Thursday, September 29, 2011

இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு உலக மயமாக்கல் தான் காரணம் : மன்மோகன்சிங்.



அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பியக் கூட்டமைப்பு போன்ற வல்லரசுகளின் பொருளாதாரப் பிரச்னைகளால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு உலக மயமாக்கல் தான் காரணம். உலகமயத்தால் பல நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும், ஆரம்ப கால நன்மைகளை அதன் பின் விளைவுகள் பாதிக்கத் தொடங்கியுள்ளன.

நான் சோஷலிஸ்டாக இருந்து, உலக மயமாக்கலின் ஆதரவாளனாக மாறி இருப்பவன் என்கிற குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். அந்தந்த சூழ்நிலையில் நாட்டுக்கு எது நன்மை பயக்குமோ, அதை ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். உலக மயமாக்குதல் மூலமும், பொருளாதார சீர்திருத்தம் மூலமும் பல நன்மைகளை இந்தியா அடைந்திருக்கிறது. இதன் பயன் எல்லா தரப்பினரையும் போய்ச் சேர்ந்தாக வேண்டுமென்றால், சில மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும்.

விலைவாசி உயர்வு என்பது உலகளாவிய பிரச்சனை. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. சீனாவில் விலைவாசியால் மக்கள் நம்மைவிட மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, உணவு தானியங்களின் விலைவாசி ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், காய்கறிகள், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றின் விலை தான் மிக அதிகமாக உள்ளது. மக்களின் வருமானம் உயர்ந்திருப்பதும், அவர்கள் இதுபோன்ற ஆரோக்கியமான சத்துணவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதும்தான் இதற்குக் காரணம்

நமது தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால்தான் இந்த விலைவாசி உயர்வே தவிர பணவீக்கத்தால் ஏற்பட்ட விலைவாசி உயர்வாக இதைக் கருத முடியாது என்றார்.

No comments: