சென்னை, அக்.9: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடங்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு முடிவு சர்ச்சைக்குள்ளாகி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதையடுத்து இரண்டாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது காலதாமதமாகியுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் (2010-11) சேர்ந்த எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆகஸ்ட்டில் தேர்வு நடைபெற்றது. எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு பாடங்களான "அனாடமி', "ஃபிஸியாலஜி', "பயோகெமிஸ்ட்ரி' ஆகியவற்றின் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்ச மதிப்பெண் 50 எடுத்தால்தான் தேர்ச்சி என தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு புதிதாக நிர்ணயித்தது.
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த வாரம் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டது. குறைந்தபட்ச மதிப்பெண் காரணமாக பல மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது.
எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை, முதலாம் ஆண்டு பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெறாவிட்டால், 2-ம் ஆண்டுக்கு செல்ல முடியாத அளவுக்கு "பிரேக் சிஸ்டம்' நடைமுறையில் உள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு முடிவு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாத பல மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இணையதளத்திலிருந்து நீக்கம்: தேர்வு முடிவு சர்ச்சையானதைத் தொடர்ந்து, இணையதளத்தில் வெளியிட்ட தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் நீக்கி விட்டது. மேலும் தேர்ச்சி பெற்றதை உறுதிப்படுத்தும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களையும் மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் இதுவரை அனுப்பவில்லை.இதனால், எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற்று 2-ம் ஆண்டுக்குச் செல்லும் மாணவர்கள் யார், தேர்ச்சி பெறாமல் முதலாம் ஆண்டிலேயே தொடரும் மாணவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஏற்கெனவே திட்டமிருந்தபடி எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு வகுப்புகளை திங்கள்கிழமை (அக்டோபர் 10) தொடங்குவதை ஒத்திவைக்க அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர்.
நன்றி
தினமணி, 10-10-2011
No comments:
Post a Comment