின் மீதும், மத்திய ஆட்சியின் மீதும் போடுவதற்கு அவர் பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறார்.
மக்கள் தலையில் இந்தச் சுமைகளையெல்லாம் ஏற்றி வைத்துள்ள ஜெயலலிதா, தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்ற வரையில் இதற்கெல்லாம் காரணம் கடந்த கால திமுக ஆட்சிதான், அந்த ஆட்சியில் கடன் பளு அதிகமாகிவிட்டது, அவற்றைக் குறைக்கத் தான், என்று பழியை நம்மீது போட்டியிருக்கிறார்.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடன் சுமை இருப்பது உண்மைதான் என்ற போதிலும், அந்தச் சுமையை ஏழையெளிய பொதுமக்கள் தலையிலே சுமத்தக் கூடாது என்பதற்காகத் தான் இந்தக் கட்டணங்களையெல்லாம் கழக ஆட்சியிலே அதிகப்படுத்தவில்லை.
ஆட்சி என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்காக, கொடுமைப்படுத்த அல்ல
ஆட்சி என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்காக இருப்பதே தவிர, அவர்களைப் கொடுமைப்படுத்தி, கட்டணங்களை உயர்த்தி அதிலே இன்பம் காண்பதற்காக அல்ல. கழக ஆட்சிக் காலத்தில் அதிகாரிகள் நிறுவனங்களுக்குள்ள கடன் சுமைகளைக் குறைக்க இந்த கட்டணங்களையெல்லாம் அதிகப்படுத்த வேண்டுமென்று என்னிடமும் கூறுவார்கள். ஆனால் பொதுமக்கள்தானே, அதை ஏற்க வேண்டும்? அவர்கள் எங்கே போவார்கள்? அரசு கடன் பெற்றாவது மக்களுக்கு கெடுதல் வராமல் பாதுகாப்போம் என்றுதான் கூறியிருக்கிறேன்.
யார் பாதிக்கப்பட்டால் எனக்கென்ன, மக்கள்தானே இந்த உயர்வுகளையெல்லாம் சந்திக்கப்போகிறார்கள், ஏற்றுங்கள் கட்டணங்களை, அதிலும் ஒரே நேரத்தில் மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் கட்டணம் என்று அறிவிக்கலாம் என்று சொல்கின்ற மனப்பான்மை எனக்கில்லை. ஏனென்றால் என் இதயத்தில் இரக்கம் இருக்கிறது.
மூத்த அமைச்சர்களாவது முதல்வருக்கு யோசனை கூற வேண்டாமா?
ஒரு அரசு சிந்திக்க வேண்டாமா? ஒரே நேரத்தில் இந்த மூன்று கட்டணங்களையும் உயர்த்தினால் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள், மாதச் சம்பளத்தில் திட்டமிட்டு குடும்பம் நடத்துவோர் ஒவ்வொரு மாதமும் தங்கள் செலவு 500 ரூபாய் அதிகமானால் எப்படி அவர்களால் சமாளிக்க முடியும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? மற்ற மூத்த அமைச்சர்களாவது இதுபற்றி முதல்வருக்கு யோசனை கூற வேண்டாமா? அமைச்சரவைக் கூட்டம் அதற்காகத்தானே நடந்தது. கொலு பொம்மைகளைப் போல வீற்றிருந்து, பாராட்டுக்களை, புகழுரைகளை வழங்குவதிலேயே கவனத்தைச் செலுத்துவது மட்டும் நல்லதா?
குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு பதில், பாலில்லாத கறுப்பு டீ கொடுக்க வேண்டிய நிலை
இந்த உயர்வுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்களில் திருவள்ளூரைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவர், விலை உயர்வு காரணமாக, இனி குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு பதில், பாலில்லாத கறுப்பு டீ கொடுக்க வேண்டிய நிலை, மீண்டும் கற்காலத்திற்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறியிருக்கிறார்.
ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த மற்றொரு குடும்பத் தலைவி, விலை ஏற்றத்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர், பட்ஜெட்போட்டு குடும்பம் நடத்துபவர்கள் மிகவும் சிரமப்படுவர் என்று கூறியிருக்கிறார்.
''ஆக்சிஜன்'' குழாயைக் கழற்றி விட்டிருக்கிறார்
ஜெயலலிதா தனது அறிக்கையில் இறுதியாக வெள்ளம் வரும் முன்பே அணை போட வேண்டும், மரணப் படுக்கையில் உள்ள இந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தற்போது ஆக்சிஜன் வழங்கவில்லை என்றால், அவை செயலற்றுவிடும் என்பதற்காகத்தான் இந்த முடிவினை மேற்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
உண்மையில் அவர் ''ஆக்சிஜன்'' தருக்கிற முயற்சியில் ஈடுபடவில்லை. பொதுமக்கள் தலையிலே இந்தச் சுமைகளையெல்லாம் சுமத்தி, இதுவரை அவர்களுக்குச் செலுத்தப்பட்டு வந்த ''ஆக்சிஜன்'' குழாயைக் கழற்றி விட்டிருக்கிறார் என்பது தான் உண்மையாகும்.
இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ஆகிய மூன்று சுமைகளை தமிழக ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றி அவர்கள் தலைகளை நொறுக்கிட வைத்த பெருமைக்குரியவர் ஜெயா என்று இந்தப் புவியே அவர் புகழ் பாடட்டும்.
இவ்வாறு கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment