Friday, November 4, 2011

600 அறைகள், நவீன வசதிகளுடன் கிண்டியில் உருவாகும் பிரமாண்ட ஓட்டல்.



சென்னை கிண்டியில் ஸ்பிக் பில்டிங் அருகே ஐ.டி.சி. நிறுவனம் பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டலை கட்டி வருகிறது. 8 ஏக்கர் பரபரப்பளவில் தரை தளம் மற்றும் 10 மாடி கொண்டதாக கட்டப்பட்டு வரும் இந்த ஓட்டலில் 600 அறைகள் நவீன வசதிகளுடன் உள்ளன.

இந்த ஓட்டலின் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., விமான நிலைய அதிகாரிகள், தீயணைப்பு துறை ஆகியோரிடம் ஓட்டல் நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது.

ஆனால் சென்னை மாநகராட்சியும், சி.எம்.டி. ஏ.வும் தீயணைப்பு துறையும் ஹெலிகாப்டர் தளத்துக்கு அனுமதி தரமுடியாது என்று கூறி தடையில்லா சான்று (என்.ஓ.சி.) கொடுக்க மறுத்து விட்டது.

ஓட்டலின் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கும்போது பக்கத்து கட்டிடங்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படும் என்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைய வாய்ப்பு ஏற்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் ஐ.டி.சி. அதிகாரிகள் கூறுகையில் நாங்கள் கட்டி வரும் கிராண்ட் சோழா ஓட்டலில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

பெங்களூரில் உள்ள ஐ.டி.சி. குரூப் ஓட்டலான கார்டினியாவில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி இருப்பதால் அதேபோல் இங்கும் ஹெலிகாப்டர் இறங்க வசதி ஏற்படுத்துகிறோம். ஆரம்பத்தில் ஹெலிபேட் இல்லாத வகையில் பிளான் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.

இதனால் திருத்திய பிளான் வடிவமைப்பை சி.எம்.டி.ஏ.வில் வழங்கினோம். ஆனால் அவர்கள் அனுமதி தரவில்லை. இந்த ஓட்டலை மார்ச் மாதத்திற்குள் திறக்க முடிவு செய்திருப்பதால் ஹெலிபேட் வசதி இன்றி திறக்க முடிவு செய்துள்ளோம்.

ஆனால் விரைவில் ஓட்டல் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்க அனுமதி வாங்கி விடுவோம் என்றனர். சென்னையில் உள்ள ஓட்டல்களில் இதுவரை ஹெலிகாப்டர் வந்திறங்கும் வசதி எந்த ஓட்டலிலும் கிடையாது.

கிண்டியில் கட்டப்பட்டு வரும் கிராண்ட் சோழா ஓட்டலில்தான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அரண்மனை போல் காட்சியளிக்கும் இந்த ஓட்டலை அந்த வழியாக செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

No comments: