தமிழகத்தில் 2011-12 நடப்புக் கல்வி ஆண்டில் தேனி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
2006-ம் ஆண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்ட தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் திங்கள்கிழமை ஜூன் 27 அன்று அங்கீகாரம் அளித்து விட்டது. எனவே நடப்புக் கல்வி ஆண்டிலும் தொடர்ந்து இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 100 மாணவர்களைச் சேர்ப்பதில் இனி எந்தவித பிரச்னையும் இருக்காது.
கடந்த கல்வி ஆண்டில் (2010-11) 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்ட திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு தொடர்ந்து 2014-15-ம் கல்வி ஆண்டு வரை தமிழக அரசு ஒப்புதல் பெற வேண்டியிருக்கும். அதன் பிறகு இந்தக் கல்லூரியும் அங்கீகரிக்கப்படும்.
பெற்றோர், மாணவர்களுக்கு நிம்மதி: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கத்தில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது.
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், தேனி-திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒப்புதல் கிடைத்து 17 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுமா என்ற சந்தேகம் பெற்றோர்-மாணவரிடையே இருந்து வந்தது.
இப்போது தேனி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விட்டதால், 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுவது உறுதியாகி பெற்றோரும் மாணவர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கல்விக் கட்டணம் ரூ.4,000 உள்பட ஆண்டுக் கட்டணமாக ரூ.12,290 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment