Saturday, March 19, 2011

தீர்ப்புகள் விற்கப்படும் - ஊழல் மலிந்து விட்ட நீதித் துறை.


இந்தியாவில் அதிக அதிகாரம் படைத்த அமைப்புகளில் நீதிமன்றங்களும் அடக்கம். 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு மற்றும் மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் குறித்த வழக்குகளில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்ததே நீதிமன்றங்களின் அதிகாரத்திற்குச் சான்றாகும். இருப்பினும் சில நீதிமன்றங்களில் நீதி விற்கப்படுவதாக வெளியான செய்தியால் நீதித் துறையிலும் ஊழல் மலிந்து விட்டது எனச் சமீபகால நிகழ்வுகள் வலுப்படுத்துகின்றன.

அண்மையில் தெஹெல்கா பத்திரிக்கைக்குப் பேட்டியளித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சாந்திபூஷனின் மகன் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 16 பேரில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று தெரிவித்துள்ளார். பிரசாந்த் பூஷன் மீது உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் பிரசாந்த் பூஷனின் தந்தை சாந்திபூஷன் தம்மையும் அந்த வழக்கில் இணைத்துக் கொள்ளுமாறு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். மேலும் 8 ஊழல் நீதிபதிகள் குறித்த ஆதாரங்களையும் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளார். இதிலிருந்து நீதித் துறையின் நம்பகத்தன்மையை நாம் எடை போட்டுக் கொள்ளலாம்

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா : 1984இல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான ஆய்வுக் கமிஷனின் தலைவராயிருந்தபோது காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தார். அதனாலேயே மக்களவை உறுப்பினராக்கப் பட்டார் (1990).

நீதிபதி கமல்நாரயண் சிங் : இறக்குமதிக்குத் தடை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்துகொள்ள ஜெயின் நிறுவனத்துக்கு ஆதரவாகப் பல உத்தரவுகள் பிறப்பித்தார். ஜெயின் நிறுவனத்துக்கு 5கோடி சுங்கவரி விதிக்கப்பட்டதை குறைத்து ஒரு சொற்பத் தொகையாக்கினார் (நவம்பர்-டிஸம்பர் 1991).

நீதிபதி அஹமதி: போபால் விஷவாயு வழக்கில் முதல் தீர்ப்பை மாற்றி, யூனியன் கார்பைடுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தார். பலனாக, அதன் அறக்கட்டளைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் (1994-1997).

நீதிபதி எம்.எம். பூஞ்சி: குற்றம் உறுதிசெய்யப்பட்ட ஒருவரின் வழக்கில், சட்டத்துக்கு எதிராக "சமரசம் ஏற்பட்டுவிட்டது" எனக்கூறி விடுதலை செய்தார் (ஜனவர்-அக்டோபர் 1990

நீதிபதி ஆனந்த்: ஜம்மு-கஷ்மீர் ஓட்டல் ஒன்றின் முதலாளி வழக்குக்கு இவர் 'உதவியதற்காக' ஓட்டல்காரருக்குச் சொந்தமான லட்சக்கணக்கில் மதிப்புள்ள நிலத்தை ஆயிரக்கணக்கில் ஆனந்தின் மகன் விலைக்கு வாங்கினார் (1998-2001).

நீதிபதி சபர்வால்: சீல் வைக்கப்பட்ட டெல்லி வணிக வளாக வழக்கில், அதன் உரிமையாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்ததற்காக டெல்லியின் நடுவில் அமைந்துள்ள கட்டடங்கள் சபர்வாலின் மகன் பெயருக்குக் குறைந்த விலையில் கைமாறின (2005-2007).

"உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த 16பேரில் சரிபாதியினர் ஊழல் பேர்வழிகள்" என்று பிரஷாந்த் பூஷன் ஓர் ஆங்கில நாளிதழில் வெளிப்படையாக எழுதியிருக்கிறார். இவர், 1977-1979வரை நம் நாட்டின் சட்ட அமைச்சராகப் பதவி வகித்த சாந்தி பூஷனின் மகனாவார். "ராய்பரேலியில் இந்திரா காந்தி ஜெயித்தது செல்லாது" என்ற தீர்ப்பைப் பெறுவதற்கு வாதாடியவர் சாந்தி பூஷன்.

டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் டெல்லியின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவருமான விஜேந்தர் ஜெயினிடம் தமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெறுவதற்காக ஒருவர் ரூ 9 கோடி கொடுத்ததாக ஏர் இந்தியாவின் முன்னாள் தலைவர் சுனில் அரோரா, அரசியல் தரகர் நீரா ராடியாவிடம் கூறிய உரையாடலும் தற்போது வெளிவந்துள்ளது. பணம் பத்தும் செய்யும்; பணத்தால் எதையும் வாங்கலாம் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பணத்தைக் கொண்டு தீர்ப்பையே விலை கொடுத்து வாங்குவதை நம் கண்ணால் கண்டும் வருகிறோம்.

நில மோசடிப் புகாரில் சிக்கி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெறும் வாய்ப்பை இழந்த கர்நாடக மாநில முன்னாள் தலைமை நீதிபதி தினகரன் தற்போது சிக்கிம் மாநிலத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். தினகரனைச் சிக்கிம் மாநிலத் தலைமை நீதிபதியாக நியமித்தது தினகரனுக்கான தண்டனையா அல்லது சிக்கிம் மாநில மக்களுக்கான தண்டனையா எனத் தெரிய வில்லை. இது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டு வெளிவராமல் எத்தனை நீதிபதிகள் உள்ளனரோ?

வழக்கறிஞர்கள் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பை விலைக்கு வாங்கி அந்தப் பணத்தில் விலை உயர்ந்த சொகுசு கார்கள், ஆடம்பர பங்களாக்கள் என வாங்கி உல்லாசமாக வாழ்ந்து வருவதாக அலஹாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச் மீது உச்ச நீதிமன்றம் பரபரப்புக் குற்றசாட்டைக் கூறி இருப்பது தீர்ப்புகள் விலைக்கு விற்கப்படுவதை உறுதி செய்துள்ளது

நீதித் துறையில் பல கருப்பு ஆடுகள், அரசு தரும் வீட்டு மனைக்காகவும் சில அற்ப ஆதாயங்களுக்காகவும் தம் பதவியின் கண்ணியத்தை பணத்திடம் அடகு வைத்து வருகின்றனர். பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப் பட்டால் நீதிமன்றம் சென்று முறையிடலாம். நீதிமன்றமே தவறு செய்தால் எங்கு சென்று முறையிடுவது? கறை படிந்த நீதிமன்றங்கள் கழுவப்பட வேண்டும். கருப்பு ஆடுகள் அகற்றப் பட வேண்டும். இல்லையேல் தீர்ப்புகள் பகிரங்கமாக விலை கூவி விற்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இது அவ்வளவும் அவுட்லுக் ஆங்கில இதழில் சந்தி சிரித்ததாகும்.


நன்றி: சமூகநீதி முரசு

No comments: