லோக்பால் மசோதா ஒருபக்கம் நிறைவேறினாலும் காங்கிரஸுக்கு நேற்று ஷாக் கொடுத்தது, அரசியல்சாசன அந்தஸ்து தரும் மசோதா தோல்வி அடைந்ததுதான். இதை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. 273 உறுப்பினர்களைக் கூட திரட்ட முடியாமல் போனது ஒருபக்கம் இருந்தாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் அவைக்கு வராமல் இருந்தது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று லோக்சபாவில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அந்த அமைப்புக்கு அரசியல்சாசன அந்தஸ்து தர வகை செய்யும் மசோதாவை அரசால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. இதற்குக் காரணம் அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லாமல் போனதே.
குறைந்தபட்சம் 273 உறுப்பினர்களாவது அவையில் இருக்க வேண்டும். ஆனால் நேற்று வெறும் 250 பேர்தான் இருந்தனர். இது காங்கிரஸை கடும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டது. அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. எனவே ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக கொடி தூக்க ஆரம்பித்து விட்டது.
லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து தரலாம் என்று ஐடியா கொடுத்ததே ராகுல்காந்திதான். அவரது ஐடியா எடுத்த எடுப்பிலேயே புஸ்வாணம் ஆனதால் அவரும் கடும் அதிருப்தியில் உள்ளார்.
நேற்று நடந்த வாக்கெடுப்பின்போது பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. அதேசமயம், காங்கிரஸ் எம்.பிக்களில் கிட்டத்தட்ட 20 பேர் அவையில் இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தும் கூட இந்த 20 பேரும் அவையில் இல்லாமல் போனது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
No comments:
Post a Comment