Thursday, September 8, 2011

சென்னையில் சிகரெட் பாக்கெட்டுடன், லைட்டர் இலவசம்.


புகை பிடித்தல் ஒரு கொடிய உயிர்க்கொல்லும் பழக்கம். இந்திய நாடு முழுவதும் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் புகையிலைத் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உரிய வயதாகும் முன்பே இறக்கின்றனர். அதாவது ஒவ்வொரு நாளும் 2500 பேருக்கு மேல் சாகிறார்கள். புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலவச பரிசுடன் சிகரெட் விற்பனை செய்யப்படும் அவலம் சென்னையில் நடக்கிறது. இந்த சட்ட விரோத செயலை உடனடியாக தடுத்து நிறுத்தி, குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு தண்டிக்க வேண்டும்.

சுதந்திர தினத்தினை முன்னிட்டு, ரெட் அண்டு வொயிட் பாக்கெட் சிகரெட் உடனும் ஒரு லைட்டர் இலவசமாகப் பெறுங்கள் எனும் விளம்பரம் சென்னை நகரம் முழுவதிலும் ஏராளமான கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. இதற்காக சிகரெட் பாக்கெட்டுடன் லைட்டர் கொண்ட சிறப்பு அன்பளிப்பு பாக்கெட்டினை வெளியிட்டு விற்று வருகின்றனர்.

புகையிலை பொருள் நிறுவனங்கள் எதுவும் அவற்றுடன் இலவச இணைப்புகள் எதையும் அளிக்கக் கூடாது, அவ்வாறு இலவச இணைப்பு அளிப்பதாக விளம்பரமும் செய்யக்கூடாது என இந்திய புகையிலைக் கட்டுப்பாடு சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல கடைகளில் இலவச இணைப்பும் அளிக்கப்படுகிறது.

இந்த குற்றங்களுக்கு 2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்க புகையிலைக் கட்டுப்பாடு சட்டத்தில் இடமிருந்தும் ஒருவர் மீது கூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவின் சுதந்திர தினத்தை அவமதிப்பது இந்திய தேசிய நன்மதிப் பிற்கு இழுக்கு ஏற்படாமல் தடுக்கும் சட்டத்தின்படியும் தண்டனைக்குரிய குற்றமாகும் இந்த சட்டத்திற்கு எதிராக இந்திய சுதந்திரநாளை இழிவுபடுத்தும் வகையில் இளைஞர்களை கொலை செய்யும் ஒரு பொருளை சுதந்திரதினம் அன்று முதல் சுதந்திரத்தின் சுவை என விளம்பரம் செய்கின்றனர்.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் 850 கோடி சிகரெட்டுகள் விற் கப்படுவதாகவும், அதில் 84 கோடி சிகரெட்டுகள் தமிழ்நாட்டில் விற்கப்படு வதாகவும் சிகரெட் நிறு வனங்கள் கூறுகின்றன. ஆந்திர மாநிலத்துக்கு அடுத்த படியாக நாட்டிலேயே அதிக சிகரெட் விற்கும் 2-வது மாநிலம் என்கிற அவப்பெயரை தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்தியாவில் விற்கும் மொத்த சிகரெட்டில் 10 சதவீதம் தமிழ்நாட்டில் விற்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய விளம்பரங்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துவதுடன் இலவச இணைப்புடன் சிகரெட் விற்பனை தடுத்து நிறுத்த வேண்டும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஉள்ளார்.Justify Full

No comments: