Tuesday, June 28, 2011

சுற்றுச்சூழல் பள்ளிக்கு ரூ 50 கோடி நன்கொடை கொடுத்த நிலகேனி !


இன்போஸிஸ் நிறுவனரும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை தயாரிப்புக் குழு தலைவருமான நந்தன் நிலகேனி மற்றும் அவர் மனைவி ரோஹிணி, சுற்றுச்சூழல் கல்வி நிறுவனத்துக்கு ரூ 50 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியூமன் செட்டில்மெண்ட் (IIHS) நிறுவனத்தின் சுற்றுச் சூழல் பள்ளியின் வளர்ச்சிக்காக இந்தத் தொகையை அவர்கள் வழங்கியுள்ளனர்,.

இதுகுறித்து நிலகேனி மற்றும் ரோஹிணி விடுத்துள்ள கூட்டறிக்கையில், "கல்வி மற்றும் நகர்ப்புறமயமாக்கத்தில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியூமன் செட்டில்மெண்ட் ஆற்றிவரும் பங்களிப்பு மகத்தானது. இப்படி ஒரு நிறுவனத்துக்கு எங்கள் நன்கொடை பயன்படுகிறது என்பதே எங்களுக்கு மிகுந்த மனக் கிளர்ச்சியைத் தருகிறது," என்று குறிப்பிட்டுள்ளனர்.

பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியூமன் செட்டில்மெண்ட் கல்வி மையம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய அமைப்பாகும். ஸெர்க்ஸெஸ் தேசாய், கோத்ரெஜ், சைரஸ் குஸ்டெர், ரெஹானா ஜாப்வாலா, விஜய் கேல்கர், கேஸுப் மஹிந்திரா, கிஷோர் மரிவாலா, ராஹுல் மெஹ்ரோத்ரா, பன்சி மேத்தா, ராகேஷ் மோகன், நந்தன் நிலகேனி, நாசர் முகர்ஜி, தீபக் பரேக், சிரிஷ் படேல் மற்றும் தீபக் ஸ்டால்வாக்கர் போன்ற முக்கிய பிரமுகர்கள் இணைந்து நடத்தும் நிறுவனம் இது.

பல்வேறு படிப்புகளுக்கான சிறப்புத் துறைகளை உருவாக்க, டிஜிட்டல் லைப்ரரிகளை அமைக்க ரூ 300 கோடி வரை நிதி திரட்டி வருகிறது இந்த கல்வி மையம். அதன் ஒரு பகுதியாகவே ரூ 50 கோடியை வழங்கியுள்ளார் நிலகேனி தம்பதியர்.

எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு : 1,809 மாணவர்களுக்கு அழைப்பு.



தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 30-ம் தேதி முதல் நடைபெறும் முதல் கட்ட கலந்தாய்வுக்கு மொத்தம் 1,809 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்-விளையாட்டு வீரர்கள் - ராணுவ வீரர்களின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான 55 எம்.பி.பி.எஸ். இடங்கள் - 1 பி.டி.எஸ். இடம்,

சென்னை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 767 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.

மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு வரும் 30-ம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தொடர்ந்து பொதுப் பிரிவினர் உள்ளிட்ட பிற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூலை 3-ம் தேதி ஞாயிறு கலந்தாய்வு கிடையாது.




கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில்... எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து ஏற்கப்பட்ட 20,123 மாணவர்களுக்கு கடந்த ஜூன் 21-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. ரேங்க் பட்டியலில் 66 மாணவர்கள் 200-க்கு 200 பெற்று முன்னணியில் உள்னர். இவர்களில் பிறந்த தேதி அடிப்படையில் கம்ப்யூட்டர் ரேண்டம் எண் மூலம் முதல் 10 பேருக்கு சிறப்பிடமும் ஏற்கெனவே அளிக்கப்பட்டு ள்ளது.

அனைத்துப் பிரிவினர் உள்பட வகுப்பு வாரியாக ரேங்க் பட்டியல் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தயாரித்து சுகாதாரத் துறையின் இணையதளம்

அரசின் இணையதளம் www.tnhealth.orgல் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

50 மாற்றுத் திறனாளிகளுக்கு... தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில், 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் (3 சதவீதம்) மாற்றுத் திறனாளி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். கலந்தாய்வு தொடக்க தினமான ஜூன் 30-ம் தேதியன்று மொத்தம் 66 மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக்

குழு அலுவலகத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து ஊனத்தின் பாதிப்பை உறுதி செய்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

15 மாணவர்களுக்கு... ராணுவ வீரர்கள் குழந்தைகள் பிரிவில் 2 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடமும், ஒரு மாணவருக்கு பி.டி.எஸ். இடமும் ஒதுக்கப்படும். இந்தப் பிரிவில் விண்ணப்பித்தவர்களில் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் 433 பேர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி, 200-க்கு 197.25 வரை வரிசையாக முதலில் உள்ள 15 மாணவர்கள் மட்டும் ராணுவ வீரர்களின் குழந்தைகள் பிரிவில் கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 2 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரவும், ஒரு மாணவருக்கு பி.டி.எஸ். படிப்பில் சேரவும் அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

விளையாட்டில் சிறந்து விளங்குவோர்: விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்படும். இந்த 3 இடங்களுக்கான மாணவர்களை செவ்வாய் (ஜூன் 28), புதன் (ஜூன் 29) ஆகிய இரண்டு தினங்கள் அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் குழு சான்றிதழ் களைச் சரிபார்த்து தேர்வு செய்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் 3 மாணவர்களுக்கு ஜூன் 30-ம் தேதியன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

ஜூலை 1 முதல் 6-ம் தேதி வரை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் அனைத்துப் பிரிவினருக்கு வரும் ஜூலை 1, 2 ஆகிய இரண்டு தினங்கள் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. அனைத்துப் பிரிவினரில் ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி, 200-க்கு 198.75 வரை பெற்றுள்ள 550 மாணவர்கள் கலந்தாய்வுக்கு (ஜூலை 1, 2) அழைக்கப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் என வகுப்பு வாரியாக ஜூலை 6-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 197.75 வரை மொத்தம் 432 மாணவர்கள் கலந்தாய்வுக்கு (ஜூலை 2, 4) அழைக்கப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 196.25 வரை மொத்தம் 65 மாணவர்கள் (ஜூலை 4 பிற்பகல் 2 மணி) அழைக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 196.25 வரை மொத்தம் 339 மாணவர்கள் (ஜூலை 5) அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 6-ல்.... தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் ஆகிய மூன்று பிரிவினருக்கு ஜூலை 6-ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 191.75 வரை உள்ள 261 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ல் தொடங்கி 188.00 வரை உள்ள 55 மாணவர்களும், பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 197.25 முதல் 185.25 வரை இடம்பெற்றுள்ள 23 மாணவர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

எம்.பி.பி.எஸ். - தேனி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்.



தமிழகத்தில் 2011-12 நடப்புக் கல்வி ஆண்டில் தேனி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

2006-ம் ஆண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்ட தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் திங்கள்கிழமை ஜூன் 27 அன்று அங்கீகாரம் அளித்து விட்டது. எனவே நடப்புக் கல்வி ஆண்டிலும் தொடர்ந்து இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 100 மாணவர்களைச் சேர்ப்பதில் இனி எந்தவித பிரச்னையும் இருக்காது.

கடந்த கல்வி ஆண்டில் (2010-11) 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்ட திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு தொடர்ந்து 2014-15-ம் கல்வி ஆண்டு வரை தமிழக அரசு ஒப்புதல் பெற வேண்டியிருக்கும். அதன் பிறகு இந்தக் கல்லூரியும் அங்கீகரிக்கப்படும்.

பெற்றோர், மாணவர்களுக்கு நிம்மதி: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கத்தில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது.

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், தேனி-திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒப்புதல் கிடைத்து 17 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுமா என்ற சந்தேகம் பெற்றோர்-மாணவரிடையே இருந்து வந்தது.

இப்போது தேனி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விட்டதால், 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுவது உறுதியாகி பெற்றோரும் மாணவர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கல்விக் கட்டணம் ரூ.4,000 உள்பட ஆண்டுக் கட்டணமாக ரூ.12,290 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு வட மாநிலங்களில் மதிப்பில்லாமல் போய் விட்டது சாலமன் பாப்பையா.



நாம் இந்தி படிக்காமல் போனதால், வட மாநிலங்களில் நம்மை மதிக்காத நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் தமிழறிஞரும், பேராசிரியருமான சாலாமன் பாப்பையா.

மதுரையில் நடந்த திருக்குறள் குறித்து டாக்டர் கு. கண்ணன் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் எழுதிய உரைகள் தொகுப்பு நூலை வெளியிட்டார் சாலமன் பாப்பையா.

அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்திலிருந்து வெளிநாட்டவர் மிளகு, முத்து ஆகிய பொருள்களையே தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று வந்துள்ளனர். அவற்றையே, தமிழகத்தில் கிடைக்கும் அரிய சொத்தாகவும் அவர்கள் கருதி வந்தனர். ஆனால், தமிழகத்துக்கு வந்த வீரமாமுனிவர் மட்டுமே, திருக்குறளை லத்தீன் மொழிக்கு எடுத்துச் சென்றார்.

அதன்பிறகே, தமிழகத்தில் அரிய சொத்தாக திருக்குறள் போன்ற நூல்கள் இருப்பதை, வெளிநாட்டறிஞர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். அதன்பிறகுதான், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 35-க்கும் மேற்பட்ட பதிப்புகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழை இந்தி அழித்துவிடும் என நடந்த பிரசாரத்தால், தமிழகத்தில் இந்தி கற்பது தடைபட்டது. இந்தி தமிழை அழித்துவிடும் எனக் கூறியே, இந்தி எதிர்ப்பு பிரசாரம் நடந்தது. ஆனால், தற்போது ஆங்கிலம்தான் தமிழை அழித்து வருகிறது. இந்தியை, நமது தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கற்றிருந்தார்கள் என்றால், இப்போது வடஇந்திய அரசியலில் மதிப்பு மிக்கவர்களாக தமிழர்கள் விளங்கி இருக்க முடியும். இந்தியை கற்காமல்போனது இழப்புத்தான்.

தற்போது திருக்குறள் உரை நூலில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி உரையைப் புகுத்தி இருப்பது சிறப்பாகும் என்றார் பாப்பையா.

நடிகர் கார்த்தி திருமணம்... முதல்வருக்கு நேரில் அழைப்பு.



முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

ஜூலை 3-ம் தேதி கோவையில் நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்துமாறு அழைப்பு விடுத்தனர்.

இச்சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கின் திருமணம் ஜூலை 3-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி வரும் ஜூலை 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டுமென சிவகுமார் குடும்பத்தினர் முதல்வருக்கு அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

இத்தகவல், தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு சூர்யா - ஜோதிகா திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தவரே ஜெயலலிதாதான். இப்போது கார்த்தி திருமணம் அல்லது வரவேற்புக்கு கட்டாயம் நேரில் வந்து வாழ்த்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறுது.

கிரிக்கெட் மட்டையால் அடித்து வாலிபர் கொலை தோல்வி அடைந்ததால் எதிர்அணியினர் ஆத்திரம்

கிரிக்கெட் மட்டையால் அடித்து வாலிபர் கொலை: தோல்வி அடைந்ததால் எதிர்அணியினர் ஆத்திரம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ராவூரி வான்ட்ல பள்ளி, நாராயணரெட்டி பள்ளி ஆகிய கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. இரு கிராமங்களைச் சேர்ந்த வீரர்கள் கிரிக்கெட் ஆடினார்கள்.

இதில் நாராயணரெட்டி பள்ளி அணி தோல்வி அடைந்தது. அந்த அணியின் கேப்டன் பிரதாப் ரெட்டி மற்றும் வீரர்கள் ராவூரிபான்ட்ல பள்ளி அணி வீரர் கேசவ ரெட்டியிடம் சென்று, நீ பந்து போடும் முறை சரி அல்ல. நீ பந்தை எறிவதால்தான் நாங்கள் “அவுட்” ஆனோம் என்றனர்.

அதற்கு அவர் நான் சரியாகத்தான் பந்து போட்டேன். உங்களுக்கு “பேட்டிங்” செய்ய தெரியவில்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதாப்ரெட்டி மட்டையால் கேசவ ரெட்டியை சரமாரியாகத் தாக்கினார். அப்போது அவரது அணியினரும் சேர்ந்து மட்டையால் அடித்தனர்.

இதில் மண்டை உடைந்து கேசவரெட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். இதுகுறித்து மதனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து நாராயணரெட்டி பள்ளி வீரர்களை தேடி வருகிறார்கள்.

வகுப்பறையில் கூச்சல் போட்டதால் 31 மாணவிகளின் கையை முறித்த ஆசிரியர் : டிஸ்மிஸ் செய்யகோரி பெற்றோர் போராட்டம்.

வகுப்பறையில் கூச்சல் போட்டதால்  31 மாணவிகளின் கையை முறித்த ஆசிரியர்: டிஸ்மிஸ் செய்யகோரி பெற்றோர் போராட்டம்

வகுப்பறையில் கூச்சல் போட்ட 31 மாணவிகளின் கையை முறித்தார் ஒரு ஆசிரியர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தேவலசெருவு பள்ளி கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு இந்தி ஆசிரியராக பணியாற்றுபவர் சந்திரசேகர். இவர் மாணவிகளிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வார்.

சின்ன தவறு செய்தால் கூட அடி பின்னி எடுத்து விடுவார். இந்த நிலையில் அவர் 7-ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றபோது, மாணவிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். இதனால் அங்கு ஒரே கூச்சலாக இருந்தது. இதைப் பார்த்ததும் அவர் ஆவேசம் அடைந்தார். பிரம்பை எடுத்து ஒவ்வொரு மாணவியாக அழைத்து கையில் சரமாரியாக அடித்தார்.

இதில் 31 மாணவிகளின் கை முறிந்து போனது. வலி தாங்காமல் அனைவரும் அலறித்துடித்தனர். இதை அறிந்ததும் அக்கம் பக்கத்து வகுப்பறைகளில் இருந்து ஆசிரியர்கள் ஓடிவந்தனர். பின்னர் மாணவிகள் அனைவரையும் மதன பள்ளியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ரேகா, மாதவி, காயத்ரி, ரேவதி ஆகிய 4 பேரின் கை எலும்புகள் உடைந்து நொறுங்கி உள்ளன. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 31 மாணவிகளின் கையை முறித்த ஆசிரியர் சந்திரசேகரை டிஸ்மிஸ் செய்ய கோரி பெற்றோர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மகனை நினைத்து கண்ணீர் விட்டபடி தவிக்கும் கனிமொழி.



திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, தனது மகனைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாராம். மகனை நினைத்து வாடி வரும் அவர் அவ்வப்போது கதறி அழுது விடுகிறாராம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகியுள்ள கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்து விட்டது. அதுவரை சற்று மனம் தளராமல் தைரியத்துடனும், புன்னகையுடனும் காணப்பட்ட கனிமொழி தற்போது கவலை படர்ந்த முகத்துடன் காணப்படுகிறாராம்.

உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்து விட்டதாலும், மகன் ஆதித்யாவைக் காண முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாலும், அவனை விட்டுப் பிரிந்து நீண்ட நாட்களாகி விட்டதாலும் பெரும் வருத்தத்திலும், துயரத்திலும் இருக்கிறாராம் கனிமொழி.

தனி செல்லில் தங்கியிருக்கும் கனிமொழி பெரும்பாலான நேரங்களை புத்தகம் படிப்பதிலும், எழுதுவதிலும் கழிக்கிறார். அவ்வப்போது கதறி அழுகிறாராம்.

அவரது முகம் சோகம் படர்ந்து காணப்படுவதாகவும், விரக்தியுடன் அவர் இருப்பதாகவும் சிறை வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அடிக்கடி அழுவதால் அவரது முகம் சோகமயமாக உள்ளதாக கூறும் அத்தகவல்கள், முன்பெல்லாம் அடிக்கடி பேசும் கனிமொழி தற்போது எப்போதாவதுதான் சக கைதிகள் அல்லது அதிகாரிகளுடன் பேசுகிறார். அப்படிப் பேசினாலும் தனது மகனைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறார் என்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவின் நிலை பரவாயில்லை என்கிறார்கள். அவர் தனது சூழ்நிலையை நன்குஉணர்ந்து புரிந்து அதற்குப் பழகிக் கொண்டு விட்டார். இயல்பான நிலையில் அவர் காணப்படுகிறார். உடற்பயிற்சி, இந்தி கற்பது, சக கைதிகளுடன் இணைந்து விளையாடுவது என்று சகஜமான நிலையில் தன்னை வைத்துக் கொண்டுள்ளார். இதனால் மன இறுக்கம் இல்லாமல் இயல்பான நிலையில் இருக்கிறார். ஆனால் கனிமொழியால் சிறை சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் அவர் உடைந்து போய்க் காணப்படுகிறார்.

கனிமொழிக்கு டிவியும், கேபிள் இணைப்பும் தரப்பட்டுள்ளது. அதில் 28 சேனல்கள் வருகின்றனவாம். அவ்வப்போது டிவியைப் பார்த்து பொழுது போக்கி வருகிறாராம் கனிமொழி. பெரும்பாலும் செய்திகளையே பார்ப்பாராம்.

திஹார் சிறையில் தனது மகள் உடலில் கொப்புளம் வந்து அவதிப்படுவதாகவும், மோசமான நிலையில் இருப்பதாகவும் திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் கூறியிரு்நதார். ஆனால் திஹார் சிறை செய்தித் தொடர்பாளர் சுனில் குப்தா இதுகுறித்து கூறுகையில், தேசிய மனித உரிமை ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை திஹார் சிறையின் சூழலை வெகுவாகப் பாராட்டியுள்ளன. சிறைக் கைதிகளின் அனைத்து அடிப்படைத் தேவைகள் குறித்தும் நாங்கள் பெரும் அக்கறை செலுத்தி வருகிறோம்.

எந்தக் கைதியாவது தனக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உடனடியாக உள்ளேயே உள்ள மருத்துவமனையை அணுகலாம். தேவைப்பட்டால் டாக்டர்கள் செல்லுக்கே நேரில் வந்தும் சிகிச்சை அளிப்பார்கள். இதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. தங்களுக்கு தேவையான மருந்துகளை கைதிகள் நேரடியாக டிஸ்பன்சரிக்குப் போய் வாங்கிக் கொள்ளவும் அனுமதி உள்ளது. கைதிகள் தங்களது மருத்துவத் தேவைகளை சிறைக் கண்காணிபப்பாளரிடம் தெரிவித்தால் அவர் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கனிமொழி ஒரு விசாரணைக் கைதி. விசாரணைக் கைதிகளுக்கு திஹார் சிறையில் எந்தக் கைத்தொழிலும் கற்றுத் தரப்படுவது இல்லை. எனவே கனிமொழி மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்கிறார் என்று மீடியாக்களில் வந்த செய்தி தவறு என்றார்.

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது : ஜெயலலிதா பேட்டி.



முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ஒரு தனியார் ஆங்கில சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு :-

கேள்வி:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை நிலவுகிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து. பிரதமர் ஏற்கனவே ஊழல் தடுப்பு சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவரை சி.பி.ஐ. விசாரிக்க முடியும். இந்த நிலையில், லோக்பால் விசாரணை வரம்புக்குள் அவரை சேர்த்தால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி, தன்னை தற்காத்துக்கொள்வதிலேயே அவர் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.

அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால், பிரதமரின் அதிகாரம் வலுவிழந்து விடும். அரசாங்கத்துக்கு நிகராக, நிழல் அரசாங்கம் உருவாக இது வழிவகுத்து விடும். பிரதமர் மீதான குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டால் கூட, அவரது பதவியின் அதிகாரம் வலுவிழந்து விடும். மேலும், இந்த மசோதாவை பயன்படுத்தி, வெளிநாடுகள் இந்தியாவை சீர்குலைக்கும் ஆபத்து உள்ளது.

இந்த விஷயத்தில், நான் தனிநபரை ஆதரிக்கும் நோக்கத்தில் இக்கருத்தை சொல்லவில்லை. பிரதமர் பதவி என்ற அமைப்புக்கு ஆதரவாகவே சொல்கிறேன். பிரதமராக இருப்பவர், முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால், அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. பிரதமரின் அதிகாரத்தை எதுவும் வலுவிழக்க செய்துவிடக்கூடாது. இருப்பினும், இந்த விவகாரத்தில், இறுதியான லோக்பால் வரைவு மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்கும்.

கேள்வி:- காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக கடந்த ஆண்டு அறிவித்தீர்களே?

பதில்:- காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக நான் கூறியது 2010ம் ஆண்டு இருந்த சூழ்நிலையின் அடிப்படையில்தான். அது ஒருமுறை கூறப்பட்ட வாய்ப்புதான். இப்போது அது இல்லை. 2010க்குப் பிறகு நிலைமை வெகுவாக மாறி விட்டது. அது அப்போது தரப்பட்ட ஒரு உறுதிமொழி, அது அந்த சமயத்துக்கு மட்டும் தெரிவித்த ஆதரவு. மத்திய அரசில் இருந்து தி.மு.க. வெளியேறினால், மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாக சொன்னேன். கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாக, அப்போதைய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறதோ என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவ்வளவுதான் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் அந்த ஆதரவை காங்கிரஸ் ஏற்கவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகுகூட, தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கேள்வி:- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பீர்களா?

பதில்:- சோனியாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி இன்னும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும்போது, அப்படி செய்வது முறையல்ல.

கேள்வி:- காங்கிரசுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா? ராகுல் காந்தி, பிரதமர் ஆக வாய்ப்புள்ளதா?

பதில்:- அந்த சூழ்நிலை வரும்போது, அதுபற்றி சொல்கிறேன். மாநில நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.

கேள்வி:- 3வது அணி ஏற்படுமா?

பதில்:- எதிர்கால அரசியல் சூழ்நிலை குறித்து இப்போதே கூற முடியாது. அரசியல் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படுவது சகஜம். பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி:- பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா?

பதில்:- எனக்கு அனைத்துக் கட்சிகளிலும் நல்ல நண்பர்கள் உள்ளனர்.

கேள்வி:- மத்தியில் மீண்டும் தனிக்கட்சி ஆட்சி வரும் என கருதுகிறீர்களா?

பதில்:- அதற்கான வாய்ப்பே இல்லை. ஒரு கட்சி ஆட்சி முறை முடிந்து போய் விட்டது. எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறும் என நான் கருதவில்லை. எதிர்காலத்திலும் கூட்டணி ஆட்சிகள்தான் வரும்.

கேள்வி:- தயாநிதி மாறன் நீக்கப்பட வேண்டுமா?

பதில்:- அதை பிரதமர்தான் சொல்ல வேண்டும். ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டியது, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது பிரதமரின் கடமையும், பொறுப்புமாகும். அதை அவர் செய்ய வேண்டும்.

கேள்வி:- ப.சிதம்பரம்?

பதில்:- ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் வெல்லவே இல்லை. அவர் மோசடியான முறையில் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இது நாட்டுக்கே தெரியும். நாட்டை அவர் மோசடி செய்து விட்டு பதவியில் அமர்ந்துள்ளார். அவர் பதவியில் நீடிப்பது சரியல்ல, பொருத்தமானதல்ல, நியாயமானதல்ல என்றார் ஜெயலலிதா.

கேள்வி:- தேசிய அரசியலில் ஈடுபடுவீர்களா?

பதில்:- அத்தகைய விருப்பம் ஏதும் இல்லை. ஆனால் எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன். வாழ்க்கையை அது வரும் வகையிலேயே ஏற்றுக்கொள்வேன். அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்றோ நான் ஒருபோதும் எண்ணியது இல்லை. ஆனால் எப்படியோ ஆகிவிட்டேன்.

கேள்வி:- உங்கள் லட்சியம் என்ன?

பதில்:- இந்தியா, சூப்பர் பவர் ஆக வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற் கான செயல்திறன் நமக்கு உள்ளது. அதற்காக, வலிமையான, தேசபக்தி கொண்ட தலைவர் நமக்கு வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

பூமிக்கு மிக அருகில் வரும் பஸ் அளவு “கிரகம்” இன்று மாலை கடந்து செல்கிறது.

பூமிக்கு மிக அருகில் வரும் பஸ் அளவு “கிரகம்”: இன்று மாலை கடந்து செல்கிறது

விண்வெளியில் 10 மீட்டர் சுற்றளவு கொண்ட சிறு கிரகம் ஒன்று இருப்பதை சமீபத்தில் மெக்சிகோ நாட்டின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது கண்டுபிடித்தனர். இந்த புதிய கிரகத்துக்கு அவர்கள் 2011 எம்.டி. என்று பெயரிட்டுள்ளனர்.

ஆம்னி பஸ் அளவுக்கு இருக்கும் இந்த குட்டி கிரகம், பூமியை சுற்றி வர 396 நாட்கள் எடுத்துக் கொள்வதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த குட்டி கிரகம் இன்று (திங்கள்) பூமிக்கு மிக, மிக அருகில் வர உள்ளது.

இன்று பிற்பகல் இந்த கிரகம் பூமியில் இருந்து 7 ஆயிரத்து 500 மைல் தொலைவுக்குள் நெருங்கி வர உள்ளது. இன்று மாலை 6.56 மணிக்கு அந்த குட்டி கிரகம் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி அருகில் வந்து கடந்து செல்லும்.

பூமிக்கு அருகில் வரும் இந்த குட்டி கிரகத்தால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் வராது என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஒரு வேளை அந்த கிரகம் பூமியின் ஈர்ப்பு சக்தி பகுதிக்குள் வந்து விட்டால், பூமியின் சீதோஷ்ண நிலைக்கு தாக்குபிடிக்க முடியாமல் எரிந்து சாம்பலாகி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. இனி இந்த குட்டி கிரகம், 2023-ம் ஆண்டு மே மாதம் 10-ந் தேதி பூமிக்கு மிக நெருக்கமாக வரும்.