Thursday, December 1, 2011

மகாராஷ்டிராவில் கர்நாடக மக்களுக்கு எதிராக கலவரம் வெடிப்பதைத் தடுக்க முடியாது. பால்தாக்கரே.



பிரபல கன்னட எழுத்தாளரும், ஞானபீட விருது பெற்றவருமான சந்திரசேகர கம்பராவின் மராத்தியர்கள் குறித்த கருத்துக்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மகாராஷ்டிராவில் வசிக்கும் கர்நாடக மக்களுக்கு எதிராக கலவரம் வெடிப்பதை தடுக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து தனது கட்சிப் பத்திரிக்கையான சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியுள்ளதாவது:

கர்நாடக எல்லைப் பகுதியில் பெரும்பான்மையினராக உள்ள மராத்தி மக்கள் குழப்பம் விளைவிக்க பிறந்தவர்கள் என்றும், அவர்கள் மராத்தியில் படிக்க விரும்பினால் மகாராஷ்டிராவிற்க்குப் போக வேண்டியதுதானே என்று கேட்டுள்ளார் கம்பரா.


எட்டு கோடி மராத்தி மக்கள் சார்பில் நான் ஞான பீட கமிட்டியைக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், கம்பராவுக்கு அளிக்கப்பட்ட ஞானபீட விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே.

லட்சக்கணக்கான கர்நாடக மக்கள் பல்வேறு தொழில்களில் மும்பையிலும், மகாராஷ்டிராவின் இதரப் பகுதிகளிலும் ஈடுபட்டுள்ளனர், இங்கு வசித்து வருகின்றனர்.

இங்குள்ள ஹோட்டல் தொழிலையே உடுப்பியைச் சேர்ந்தவர்கள்தான் கட்டுக்குள் வைத்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரையும் சொந்த மாநிலத்திற்கேத் திரும்பிப் போங்கள் என்று நாங்கள் கூறினால் என்னாகும்?.

மொழி என்பது யாருடைய எதிரியும் அல்ல என்பதை கம்பரா நினைவில் கொள்ள வேண்டும். கிரிஷ் கர்னாட், டாக்டர் சிவராம காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி, பீம்சென் ஜோஷி, கங்குபாய் ஹங்கல் ஆகியோர் மராத்தியர்களின் மனதைக் கவர்ந்தவர்கள் என்பதை கம்பரா மறந்து விடக் கூடாது.

கர்நாடகத்தை ஆட்சி புரிந்து வருபவர்கள், மராத்தியர்களுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டு வரும் குண்டர்களை கட்டி வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இங்கு (மகாராஷ்டிராவில்) தீப்பொறி கிளம்புவதை தடுக்க முடியாது.

மராத்தியர்களைத் தாக்கும் குண்டர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும். நாங்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இதைக் கூறுகிறோம். இதைச் சொல்வதன் மூலம் நாங்கள் ஆண்மையற்றவர்கள் என்று யாரும் நினைத்து விடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

பால் தாக்கரேவின் இந்த எச்சரிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

No comments: