Friday, January 20, 2012

ஆதார் அடையாள அட்டை : தேச பாதுகாப்புக்கு பிரச்சனை வரலாம் - ப.சிதம்பரம்.



நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் ஆதார் தேசிய அடையாள அட்டைக்காக மக்களிடம் கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளை (biometric data) பதிவு செய்வதில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை என்றும், இதனால் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படலாம் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இந்த விஷயத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, இதை மத்திய அமைச்சரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சிதம்பரம் கோரியுள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நந்தன் நீலேகனி தலைமையில் ஆன குழுவிடம் இந்த ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் சில ஆண்டுகளுக்கு முன் ஒப்படைத்தார்.

இதையடுத்து இந்த அட்டையை விணியோகிக்க முதலில் வீடு வீடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்தப் பணிகள் முழுமையாக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந் நிலையில், இந்த அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியும் கைரேகைகள் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்கும் பணியும் ஆரம்பித்துவிட்டது. தபால் நிலையங்கள் உள்ளிட்ட சில இடங்களில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.

ஆனால், இந்த அட்டை வழங்கும் பணியில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாகவும், தேசப் பாதுகாப்புக்கு இது பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார் ப.சிதம்பரம்.

அவரது கருத்தைப் பொருட்படுத்தாமல் நீலேகனி தலைமையிலான குழு, இந்தப் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந் நிலையில், பிரதமரருக்கு சிதம்பரம் கடிதம் எழுதி, இதில் உள்ள குழப்பங்களை முதலில் நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

மக்களிடம் பயொமெட்ரிக் தகவல்களை மந்திய உள்துறையின் கீழ் வரும் மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலக ஊழியர்கள் பெற வேண்டுமா அல்லது நீலேகனி தலைமையிலான தேசிய அடையாள அட்டைக் குழுவே பெறலாமா என்பதிலேயே குழப்பம் உள்ளது.

மேலும் இப்போது சேகரிக்கப்பட்டு வரும் தகவல்கள் முழுமையானதாக இல்லை, மக்கள் தரும் விவரங்கள் சரியா என்பதும் சரிபார்க்கப்படாமல் அப்படியே ஏற்கப்படுகின்றன. இது எதிர்காலத்தில் தேச பாதுகாப்புக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று ப.சிதம்பரம் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

ஆதார் அடையாள அட்டை தொடர்பாக நந்தன் நீலகேனி மத்திய அமைச்சரவை யில் ஒப்புதல் பெறாமலேயே தகவல்களை சேகரிக்கத் தொடங்குகிறார் என்று முன்பே சிதம்பரம் குற்றம் சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய பதிவாளர் ஜெனரலின் பணிகளில் நீலேகனி தலையிடுவதாகவும், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரலின் பொறுப்பை தானே எடுத்துக் கொள்ள விரும்புகிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

No comments: