Saturday, July 2, 2011

இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதா? சீமான் கண்டனம்.

இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதா?  சீமான் கண்டனம்

நாம் தமிழ் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கை ராணுவத்தின் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் ராணுவ பயிற்சிக்கழகங்களில் திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும்.

இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. டெல்லியில் நேற்று இலங்கை ராணுவத்தின் செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்கே தலைமையிலான குழுவுடன் இந்திய ராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவிற்கான கூடுதல் தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங். தலைமையிலான குழு டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளதென இந்திய ராணுவ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப்போர் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

தமிழர்களை இனப்படு கொலை செய்த இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்க உலகநாடுகளுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு நேர் மாறாக, தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய ராணுவம் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலையை ஆதரிக்கிறது என்பது மட்டுமின்றி தமிழர்களின் குரலாக எதிரொலித்த தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தையும் அவமதிப்பது ஆகும்.

இந்திய ராணுவத்தின் இம்முடிவு, அது தமிழினப் படுகொலையில் இலங்கை ராணுவத்திற்கு முழுமையாக உதவியுள்ளது என்பதற்கு மேலும் ஒரு அத்தாட்சியாகும். இலங்கை ராணுவத்தின், அந்நாட்டு அரசின் மனிதாபிமான முகம்தான் இன்றைக்கு உலகெங்கிலும் கண்டனத்திற்குரியதாக உள்ளது ஐ.நா. அமைதிப்படையின் அங்கமாக ஹைட்டி நாட்டிற்குச் சென்ற இலங்கை ராணுவத்தினர், அந்நாட்டின் சிறுமிகளின் மீது பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்று குற்றம் சாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஆனால் இந்தியாவின் ராணுவமோ அந்நாட்டிற்கு மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றிக்கற்றுத் தரப்போகிறேன் என்கிறது. இதை விடக் கேலிக்கூத்தும் கொடூரமும் வேறு என்ன இருக்க முடியும்? பன்னாட்டு மனிதாபிமானப் பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள நாடான இந்தியாவின் ராணுவம், அந்தப் பிரகடனங்களின்படி குற்றமிழைத்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவால் குற்றஞ் சாற்றப்படும் நாட்டிற்கு ராணுவ பயிற்சி அளிக்க முன்வந்திருப்பது, மனிதாபிமான பிரகடனங்களை அவமதிப்பது ஆகும்.

இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை இலங்கைத் தொடர்பான இந்திய அரசின் தவறான போக்கு தடையற்று தொடருவதையே காட்டுகிறது. இதனை தமிழர்களும், தமிழக அரசும் புரிந்து கொள்ளவேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் போக்கு நியாயமற்றதாகவே எதிர்காலத்திலும் இருக்கும் என்பதற்கு இந்திய ராணுவத்தின் இந்த முடிவு ஒரு சரியான அறிகுறியாகும்.

இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.

No comments: