பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக ஹினா ரப்பனி கர் நியமிக்கப்பட்டு ஒரு வார காலம்தான் ஆகிறது. அதற்குள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஹினா. அவரது புகைபடங்களை பிரசுரிப்பதிலும், அவர் தொடர்பான வீடியோ கிளிப்பிங்குளை ஒளிபரப்பவும் சர்வதேச ஊடகங்கள் போட்டிபோடுகின்றன.
இதுவரை "பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அக்கறை காண்பிப்பதில்லை; தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது..." என்றெல்லாம் பாகிஸ்தான் குறித்து எதிர்மறை கருத்துக்களையும், அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த உலகின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் வார சஞ்சிகைகளெல்லாம், தற்போது மாடல் அழகி போன்ற வசீகர தோற்றமும், அறிவு திறனும் கொண்ட இளம் பெண் ஒருவரை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமித்து, பாகிஸ்தான் தற்போது சந்தித்து வரும் நெருக்கடியை விவேகமாக எதிர்கொள்ள தொடங்கி உள்ளதாக புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கின்றன.
அல் காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், பாகிஸ்தானின் இமேஜ் உலக நாடுகளில் அதல பாதாளத்திற்கு சரிந்தது.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் மீது எப்போதும் இருந்துவரும் குற்றச்சாட்டை, பின்லேடனின் பதுங்கல் நிரூபிக்கும் விதமாக அமைந்து விட்டதால் பாகிஸ்தான், உலக நாடுகளிடம் அம்பலப்பட்டு போனது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தானுக்கு சமீப காலமாக கடுமையான நெருக்கடிகள் வந்தன. குறிப்பாக பாகிஸ்தான் இராணுவத்திலும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யிலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவான சக்திகள் உள்ளதாக, அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ குற்றம்சாட்டியது.
ஆனால் பாகிஸ்தான் அதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்து, ஆதாரமில்லாமல் குற்றம்சாட்ட வேண்டாம் என்று கூறவே, சிஐஏ-வின் தலைவர் விமானத்தை பிடித்து நேரடியாக இஸ்லாமாபாத் வந்திறங்கினார்.
அங்கு அவர் பாகிஸ்தான் இராணுவ மற்றும் உளவுத் துறை அதிகாரிகளை சந்தித்து, அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வீடியோ ஆதாரம் ஒன்றை காட்டியதாகவும், அதனை பார்த்து பாகிஸ்தான் அதிகாரிகள் வாயடைத்துபோய் தலையை தொங்கப்போட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான் மும்பையில் அண்மையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் பாகிஸ்தான் மீது மீண்டும் உலக நாடுகளின் பார்வையை திருப்பவே, அந்நாடு வெகுவாகவே அவஸ்தைக்குள்ளானது.
இதனையடுத்தே தனது வெளியுறவு நடவடிக்கைகள் மற்றும் தோற்றத்தை மாற்றுவதற்கான வியூகத்தை வகுத்தது. அதன் ஒரு அம்சமாகவே திறமையும், புத்திசாலித் தனமும் கொண்டவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டால் எதிர் தரப்பின் கடுமையைகுறைக்க முடியும் என்றெண்ணி, வசீகரிக்கும் அழகு கொண்ட ஹினா ரப்பானி கர் என்ற 34 வயது அழகு பெண்ணை தனது வெளியுறவுத் துறை அமைச்சராக கடந்த 20 ஆம் தேதி நியமித்தது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் வரலாற்றில் அதன் வெளியுறவுத் துறை அமைச்சராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை நினைவுபடுத்தும் இந்த அழகு அமைச்சரும், பாரம்பரிய அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர்தான்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்டான் என்ற இடத்த்ல் 1977 ஆம் ஆண்டு ஜனவரி 19ல் பிறந்த ஹினாவின் குடும்பம், செல்வ செழிப்பு மிக்க குடும்பமும் கூட. ஹினா குடும்பத்தினருக்கு சொந்தமாக ஏராளமான மீன் பிடி படகுகள் கொண்ட மீன் பிடித் தொழிலும், மாந்தோப்புகளும், கரும்பு வயல்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாய தொழில்களும் உள்ளன.
லாகூர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக அறிவியலில் பி. எஸ்சி பட்டம்பெற்ற ஹினா, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் எம். எஸ்சி பட்ட மேற்படிப்பு பயின்றுள்ளார்.
இவரது தந்தை குலாம் ரப்பானி, பஞ்சாப் மாகாணத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர். இவரது மாமாதான் பஞ்சாப் மாகாண முதலமைச்சர்.
ஃபெரோஷ் குல்சார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டுள்ள ஹினாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.
தந்தையும், மாமாவும் அரசியலில் இருக்க ஹினாவுக்கு அந்த ஆசை வராமல் போகுமா என்ன? 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நாடாளுமனற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹினாவுக்கு, அரசியலில் அப்போது முதல் ஏறுமுகம்தான்.
2008 தேர்தலில் ஹினாவுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்க மறுக்கவே, பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு 84, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று மீண்டும் எம். பியானார்.
தொடர்ந்து பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையிலான அமைச்சரவையில் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை இணையமைச்சராக பணியாற்றிய அவர், 2011 பிப்ரவரியில் வெளியுறவுத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த ஷா முகமத் குரேஷி அப்பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், 2011 பிப்ரவரி 13 ல் வெளியுறவுத் துறையின் தற்காலிக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்துதான் கடந்த 20 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அயலுறவுத் துறையின் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஹினா. அப்போதே உலக நாடுகளை, குறிப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதை வெகுவாக புகழ்ந்து எழுதும் "பாகிஸ்தான் அப்சர்வர்" போன்ற அந்நாட்டு ஆங்கில ஏடுகள், அண்மையில் ஹிலாரி கிளின்டனுடன் ஹினா நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அவரது தைரியமான பேச்சும், அணுகுமுறையும், பாடி லேங்வேஜ் எனப்படும் உடம் மொழியும் ஹிலாரியை வெகுவாகவே கவர்ந்ததாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானும் ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் அவர் முன்வைத்த வாதத்தை பார்த்து
ஹிலாரி அசந்துபோனதாகவும் புகழாராம் சூட்டுகின்றன.
இந்த நிலையில்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று டெல்லி வந்தார் ஹினா.
வழக்கமாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் டெல்லி வந்தால், விமான நிலையத்தில் வந்திறங்குவதை படம் பிடித்து சம்பிரதாய செய்தியாக வெளியிடுவது இந்திய ஊடகங்களின் வழக்கம்.
ஆனால் வசீகரமும், மாடல் அழகி போன்ற தோற்றத்துடனும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக ஒருவர் வந்திறங்குவார் என்று தொலைக்காட்சி கேமராமேன்களும், பத்திரிகை புகைப்படக்காரர்களும் எதிர்பார்க்கவே இல்லை.
ஆங்கிலத்தில் "Stunning beauty" என்று சொல்வார்களே அதுமாதிரி அசர அடிக்கிற அழகுடன் வந்திறங்கிய ஹினாவை நமது பத்திரிகை புகைப்படக்காரர்களும், தொலைக்காட்சி கேமராமேன்களும் வளைத்து வளைத்து படம்பிடித்ததை பார்த்து, ஹினா சற்று வெட்கப்பட்டுதான் போனார்.
இந்த நிலையில்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வுடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார் ஹினா.
இப்பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முடிவுகள் எதுவும் எட்டப்படாது என்று முன்னரே கூறப்பட்டபோதிலும், பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ஹினா செய்தியாளர்களிடம் கூறினார்.
அதே சமயம் கடந்த காலங்களைப் போன்றல்லாமல் இந்த முறை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை இறுக்கமாக அல்லாமல், உற்சாகமான சூழலில் நடந்ததாகவும், இத்ற்கு ஹினா முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல என்றும் கூறுகின்றனர் நமது வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள்.
பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவுக்கு பின்னர் ஒரு வசீகரமான, வலிமையான, விவேகமான ஒரு தலைவர் இல்லாமல் இருந்த நிலையில், ஹினா ரப்பானி அந்த இடத்தை பூர்த்தி செய்வார் என்றும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் ஹினா அமரப்போவது நிச்சயம் என்றும் அடித்துக் கூறுகின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்.
எப்படியோ இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் ஒரு புதிய நல்லத்தியாயம் மலர, ஹினா போன்ற இளம் தலைவர்கள் இருநாடுகளிலும் நிறைய பேர் உருவாகட்டும்!
etamilnews.com