Thursday, September 8, 2011

டிவி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியால் ஆத்திரப்பட்டு, பாதியிலேயே வெளியேறிய கேரள முதல்வர்.



கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின்போது, பேட்டி எடுப்பவர் கேட்ட கேள்வியால் கோபமுற்று, பாதியிலேயே வெளியேறினார். இது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தின் மலையாள சானல் ஒன்றுக்கு மாநில முதல்வர் உம்மன் சாண்டி பேட்டியளித்துக் கொண்டிருந்தார். இந்தப் பேட்டி 45 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ற வகையில் அவர் நேரம் கொடுத்திருந்தார். ஆனால், 25 நிமிடங்கள் கூட தாண்டியிருக்காத நிலையில், நிகழ்ச்சியின் இடையிலேயே விருட்டென அவர் வெளிக்கிளம்பினார். இந்த நிகழ்ச்சி, முதல்வரின் பதவியேற்ற நூறாவது நாளை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது. அதில்தான் முதல்வருடனான நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பாலக்காடு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கான நிலம் ஒதுக்கீட்டில், ஆதிவாசிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது குறித்து பேட்டி எடுத்த வேணுவின் கேள்வியால் நிதானத்தை இழந்தார் உம்மன் சாண்டி. மேலும், சென்ற இடதுசாரி ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த காசர்கோடு துப்பாக்கிச் சூடு முறைகேட்டினை விசாரிக்கும் நீதி விசாரணைக் குழு மாற்றப்பட்டது குறித்து சரமாரியாகக் கேள்வி கேட்கப்பட்டது அவரை ஆத்திரப்பட வைத்துள்ளது.

இதனால் நடுவிலேயே எழுந்து அவர் சென்றது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சாண்டியின் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள், முதல்வர் இவ்வாறு சென்றதைக் கண்டு தாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றதாகத் தெரிவித்துள்ளனர். பொதுவாக, அவர் தன்னிலை இழக்கக் கூடியவர் அல்லர். மிகவும் அமைதியாகத்தான் இருப்பார் என்றார் ஓர் அதிகாரி. இருப்பினும், அந்த நிகழ்ச்சியானது தொடக்கத்தில் இருந்தே ஏதோ நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி ஒருவரைக் கேள்வி கேட்பது போல் சென்று கொண்டிருந்தது. இதனால், ஏற்படும் பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு, மேலும் மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க அவர் மெதுவாக வெளியேறியிருக்கலாம் என்கிறார்கள்.

தனது நூறு நாள் நிகழ்வுகளை வெளிப்படையாக அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் அவர் சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: