சேலம் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு புகாரில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சேலம் அங்கம்மாள் காலனி நில பிரச்சினை வழக்கு, சேலம் 5 ரோடு ரோலர் பிளவர் மில் நில பிரச்சினை, சேலம் தாசநாய்க்கன்பட்டி பாலமோகன்ராஜ் நில பிரச்சினை வழக்குகள் அவர் மீது போடப்பட்டது.
இதன் பின்னர் சேலத்தை சேர்ந்த நகைக்கடை அதிபர் பிரேம்நாத் கொடுத்த புகாரும் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 40 நாட்களுக்கும் மேலாக அவர் ஜெயிலில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சென்னையில் தங்கி இருந்து தினமும் பூக்கடை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதையடுத்து சேலம் வக்கீல்கள் மூர்த்தி, துரைராஜ் ஆகியோர் நேற்று சேலம் 4-வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை ஜாமீனில் எடுக்க ஆவணங்களை தாக்கல் செய்து ஜாமீன் தொகையை கட்டினார்கள்.
ஜாமீன்தாரர்களின் வீட்டு வரி ரசீது, ரேசன் கார்டு ஆகியவற்றை அவர்கள் தாக்கல் செய்தனர். இரண்டு ரசீதுகளிலும் வீட்டு வரி செலுத்திய நாள் 24.7.2011 என்று குறிப்பிட்டு இருந்தது. இதனால் இந்த வீட்டு வரி ரசீதுகள் உண்மையானதுதானா, என்று மாஜிஸ்திரேட்டு ஸ்ரீவித்யா கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வக்கீல்கள் அவை உண்மையான ரசீதுகள் என கூறினர்.
இதைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட்டும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன் உத்தரவை வழங்கினார். இந்த உத்தரவு நகல் தபால் மூலம் திருச்சி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தபால் இன்று காலைதான் திருச்சி சிறைக்கு கிடைக்கும். இதனால் வீரபாண்டி ஆறுமுகம் இன்று பகலில் விடுதலை ஆவார் என்று கூறப்படுகிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் திருச்சியில் இருந்து நேராக சென்னை சென்று சிகிச்சை பெறலாம் என்றும், சிகிச்சை பெற்றுக்கொண்டே பூக்கடை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடலாம் என்றும் நிர்வாகிகள் சிலர் கூறினர்.
சேலம் அ.தி.மு.க.வக்கீல் மணிகண்டன் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது புகார் தெரிவித்து இருந்தார். இதன் மீது சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாஸ்கரன் மற்றும் உயர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த புகார் அல்லது வேறு ஏதும் புகார்களில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் சிலர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment