Saturday, July 2, 2011

மாற்று திறனாளிகள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு இடம் கேட்டு, மணிக்கட்டு வரையே கை உள்ள மாணவி வழக்கு.

மாற்று திறனாளிகள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு இடம் கேட்டு கைவிரல் இல்லாத மாணவி வழக்கு: ஒரு இடத்தை காலியாக வைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

திண்டுக்கல் சித்துவாத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மகள் வானதி(வயது 18).

இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது இடது கை, மணிக்கட்டு வரையே உள்ளது. விரல்கள் எதுவும் கிடையாது. இதனால் எனக்கு 60 சதவீதம் ஊனம் என்று மருத்துவக்குழு சான்று அளித்துள்ளது. நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் நான் 1139 மதிப்பெண்கள் பெற்றேன். மருத்துவ படிப்புக்கு கட்- ஆப் மதிப்பெண் 191 வைத்துள்ளேன்.

நான் எனது அன்றாட வேலைகளை நானே செய்து கொள்கிறேன். பள்ளிக்கு சைக்கிளில் சென்றுதான் படித்து வந்தேன். எனக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தேன்.

ஆனால் எனது விண்ணப்பத்தை மருத்துவக் கல்வி தேர்வுக்குழு நிராகரித்தது. காரணம் கேட்டபோது, இடுப்புக்கு கீழே ஊனம் இருந்தால் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்று விதி இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த விதி மாற்றுத் திறனாளிகள் சட்டத்துக்கு எதிரானதாகும். நான் மருத்துவ படிப்பை முடிக்கும் பட்சத்தில், என்னால் நோயாளிகளை பரிசோதிக்க முடியும். எனது கைகளில் உணர்ச்சி உள்ளது. இந்த விதியால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். அதுபோன்று விதியை உருவாக்க மருத்துவ கல்வி இயக்குனரகம், மருத்துவக்கல்வி தேர்வுக் குழுவுக்கு எந்த அதிகாரமும் வழங்கவில்லை.

எனவே அந்த விதி சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும்வரை எம்.பி.பி.எஸ் படிப்பில் ஒரு இடத்தை எனக்காக காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் நிர்மலாராணி ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்காக எம்.பி.பி.எஸ் படிப்பில் ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக்கல்வி இயக்குநர், மருத்துவக்கல்வி தேர்வுக்குழு தலைவர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

No comments: