Monday, December 26, 2011

முதல் முறையாக கைதான தேமுதிக தலைவர் விஜயகாந்த்.



அரசியலுக்குப் புகுந்த பின்னர், அரசியல்வாதியாக மாறிய பின்னர், எம்.எல்.ஏவான பின்னர், எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் முதல் முறையாக கைதாகியுள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்த் பொதுவாக பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துபவரில்லை. நடத்த விரும்பியதும் இல்லை. இதுகுறித்து அவரே கூறுகையில், மக்களைப் பாதிக்கும் வகையில் எந்தவிதமான போராட்டத்தையும் நடத்த மாட்டேன் என்று கூறுவார். இதனால் அவர் இதுவரை ஒருமுறை கூட போராட்டம் நடத்திக் கைதானதில்லை.

விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்து முறைப்படி அரசியலுக்கு வந்த பின்னர் பெரிய அளவில் போராட்டங்கள் எதையும் நடத்தியதில்லை. அதிகபட்சமாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் அவர் ஈடுபட்டுள்ளார். மற்றபடி சாலை மறியல் உள்ளிட்ட எந்தவகையான போராட்டத்திலும் அவர் ஈடுபட்டதில்லை. அதுவும் சமீபத்தில்தான் அவர் பிரமாண்டமான வகையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதான் அவரது கட்சி சார்பில் நடந்த பிரமாண்டமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தையும் கூட தனது கட்சி தலைமை அலுவலக வளாகத்திலேயே வைத்துக் கொண்டார் விஜயகாந்த்.

இந்த நிலையில் முதல் முறையாக அவர் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தபோது கட்சியினர் உண்மையிலேயே குஷியடைந்தனர். காரணம், இப்போதுதான் முதல் முறையாக ஒரு வலுவான போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்துள்ளார் என்பதால். இதனால் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அவர்கள் ஆயத்தமாக இருந்தனர்.

ஆனால் இன்று காலை தனது வீட்டை விட்டு கிளம்பியுடனேயே விஜயகாந்த்தைப் போலீஸார் கைது செய்து பஸ்சில் ஏற்றிக் கொண்டு போய் விட்டனர்.

இதனால் விஜயகாந்த், நேரில் போய் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்ட முடியாமல் போய் விட்டது. இருப்பினும் இதுவரை ஒருமுறை கூட கைதாகாத அரசியல்வாதி என்ற பெயருடன் வலம் வந்த விஜயகாந்த் அதை முறியடித்து முதல் முறையாக கைதாகியுள்ளார் என்பது தேமுதிகவினருக்கு ஆறுதலான விஷயம்தான்!

No comments: