தங்களிடம் ஒரு குண்டுமணி அளவிலாவது தங்கம் வீட்டில் இருக்க வேண்டும். தங்கத்தால் மட்டுமே வீட்டில் செல்வம் தங்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நம்நாட்டுப் பெண்கள். இன்றைய நிலையில், தங்கத்தின் விலை விண்ணைத்தாண்டிச் செல்லும் அளவில் உயர்ந்து வருவது அவர்களை மட்டுமன்றி, பெற்றோர்களிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணச் சீர்வரிசைகளில் தங்கம் முக்கிய பங்கு வகித்தாலும், பிறந்தநாள், காதணி, பூப்புனித நீராட்டு, திருமணம், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை, விழாக்கள் என பல்வேறு விழாக்களிலும் பரிசளிக்கப்படும் முக்கிய ஆபரணமாக தங்கம் விளங்குகிறது.
விழாக்காலங்களில் பெண்கள் தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு வீதிகளில் நடமாடும்போது அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அளவை வைத்தே அவர்களது குடும்பத்தின் கௌரவம் நிர்ணயிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. இதனால்தான், கிராம மக்கள் ஒரு குண்டுமணி அளவு தங்கமாவது வீட்டில் வாங்கி வைப்பது வழக்கம். அதுவும் பெண் குழந்தை பிறந்து விட்டால், பிறந்தநாள் முதலே அந்தக் குழந்தைக்காகப் படிப்படியாகத் தங்கம் வாங்குவதை நடைமுறைப்படுத்திக் கொள்வர்.
முந்தைய காலங்களில் அவரவர் தகுதிக்கேற்ப ஆபரணங்கள் செய்வதற்கு தங்கம் வாங்குவர். இதனால் தங்கத்தின் விலை கட்டுக்குள் இருந்தது. எனவே, அன்றாடம் கூலி வேலை செய்யும் பாமரர்கள் கூட குண்டுமணி அளவிலாவது தங்கம் வாங்க முடிந்தது.ஆனால், இன்று தங்கத்தின் விலை "ஆன் -லைன்' ஆசியால் கடுமையாக ஆட்டம் போட்டு வருகிறது. ஆன்- லைன் வர்த்தகம் மூலம் தங்கம் அதிக அளவில் வாங்கப்படுவதுதான் இன்று தங்கத்தின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதற்குக் காரணம்.
குறைந்த அளவில் "மார்ஜின்' பணம் செலுத்தி, அதிக அளவில் தங்கம் வாங்கும் வசதி ஆன் - லைனில் உள்ளது. அதாவது, ஒருவர் 100 கிராம் தங்கம் கடையில் வாங்க வேண்டுமானால், தங்கத்தின் அன்றைய விலைக்கு ஏற்ப மொத்தப் பணத்தையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்க முடியும். ஆனால், ஆன் - லைனில் 100 கிராம் தங்கத்தின் விலையில் 10 சதவீத அளவு "மார்ஜின்' பணம் செலுத்தினாலேயே 100 கிராம் தங்கத்தை வாங்கி விடலாம். இது ஆன் - லைன் வர்த்தகத்தில் மட்டுமே சாத்தியம்.
ஆன் - லைனில் தங்கம் வாங்குவோர் அவர்களது தேவையைத் தாண்டி பல கோடி ரூபாய்க்கு ஆன் - லைன் மூலம் தங்கத்தை வாங்கி விற்கின்றனர். இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பது போன்ற மாயத்தோற்றம் உருவாகி தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்கிறது. ஆனால், உண்மையிலேயே தங்கத்தை ஆபரணமாகச் செய்து பயன்படுத்த நினைக்கும் பொதுமக்களோ, தங்கத்தின் விலை ஏற்றத்தை எண்ணி ஏக்கப்பெருமூச்சு மட்டுமே விடமுடிகிறது.
தற்போது அமெரிக்கப் பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையால் உலகப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. எனவே, பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனமும் ஆன்- லைன் தங்கத்தின் மீது திரும்பியதால், தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 2,500ஐ நெருங்குகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலையேற்றம் மக்களின் சமூக - பொருளாதாரப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கத்துக்காகக்கூட கொலை செய்யும் சமூக விரோதிகள் பெருகி வருகின்றனர்.இது மட்டுமல்லாமல், ஆன்- லைனில் தங்கம் வாங்குபவர்கள் நீண்டநாள்கள் வைத்திருப்பதில்லை. உடனடியாக அதை விற்றுக் காசாக்கி விடுவர். இது தேசத்துக்கு ஆபத்து. ஆனால், பொதுமக்கள் தங்கள் தேவைக்காக வாங்கும் தங்கத்தை நீண்டநாள்களுக்கு சேமித்து வைத்திருப்பர். இது தேசத்துக்குப் பாதுகாப்பு.
தங்கத்தின் விலை ஏற்றம் இதேபோல் நீடித்தால், யாராலும் தங்கத்தை எளிதில் வாங்க முடியாத நிலை ஏற்படும். அப்போது ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தை நீக்கும் கட்டாயம் ஏற்படும். அப்படி ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கம் நீக்கப்பட்டால், தங்கத்தின் விலை தலைகீழாகச் சரிந்துவிடும். அப்போது ஏற்படும் நஷ்டம் அனைத்தும் சிறுகச்சிறுகச் சேர்ந்து, தற்போது தங்கம் வாங்கி சேமித்து வைக்கும் சாதாரணப் பொதுமக்களின் தலையில்தான் விழும். இது நம் தேசத்தின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும்.
எனவே, நமது தேச மக்களின் வாழ்வோடும், கலாசாரத்தோடும் ஒன்றிவிட்ட தங்கம், பாமரனுக்கு காட்சிப்பொருளாக மட்டும் மாறிவிடாமல் தடுக்க, அதன் விலையைக் கட்டுப்படுத்தி நிலைப்படுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஆன்- லைனில் இருந்து உடனடியாக தங்கத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தினமணி
1 comment:
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment