Sunday, August 14, 2011

லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியும் என உறுதியளிப்பாரா ஹஸாரே ? - மத்தியஅரசு கேள்வி.



லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தால் இந்தியாவை விட்டு ஊழலை விரட்டி விட முடியும் என்று உறுதியளிக்க அன்னா ஹஸாரேவால் உறுதியளிக்கத் தயாரா என்று மத்திய அமைச்சர்கள் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில்,

அரசியமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை, ஊழல் ஒழிப்பு தொடர்பாக அரசுகள்தான் சட்டம் கொண்டு வர முடியுமே தவிர மற்றவர்கள் அதில் குறுக்கிட அதிகாரம் இல்லை. யாருமே இப்படித்தான் சட்டம் இருக்க வேண்டும் என அரசுகளை நிர்ப்பந்தப்படுத்த முடியாது. தங்களது சுய விருப்புகளுக்கேற்ப ஒரு சட்டத்தை அரசுகள் கொண்டு வர முடியாது. நாடாளுமன்றம்தான் இதை முடிவு செய்ய முடியும்.

அன்னா ஹஸாரே இன்று செய்து கொண்டிருப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும். நாடாளுமன்றத்தையே அவர் கேள்வி கேட்கிறார். இது ஏற்றுக் கொள்ளவே முடியாததாகும்.

செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது மத்திய அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதாவும் சரி, அன்னா ஹஸாரே சொன்ன மசோதாவும் சரி இந்தியாவில் ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது.

லோக்பால் மசோதா சட்டமானதுமே இந்தியாவில் ஊழல் ஒழிந்து விடும் என அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் உத்தரவாதம் அளிக்க முடியுமா. அன்னா ஹஸாரே குழுவினர் நாட்டை திசை திருப்பி வருகின்றனர் என்றார்.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், ஒவ்வொருவரும் போராட உரிமை இருக்கிறது. அதில் மாற்றமில்லை. ஆனால் இஷ்டப்பட்ட இடத்தில் போராட உரிமை இல்லை.

அன்னா சுய விளம்பரம் தேடுகிறார். டிவி செய்திகள், மீடியாக்களில் தனது முகம் தெரிய வேண்டும் என விரும்புகிறார். பிரதமருக்கு எதிராக தேவையில்லாமல் கொந்தளிக்கிறார்.

மத்திய அரசு ஜனநாயக விரோதமாகநடந்து கொள்வதாக கூறுகிறார். அன்னா ஹஸாரே குழுவினரை விட ஜனநாயக விரோதவாதிகள் யாருமே கிடையாது. அன்னாவின் போராட்டங்களுக்கு நிதியுதவி செய்வது யார் என்பதை அவர்களால் விளக்க முடியுமா என்று கேட்டார் சிபல்.

1 comment:

M.Mani said...

நிச்சயமாக முடியாது. மனிதர்கள் மாறினால்தான் முடியும். சோனியா,ராகுல் மற்றுமுள்ள காங்கிரஸ்காரர்கள் ஊழல் பெருச்சாளிகள். இவர்களிடம் எந்த சட்டமும் ஊழலுக்குத்தான் துணை போகும். எ.கா. போபர்ஸ் ஊழல்.
ஆனால் லோக்பால் போன்ற சுயேச்சையான அமைப்பிருந்தால் ஓரளவு இந்தப்பெருச்சாளிகளை கட்டுப்படுத்தலாம்.