பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (29). நடன கலைஞராகவும், கட்டிட மேஸ்திரியாகவும், வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதா (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தீபக்காந்த் (10) என்ற 5-வது படிக்கும் மகனும், நிவேதா (8) என்ற 3-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவர்கள் நல்லாகவுண்டம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.
அய்யப்பனுக்கும், ராதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அய்யப்பன் ராதா மீதும், ராதா அய்யப்பன் மீதும் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி மோதிக் கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை நிவேதா பள்ளிக்கூடம் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது ராதா வீட்டிற்குள் நிவேதாவை அழைத்து சென்றார்.
பின்னர் திடீரென அரிவாளை எடுத்து வந்து ஆட்டை அறுப்பது போல பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கதற கதற அறுத்தார். இதில் அலறி துடித்த சிறுமி ரத்த வெள்ளத்தில் பிணமானாள். பின்னர் கொலை வெறி தீராத ராதா மகன் தீபக்காந்த்தையும் பிடித்தார். அரிவாளில் ரத்தம் சொட்ட...சொட்ட...
ராதா கொலை வெறியில் இருந்ததை பார்த்த அவன் அலறினான். அப்போது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், மற்றும் வீட்டின் மற்றொரு அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்த அய்யப்பன் ஆகியோர் ஓடிவந்தனர். அப்போது நிவேதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதையும், தீபக்காந்த்தை கொலை செய்ய ராதா அரிவாளுடன் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டனர்.
இதையடுத்து அய்யப்பன், ராதாவிடம் இருந்த மகன் தீபக்காந்த்தை உயிருடன் மீட்டார். மகள் நிவேதாவின் பிணத்தை பார்த்து கதறி அழுதார். ஆனால் ராதா பித்து பிடித்தது போல் வெறியுடன் காணப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராதாவையும், அய்யப்பனனையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெற்ற மகளையே கொடூரமாக கொலை செய்த ராதாவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
என் கணவர் அய்யப்பனும், நானும் கட்டிட வேலை செய்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். ஆரம்பத்தில் சந்தோசமாகத்தான் இருந்தோம்.திடீரென எங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.
என் கணவர் அய்யப்பனுக்கும், நாங்கள் குடியிருக்கும் பகுதியை சேர்ந்த திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. பின்னர் அவர்கள் இருவரும் ஒரு நாள் ஊரை விட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். அவர் எனது மனைவியை அய்யப்பன் கடத்தி சென்று விட்டார் என்று கூறியிருந்தார்.
இதையறிந்த என் கணவர் அய்யப்பன் அந்த பெண்ணை மீண்டும் அவளது கணவரிடமே ஒப்படைத்தார்.பின்னர் என் கணவருக்கும் திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண் தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், எனவே அந்த பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்துவேன், நீ உன் வீட்டிற்கு சென்று விடு என்றார்.
இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் என் கணவர் அய்யப்பனுக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை ஏமாற்றியதால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.
நான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் அனாதையாகி விடுவார்களே என்று கருதி குழந்தைகளை கொலை செய்து விட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து பள்ளி விட்டு திரும்பிய எனது மகள் நிவேதாவை அரிவாளால் கழுத்தை அறுத்து கொன்றேன்.
எனது மகனை கொலை செய்ய முயன்ற போது அவன் அலறியதால் அனைவரும் ஓடிவந்து அவனை என்னிடம் இருந்து காப்பாற்றினர் என்று கூறினார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராதாவை ஜெயிலில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே ராதாவின் கணவர் அய்யப்பனிடம் போலீசார் விசாரித்த போது, எனது மனைவி ராதாவுக்கும், எங்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், கள்ளத்தொடர்பு இருந்தது. இதுப்பற்றி நான் கேட்டதால் அவள் வெறிப்பிடித்து எனது மகளை கொன்று விட்டாள் என்று கூறினார். அய்யப்பனை போலீசார் விசாரணைக்கு பின்னர் அனுப்பி விட்டனர்.கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் மாறி, மாறி கள்ளக்காதல் இருப்பதாக புகார் கூறியதால் குடும்பமே சீரழிந்து விட்டது.
No comments:
Post a Comment