Thursday, November 17, 2011

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் செய்த மதிப்பெண் முறை மாற்றம் சட்ட விரோதமானது. உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தேர்வு மதிப்பீடு முறையை கொண்டு வந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். மாணவர்கள், இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜெனரல் சர்ஜரி என்ற ஒரு தேர்வு உள்ளது. அதில் 50 சதவீத மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் இதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதன்படி, ஜெனரல் சர்ஜரி தேர்வு என்பது கிளினிக்கல் சர்ஜரி (செய்முறை), ஆர்த்தோ கிளினிக்கல் (செய்முறை) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

இதன்படி கிளினிக்கல் சர்ஜரி (செய்முறை) தேர்வில் 100-க்கு குறைந்தபட்சம் 50 மதிப்பெண்களும், ஆர்த்தோ கிளினிக்கல் (செய்முறை) தேர்வில் 50-க்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண்களும் பெற்றால் மட்டுமே தேர்ச்சி அளிக்கப்படும் என்று மதிப்பெண் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். ஜெனரல் சர்ஜரி தேர்வில் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதே இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதியாகும். அதன்படி நாங்கள் தேர்ச்சி பெற தகுதி பெற்றிருக்கிறோம்.

இந்த விதிமுறைக்கு முரணாக, அந்தப் பாடத்தை இரண்டாகப் பிரித்து, மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றத்தால் நாங்கள் தேர்ச்சி பெற இயலவில்லை. இந்த மாற்றம் சட்ட விரோதமாகும்.

எனவே, மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீது கடந்த ஜூன் மாதம் விசாரணை நடத்திய நீதிபதி என். ஜோதிமணி, மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.



இதனை எதிர்த்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நர்மதா சம்பத், கடந்த 30 ஆண்டுகளாக தேர்வு முறையில் மாற்றம் செய்யவில்லை. நவீன மருத்துவ உலகில் அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் புலமை பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜெனரல் சர்ஜரி பாடத்தில் ஒரு பகுதியில் கவனம் செலுத்தும் மாணவர்கள், ஆர்த்தோ போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துவதை தவிர்த்து விடுகின்றனர்.

எனவே, ஆர்த்தோ உள்பட மருத்துவப் படிப்பின் எல்லா பகுதிகளிலும் மாணவர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதாலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று வாதிட்டார்.

மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ். தங்கசிவன், நடப்பு கல்வி ஆண்டு மத்தியில் இந்த முறையை கொண்டு வந்ததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட பாடத்தை இரண்டாகப் பிரித்து தேர்வு நடத்துவதன் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என்ற முடிவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வாறு வந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதிகள் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய மதிப்பீட்டு தேர்வு முறையானது இந்திய மருத்துவ கல்வி கவுன்சில் சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது.

மேலும் இந்த புதியமுறை தன்னிச்சையாக உள்ளது. ஆகவே, மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றத்தை ரத்து செய்து தனி நீதிபதி ஜோதிமணி பிறப்பித்த உத்தரவு செல்லும். பல்கலைக்கழகத்தின் அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம். எனினும், ஆர்த்தோ போன்ற மருத்துவப் படிப்பின் எல்லா பிரிவுகளிலும் மாணவர்களை கவனம் செலுத்தச் செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி இந்திய மருத்துவக் கவுன்சிலுடன் கலந்தாலோசித்து, பல்கலைக்கழக நிர்வாகம் உரிய முடிவை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், இப்போது மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றம் சட்ட விரோதமானது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

No comments: