இந்தியாவில் முதன்முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சென்னையில் நடைபெற உள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் கிர்சன் இலயும்ழினோவ் சந்தித்தார். அப்போது 2012-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டியை சென்னையில் நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இதுவரை இந்தியாவில் சதுரங்கப் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற 24 பேரில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். உலக சதுரங்கத்தில் இந்தியா 7-வது இடத்தைப் பெற்றுள்ளது.
2012-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டி, தற்போதைய உலக வாகையரான கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் போரிஸ் கெல்ஃபேண்டு ஆகியோரிடையே நடைபெறும்.
இந்தப் போட்டியை 2012-ஆம் ஆண்டு சென்னையில் நடத்திட முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார். உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டி இதுவரை இந்தியாவில் நடைபெற்றதில்லை முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்கான செலவு சுமார் 20 கோடி ரூபாய் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment