Thursday, September 29, 2011

முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் அவசரம்.



நாட்டில் முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரச் செய்ய எதிர்க்கட்சிகள் மிகுந்த அவசரப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய அவர் விமானத்தில் நிருபர்களிடம் பேசுகையில், மத்திய அமைச்சரவையில் யாருக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

5 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர். எனவே இன்னும் 2 ஆண்டுகள் காத்திருங்கள் என்று, எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் அரசு பற்றிய சில பலவீனமான அம்சங்களை வைத்துக் கொண்டு, முன்கூட்டியே தேர்தலை திணித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த அரசைக் கவிழ்க்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால், மக்கள் அனுமதி அளித்து உள்ளபடி, 5 ஆண்டுகளுக்கு இந்த அரசு நிச்சயம் நீடிக்கும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர்களுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு நினைக்கிறது. அமைச்சரவையில் எப்போதும் திறந்த மனதுடன் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அமைச்சர்களுக்குள் பல்வேறு எண்ணங்கள், கருத்துகள் இருக்கலாம். இதனால், எங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று அர்த்தமல்ல. கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகி வருவது போல் (பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு) எதுவும் நடக்கவில்லை. ப.சிதம்பரம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாடாளுமன்றத்தில் பல முக்கியமான மசோதாக்கள் விவாதிக்கப்படக் காத்திருக்கின்றன. ஆனால், தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பிக் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி நாடாளுமன்றம் செயல்படாமல் தடுக்கப்படுவதால் அந்த மசோதாக்கள் நிறைவேறாமல் முடக்கப்பட்டுள்ளன.

காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது, பென்சன் சீர்திருத்தம், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு பொது கொள்முதல் கொள்கை மற்றும் லோக்பால் போன்ற முக்கிய பொருளாதார சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

ராணுவத் தலையீடு மூலம் இன்னொரு நாட்டில் உள்நாட்டுப் பிரச்னையைத் தீர்க்க முயல்வது ஆபத்தில் முடியும். லிபியாவில் ஆட்சி மாற்றத்தால் அங்கே அமைதி நிலவிவிடும் என்று நம்ப முடியவில்லை. உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்தால் அதன் விளைவுகள் லிபியாவை ஒரு சோமாலியா போல மாற்றிவிடக் கூடும் என்றார் மன்மோகன் சிங்.

ராஜீவ் கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மூன்று பேருக்கும், அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் காங்கிரஸ் தவிர்த்து இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் கோரிக்கை எழுப்பி வருவது குறித்துக் கேட்டதற்கு, அது குறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் சட்டத்தின் மேலாண்மை நிலைநிறுத்தப்படும் என்பதை மட்டும் தான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து கேட்டதற்கு, இது தொடர்பாக தமிழகத்தில் எழுப்பப்படும் எதிர்ப்புகள் விரும்பத்தக்கதல்ல. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துகள் பற்றித் தெரிந்த பின்னும் அரசு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கூடங்குளம் போன்ற அணு மின் நிலையங்களை அமைக்க முன் வருமா என்பதை அவர்கள் யோசிக்க வேண்டாமா?.

இந்தியாவிலேயே தமிழகம்தான் தொழில் வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மாநிலமாக வளர்ந்திருக்கிறது. இந் நிலையில் தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால் அணு மின் நிலையம் அமைப்பதைத் தவிர வேறு உடனடி மாற்று வழியேதும் இல்லை. சுற்றுச்சூழலை பாதிக்காமல், குறைந்த செலவிலும் எரிசக்தி வேண்டுமானால், நாம் அணு மின் சக்தியை பயன்படுத்தியே தீர வேண்டும் என்றார்.

No comments: