Wednesday, September 28, 2011

ஸ்பெக்ட்ரம் கேஸ் : திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம் !திருப்பம்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘திடீர் திருப்பம்’ என்றுகூட கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘குபீர் திருப்பம்’ இது! ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்றுவரை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த ஆ.ராசா தரப்பு, இன்று திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றியிருப்பதன் பெயர்தான், குபீர் திருப்பம்!

இன்று சி.பி.ஐ. தனிகோர்ட்டில் ஆஜராகிய ஆ.ராசாவின் வக்கீல் சுசீல்குமார், “அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட வேண்டியது அவசியமில்லை என்று எனது கட்சிக்காரர் கருதுகிறார்” என்றார்.

சி.பி.ஐ. தனி கோர்ட்டில் தினமும் நடைபெற்றுவரும் வழக்கு இது. இருந்த போதிலும், கடந்த சில தினங்களாக பார்வையாளர்கள் முன்பை விட கூர்மையாக கவனம் செலுத்த தொடங்கியிருந்தார்கள். காரணம், அமைச்சர் சிதம்பரத்தில் பெயர் வழக்கில் கண்ணாமூச்சி காட்டத் தொடங்கியிருந்தது.

தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, சில வாரங்களுக்கு முன்னர்தான், இந்த வழக்கில் முதலில் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் பெயரை உச்சரித்தார்.

“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தெரியும். நான் என்ன செய்யப் போகின்றேன் என்பதை அவர் அறிந்திருந்தார். இது தவறு என்றால், அவர் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? அவரைக் கூப்பிட்டு விசாரியுங்கள்” என்றார் ஆ.ராசா. தனக்காக தானே வாதாடுகிறேன் என்று கூறிக்கொண்டு அவர் நேரடியாக நீதிபதியிடம் கூறிய கூற்று இது.

அதன் பிறது, அவரது வக்கீல் சுசீல்குமார், அதே விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

இதற்கிடையே கனிமொழியின் வக்கீலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயம் பற்றி அப்போதைய அமைச்சரவைக்கு எல்லாமே தெரிந்திருந்தது என்று கொளுத்திப் போட்டார்.

அவர் தனது வாதத்தில், “அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம், மற்றும் பிரதமரின் முன்னிலையில், ராசா இதுபற்றி விலாவாரியாகவே தெரிவித்து விட்டார். ஆ.ராசா செய்தது தவறு என்றால், பிரதமரும், சிதம்பரமும் அதற்கு உடந்தையாக ஏன் இருக்கக்கூடாது?” என்ற ரீதியில் கூறத் தொடங்கினார்.

கனிமொழியும், ராசாவும் சொல்லி வைத்தால்போல சிதம்பரத்தையும், பிரதமரையும் வழக்குக்குள் இழுக்கத் தொடங்கவே, கேஸ் திரும்பப் போகின்றது என்பது விஷயம் அறிந்தவர்களுக்கு புரிந்து விட்டது. மத்திய அரசும் ஓரளவுக்கு அலர்ட் ஆகியது. ஆனால், அதற்குள் காரியங்கள், அனைவரது கைகளையும் மீறிச் செல்லத் தொடங்கிவிட்டன.

இந்த விவகாரத்தில், நிதி அமைச்சகம், பிரதமரின் அலுவலகத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று பற்றிய தகவல் ‘எப்படியோ’ லீக் ஆகியது.

அப்படியொரு கடிதம் இருக்கும் விஷயத்தை, தெரிய வேண்டியவர்களுக்கு தெரியப்படுத்தி விட்டாலே போதும். தகவல் அறியும் சட்டத்தின்படி விண்ணப்பித்து, குறிப்பிட்ட கடிதத்தை வெளியே கொண்டுவந்து விட்டார்கள். அந்தக் கடிதம், அரசியல் ரீதியாக ஒரு உலுப்பு உலுப்பிவிட்டது.

அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த ஊழல் நடக்காமல் தடுத்திருக்கலாம் என்பதுபோன்ற வார்த்தை அமைப்புகளுடன் இருந்தது, நிதி அமைச்சின் கடிதம். அது ஏற்படுத்திய பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக நிற்கின்றன.

நிலைமை மோசமானால், அமைச்சர் சிதம்பரத்தின் பதவி பறிபோகும் (அல்லது அவராகவே ராஜினாமா செய்யலாம்) என்ற நிலையில் வந்து நிற்கிறது அந்த விவகாரம். (இந்தக் கட்டுரையைப் படித்து முடித்தபின், கீழே ‘தொடர்புடையவை’ என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்ட 3 டாபிக்களையும் முடிந்தால் ஒருமுறை படித்து விடுங்கள். வழக்கின் பேக்ரவுண்ட் புரியும்)

இப்படியான சூழ்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஆ.ராசாவின் வக்கீல் கொஞ்சம் வில்லங்கமான விதத்தில் வழக்கைத் திருப்பினார். சிதம்பரம் கோர்ட்டுக்கு இழுக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலையை சாதுர்யமாக ஏற்படுத்தினார்.

ஆ.ராசாவின் வக்கீல், அடி மடியில் எப்படி கையை வைத்தார்? இதோ, இப்படித்தான்:

“ஆ.ராசாவுக்கும், சிதம்பரத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வித கருத்து வேறுபாடும் எழவில்லை என்பதையே நான் அழுத்திக் கூறுகிறேன். அதாவது, அப்போதைய நிதி அமைச்சருக்கு நன்கு தெரிந்திருந்தும், அவரால் தடுக்கப்படாத ஒரு நடவடிக்கையே ஆ.ராசாவால் எடுக்கப்பட்டது. எனவே, செக்க்ஷன் 311 படி சிதம்பரத்தை ஒரு சாட்சியாக கூப்பிட்டு விசாரியுங்கள். இந்த விவகாரத்தில் தனக்குத் தெரிந்ததை அவரே கோர்ட்டில் தெரிவிக்கட்டும். பிரதமரின் முன்னிலையில் வைத்து இந்த விவகாரம் பற்றி பேசப்பட்டதா என்பதை அவர் தெளிவு படுத்தட்டும். அதன் பின்னர் பிரதமரை அழைக்க வேண்டுமா இல்லையா என்பதை கோர்ட்டே முடிவு செய்யட்டும்”

உண்மை, பொய், நேர்மை எல்லாவற்றுக்கும் மேலாக, வக்கீலின் சாதுரியமாக திறமை ஸ்கோர் பண்ணிய இடம் அது.

24 மணி நேரத்துக்குள், பலன் கைமேல் தெரிந்திருக்கிறது! இன்று காலை விடிந்தது. கோர்ட் தொடங்கியது. ஆ.ராசாவின் வக்கீல் சுசீல்குமார், “அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட வேண்டியது அவசியமில்லை என்று எனது கட்சிக்காரர் கருதுகிறார்” என்றார்.

இதற்கு அவர் என்ன காரணம் கூறுகிறார்? “அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்கத் தொடங்கினால், வழக்கு மேலும் இழுத்துச் செல்லும். எனது கட்சிக்காரர் ஜாமீன் பெறுவதில் கால தாமதம் ஏற்படும். அதனால்தான், அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டியது அவசியமில்லை என்று கூறுகிறோம்”

சுருக்கமாகச் சொன்னால், நேற்று நீதிமன்றத்தில், ஆ.ராசா தரப்பு வக்கீல் திறமையாக தூண்டில் போட்டுவிட்டுச் சென்றார். இரவோடு இரவாக தூண்டிலில் போடப்பட்ட இரையை மீன் கவ்வியிருக்கிறது.

கொஞ்சம் தலைகீழாக யோசித்துப் பாருங்கள்.

“நீங்கள் தேவையில்லாமல் ‘அவரை’ கேஸில் இழுக்காமல் விட்டால், உங்கள் ஜாமீன் கோரிக்கை வரும்போது, நாங்களும் பெரிதாக எதிர்ப்பு காட்ட மாட்டோம்” என்பதற்கு மேல், ஒரு வார்த்தைகூட நாங்கள் எழுதக்கூடாது!

விறுவிறுப்பு.காம்.

No comments: